Friday, 1 January 2016

ஞானப்பானா – கிருஷ்ண கீதை 18

ஞானப்பானா – கிருஷ்ண கீதை 18

அத்தியாயம் 18 ஒன்றும் மூன்றும் -3


கிருஷ்ண கிருஷ்ணா ! முகுந்தா!ஜனார்தனா!

கிருஷ்ணா! கோவிந்தா! நாராயாண ! ஹரே!

அச்யுதானந்தா! கோவிந்தா! மாதவா!

ஸச்சிதானந்தா ! நாராயண! ஹரே


மூன்னுமொன்னிலடங்குன்னு பின்னெயும்

ஒன்னுமில்லபோல் விசுவமன்னேரத்து

முன் அத்தியாயத்தில் பிரகிருதியின் முக்குணங்களால் தேஹி தேஹத்துடன் பந்திக்கப்படுகிறான்; அப்பொழுது அவனில் ஏற்படும் மாற்றங்கள் வெறும் மாயத்தோற்றங்களே என்ற்றியாத ஜீவாத்மாக்கள் அவித்யையில் கட்டப்பட்டு அஞ்ஞானத்தில் உழலுகிறார்கள் என்று கண்டோம். அதற்கு சான்றாக பகவத் கீதையிலிருந்து சில மேற்கோள்கள் காட்டினோம். அந்த வியாக்கியானத்தை தொடருவோம்.
பிரகிருதியின் முக்குணங்கள் எனப்படும் சத்வம், ரஜஸ், தமஸ் இவைகளின் தன்மை என்ன என்று சற்றே பார்ப்போம்.
முதலில் சத்துவ குணத்தைக் குறித்து அறிந்து கொள்வோம்.
பகவத் கீதை 14 ஆம் அத்தியாயம்- குணத்ரய விபாக யோகம் சுலோகம் ஆறில் பகவான் கிருஷ்ணர் கூறுவார்:

                                          तत्र शत्वम् निर्मलत्वात्प्रकाश्कमनामयम् !

                                          शुखशन्गेन बन्धाति झ्नशन्गेन चानक !!

                                          தத்ர ஸத்வம் நிர்மலத்வாத்ப்ரகாசகமனாயம் !

                                          ஸூகஸ்ங்கேன பத்னாதி ஞானஸங்கேன சானக !!

“ ஸத்துவ குணமானது களங்கமில்லாததும் ஒளி பொருந்தியதுமாக காணப்படுகிறது. அது எதற்கும் இடைஞ்சல் கொடுக்காததும் சுகபற்றுதலாலும் ஞானப்பற்றுதலாலும் தேஹியை தேஹத்துடன் பிணைக்கிறது”.
சத்துவகுணம் படைத்தவர்கள் அழுக்கு படியாத தூய கண்ணாடிக்கு ஒப்பாவார்கள். அப்படிப்பட்ட கண்ணாடி எவ்வாறு ஒளியை கடத்தி விடுமோ அதுபோல் சுயம்பிரகாசமானது. ஆகவே சத்துவகுண்முடையவர்கள் ஆத்மாவை எளிதில் அடையாளம் காண்கிறார்கள். பொருள்கள் அதன் மூல நோக்கும் பொழுது அவையின் உண்மை உருவத்திலே தெரிகிறது. அவை தரும் சுகமும் புலனாகிறது. அப்படிப்பட்ட சுகப்பற்று ஞானத்தை தேடி செல்லவைக்கிறது.
ரஜோகுணமோ ஆசையை வளர்க்கிறது. அது ஒருவனை எப்பொழுதும் வினை ஆற்றத் தூண்டுகிறது. வினை ஆற்றுவதற்கான தூண்டுதல் அவனை இஹலோகத்துடன் வலுவாக பிணைக்கிறது.
கீதையில் பகவான் சொல்லுவார்:

        ரஜோ ராகாத்மகம் வித்தி த்ருஷ்ணாஸங்கஸமுத்பவம் !

        தன்னிபத்னாதி கௌந்தேய கர்மஸங்கேன தேஹினம்  !!

ரஜோகுணம் ஆசையை வடிவெடுத்து முடிவில்லாத பிரவிருத்தியை உண்டு பண்ணுகிறது. அடையாத பொருளை அடைய வேண்டுமென்றுள்ள வேட்கை; அடைந்த பொருளை இழக்காமலிருக்க வேண்டுமென்றுள்ள வேட்கை; எரிகின்ற நெருப்பில் விறகை போடப்போட விறகை சாம்பலாக்கி இன்னும் வேண்டும் என்ற ஆசையை தூண்டும்.ஆத்மாவை கர்ம்ம் செய்யவைப்பதன் மூலம் ‘கர்த்ரு’ மனோபாவத்தை உண்டு பண்ணுகிறது ரஜோகுணம்.
தமோகுணமோ சோம்பலை உளவாக்கி மயக்கத்தில் ஆழத்துகின்றது.அது அஞ்ஞானனத்திலிருந்து உண்டாகின்றது.அது விவேகத்தை மறைக்கின்றது. ரஜோ குணம் வேகத்தின் மூலம் விவேகத்தை மறைக்கின்றது; தமோகுணம் ஜடத்தன்மை அல்லது வேகமின்மை மூலம் விவேகத்தை அழிக்கின்றது.
                                                                      ‌तमस्थ्वज्नानजम् विद्धि मोहनम् शर्वतेहीनाम् !
                                   प्रमादालस्यनिद्राभिभिस्तन्निब्न्धाति भारत !

         தமஸ்த்வக்ஞானஜம் வித்தி மோஹனம் ஸர்வதேஹீனாம்!

                                                                                     ப்ரமாதாலஸ்யனித்ராபிஸ்தன்னிபத்னாதி பாரத !

                                                     ப.கீ 14 -8
இந்த மூன்று குணங்களில் எது முந்தி நிற்கின்றதோ அதற்கேற்றார்போல் ஜீவாத்மாவின் கர்மங்கள் அமைகின்றன. சத்துவகுணம் மேலோங்கி நிற்கின்ற ஜீவாத்மா விழித்திருக்கின்ற பொழுதும் அமைதியே வடிவமாக இருக்கின்றது. அது ஞானத்தை எளிதாக தேடி செல்கிறது.
ரஜோகுணம் தலையெடுக்கும்பொழுது ஜீவாத்மா வித விதமான கர்மங்களில் ஈடுபடுகிறது;ஆதனால் பௌதிக பொருள்களுடன் அவனுக்குள்ள பந்தம் மேலும் இறுக்கமாகிறது. அவ்வளவு சுலபமாக அந்த பந்தங்களை அறுத்தெறிந்து விட்டு ஞானத்தை தேடி செல்ல முடிவதில்லை.எல்லாவற்றின்மீது தான் ஆட்சி செய்யவேண்டும் என்ற அவா உளவாகிறது; அதற்காக மேலும் மேலும் வினை ஆற்ற வேண்டி வருகிறது.
தமோ குணம் ஓங்குமிடத்து ஜீவாத்மா எதையும் கற்றுக்கொள்ள இயலாத நிலைக்கு தள்ளப்பட்டு சதாகாலமும் சோம்பலாக இருக்கிறது. ஞானத்தை அடைவதற்கு விடா முயற்சி வேண்டும்.அது தமோ குணம் படைத்த ஜீவாத்மாக்களால் இயலாத காரியமாகிறது.  ஒரே மனிதனில் இந்த மூன்று குணங்களும் ஒரே நாளில் வெவ்வேறு நேரங்களில் முன்னுக்க்கு வருவதும் உண்டு.ஜாக்ரத்தில் ரஜோ குணமும் சத்துவ குணமும் காணப்படுகின்றது. ஸ்வப்னாவஸ்தையில் ரஜோகுணம் மட்டும் ஓங்கி நிற்கிறது.சுஷுப்தியில் தமோ குணத்தின் தாக்கத்தால் ஒரு வினையும் தென்படுவதில்லை.
கீதையில் பகவான் சொல்லுவார்:

                                    रजश्तमश्चाभिभूय सत्वम् भवति भारत !

                                    रज: सत्वम् तमश्चैव तम: सत्वम्रजस्ततथा !

                                    ரஜஸ்தமஸ்சாபிபூய ஸத்வம் பவதி பாரத !

                                    ரஜ: ஸத்வம் தமஸ்சைவ தம: ஸத்வம் ரஜஸ்ததா !!


ரஜோகுணத்தின் வெளிப்ப்டுதல் எப்படியறியமுடியும்?
கீதை பதில் சொல்லுகிறது:

                                    लोभ: प्रव्रुत्तिरारम्भ: कर्मणामशाम: स्प्रुहा !

                                    रजस्येतानि जायन्ते विव्रुद्दे भरतरषभ !!

லோப: ப்ரவ்ருத்திராரம்ப: கர்மணாசம: ஸ்ப்ருஹா

ரஜஸ்யேதானி ஜாயந்தே விவ்ருத்தே பரதர்ஷப!!

பேராசை,இடைவிடாத பிரவிருத்தி, கர்மங்களின் நெருக்குதல், ஒருவிதமான அமைதின்மை, நிதானமற்ற பொக்கு, இவை ரஜோகுணத்தின் வெளிப்பாடுகளாகும்.பிறர் பொருள்களை தனதாக்கிக்கொள்ளவேண்டும் என்ற மோஹம் லோபம் எனப்படுகிறது. வருகிறது..திரியங்களின் தூண்டுதலின் பேரில் வெளியுலக விவகாரங்களில் ஈடுபட வேண்டி வருகிறது.அம்மாதிரியான கர்மங்கள் பிரவிருத்தி எனப்படுகிறது. கர்மங்கள் தனித்து வருவதில்லை. அவை முடிவில்லாத தொடர் சங்கிலி போல் வருகிறது. இந்த கருமங்கள் வெற்றி தோல்வி, விருப்பு- வெறுப்பு, இன்பம்- துன்பங்களுக்கு வழி வகுக்கின்றது. இவையெல்லாம் ரஜோகுணத்தின் அறிகுறிகளும் விளைவுகளுமாகும்.
                                अप्रकाशोअप्रव्रित्तिश्च प्रमादो मोह एव च !
                        तमस्येतानि जायन्ते विव्रुद्धे कुरुनन्दन् !

             அப்ரகாகாசோஅப்ரவ்ருத்திஸ்ச ப்ரமாதோ மோஹ ஏவ ச !

              தமஸ்யேதானி ஜாயந்தே விவ்ருத்தே குருனந்தன் !!

விவேகமின்மை,,முயற்சியின்மை  தவறிழைத்தல்,மதிமயக்கம் ஆகியவை தமோகுண லட்சணங்கள். தமோ குணத்தால் மனம் இருளடைந்துவிடுகிறது.
சத்துவ குணம் மேலோங்கியுள்ள ஜீவாத்மாக்கள் ஞானத்தை தேடி போகின்றன; ஆசையை அடக்குகின்றன; ரஜோகுணம் இந்த ஞான வேட்கையை பௌதிக சுகங்களுக்கான ஆசையாக மாற்றி வினையாற்ற தூண்டுகின்றன. தமோகுணம் ஜீவாத்மாவை நிஷ்க்ரியமாக்கி—செயலிழக்க செய்து ஞானத்தை அடைய விடாமல் தடுக்கின்றது.
இத்தேகத்தின் எல்லா இந்திரியங்களும்  ஞானஒளியை நோக்கி திருப்பி விடப்படுகின்றனவோ அப்பொழுது ஸத்துவம் மேலோங்கி இருக்கிறது என்று பொருள். அந்த நிலையில் ஆத்மா பிரகாசமாக ஒளிர்கிறது. அந்த பிரகாசத்தில் இந்த மாயா பிரபஞ்சம் மறைந்து ஆத்ம- சாக்ஷாத்காரம் நிகழ்கிறது.
பகவான் கிருஷ்ணர் பகவத் கீதையில் கூறுகிறார்:
                                नान्यम् गुणेभ्य: कर्तारम् यदा द्रुश्तानुप्श्यति !
                            गुणेभ्यश्च परम् वेद्ति मद्भावम् सोतिकच्चति !!

                         நான்யம் குணெப்ய: கர்தாரம் யதா த்ரஷ்டானுபஸ்யதி !

                   குணேப்யஸ்ச பரம் வேத்தி மத்பாவம் ஸோஅதிகச்சதி !!

                                                ப்.கீ அத்14 சு 19
எப்பொழுது ஜீவாத்மா குணங்களுக்கு வேறான கர்த்தாவைக் காண்பதில்லையோ, அதாவது எல்லா குணங்களுக்கும் அதீதமான பரம புருஷனைக் காண்கிறானோ அப்பொழுது முக்தனாகிறான்.அவனே பிரம்ம சொரூபமாகிறான்.அதாவது இந்த மூன்று குணங்களுமே பிரகிருதியினுடையது; ஆகவே நடக்கின்ற எந்த நிகழ்விற்கும் தான் கர்த்தா அல்ல; இந்திரியங்கள். , இந்திரியார்த்தங்கள் எல்லாமே அந்த பிரகிருதியினிலிருந்து உண்டானவை; முக்குணங்களுக்கும் அப்பாலுள்ள பிரம்மத்தை உணர்ந்து விட்டால் அங்கு வேறொன்றுமிராது; சத்- சித்- ஆனந்தம் மட்டுமே இருக்கும்.மூன்றும் மறைந்து ஒன்றாகிவிடும்.பிரகிருதியினால் சிருஷ்டிக்கப்பட்ட பிரபஞ்சமும் மறைந்து விடும் .பிரம்மமோ  எந்த செயலுக்கும் கர்த்தாவுமல்ல; வெறும் சாக்ஷி மாத்திரம் தான்.
இதையே தான் பூந்தானமும் கூறுகிறார்

மூன்னுமொன்னிலடங்குன்னு பின்னெயும்

ஒன்னுமில்லபோல் விசுவமன்னேரத்து

மூன்றும் மறைந்து ஒன்றாய் நிற்கும்.பின் விசுவமும் என்ற ஒன்றே இல்லாதது போலாகிவிடும்.
மீண்டும் மூன்று ஒன்றாகின்ற விந்தையை அடுத்த அத்தியாயத்தில் டொடருவோம். அதுவரை பாடுவோம்.

கிருஷ்ண கிருஷ்ணா ! முகுந்தா!ஜனார்தனா!
கிருஷ்ணா! கோவிந்தா! நாராயாண ! ஹரே!
அச்யுதானந்தா! கோவிந்தா! மாதவா!
ஸச்சிதானந்தா ! நாராயண! ஹரே


ஞானப்பானா – கிருஷ்ண கீதை 17

ஞானப்பானா – கிருஷ்ண கீதை 17

அத்தியாயம் 17 ஒன்றும் மூன்றும் -2

கிருஷ்ண கிருஷ்ணா ! முகுந்தா!ஜனார்தனா

கிருஷ்ணா! கோவிந்தா! நாராயாண ! ஹரே!

அச்யுதானந்தா! கோவிந்தா! மாதவா!

ஸச்சிதானந்தா ! நாராயண! ஹரே


மூன்னுமொன்னிலடங்குன்னு பின்னெயும்

ஒன்னுமில்லபோல் விசுவமன்னேரத்து

 


முன் அத்தியாயத்தில் மூர்த்தி த்ரயத்தையும் முப்பெரும் தேவிகளைக் குறித்தும் விளக்கினோம். தேவனான பரபிரம்ம்மும் பிரகிருதியும் சேரும் பொழுது பிரபஞ்சம் உண்டாகிறது என்று சொல்லக் கண்டோம்..அதில் ஆதி பிரகிருதி  ஜலரூபத்தில் இருக்கின்றபொழுது புருஷனாகிய பரமனின்  பீஜம் விழுவதன் மூலம் ‘அண்டம்” –கரு உருவாகிறது. அந்த அண்டத்திலிருந்து ஆதி சிருஷ்டிகர்த்தாவான பிரம்மா தோன்றுகிறார். பிறகு பிரம்மா இந்த பிரபஞ்சத்தை சிருஷ்டிக்கிறார். இந்த விவரங்கள் மனுஸ்மிருதியில் கீழ்க்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.

                     ஸோஅபித்யாய சரீரால் ஸ்வால்                                                                                        ஸிஸ்ருக்ஷுர்விவிதா: ப்ரஜா:

                     அப ஏவ ஸ்ஸர்ஜ்ஜாதௌ

                     தாஸு பீஜமவா ஸ்ருஜல்.

                      த்தண்டமபவத்தைம்ம்

                     ஸஹஸ்ராம்சுஸமப்ரபம்

                    தஸ்மிஞ்சஞ்ச ஸ்வயம் பிரம்மா

                   ஸர்வலோகபிதாமஹ:

                                     (மனுஸ்ம்ரிதி 1-8-9)
“ புருஷோத்தமன் தியானம் செய்து தனது உடலிலிருந்து பல உயிரினங்களை தோற்றுவிக்கும் எண்ணத்துடன் முதலில் ஜலத்தை உற்பத்தி செய்தார்.
அது  தங்க நிறத்தோடுகூடிய சூரியனின் ஒளியுடன் கூடிய ஒரு அண்டமாக உருவெடுத்த்து. அதிலிருந்து சகல பிரபஞ்சத்தின் பிதாமஹனான பிரம்மா தோன்றினார்.”
இங்கு ஜலம் என்று கூறியிருப்பது மூலபிரகிருதியைக் குறிக்கிறது. அவ்வாறு புருஷனும் பிரகிருதியும் சேர்ந்து பிரம்மா தோன்றினார்.
பிரபஞ்சத்தின் பரிணாம வளர்ச்சி விஷ்ணு புராணத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. முதலில் ஜட வஸ்துக்களும் பிற்பாடு, தாவர வர்க்கமும் உருவாயின. மூன்றாவதாகத்தான் மனிதனல்லாத ஜீவராசிகள் தோன்றின.கடைசியாகத்தான் மனிதன் தோன்றினான். கல்பாந்தரங்களில் உளவான விசித்திரங்களின் பயனாக இந்த நியதி இப்பொழுதும் மாறுபடுகின்றன. புதிய புதிய செடிகொடிகளும் உயிரினங்களும் இன்னும் அவ்வப்பொழுது தோன்றுகின்றன.
ஐதரேய ப்ராம்மணத்தில் இந்த பரிமாண வளர்ச்சியை விவரமாக விளக்கியுள்ளார்கள் நமது ஆசாரியர்களும் முனிவர்களும்.

    ஆத்மானமாவிஸ்தாராம்  வேதக்னதே ஹாவிர்பூய:

   ஓஷதிவனஸபதயோ யச்ச  கிஞ்ச ப்ராணப்ருல் ஸ ஆத்மான்மாவிஸ்தாராம் வேத:

    ஓஷதி வனஸ்பதிஷு ஹி ரஸோ த்ருஸ்யதே

   சித்தம் ப்ராணப்ருல்ஸு, ப்ராணப்ருல்ஸு த்வேவாவிஸ்தார்மாத்மா

    தேஷு ஹி ரசோஅபி த்ருஸ்யதே- ந சித்தமிதரேஷு

    புருஷே த்வேவாவிஸ்தராத்மா ஸ ஹி ப்ராஞ்சானே சம்பன்னதம: 

   விஞ்ஞானம் வத்தி விஞ்ஞதம் பஸ்யதி- வேத ஸ்வஸ்தனம்- வேத லோகாலோகௌ

        ர்த்த்யேனாம்ருதம் ஈப்ஸதி ஏவம் ஸம்பன்ன:-அதேதரேஷாம் பசுனாமசனாபிபாஸே

   ஏவாபிவிஞ்ஞ்சானம் -ந விஞ்சஞ்சாதம் வதந்தி-

     ந விஞ்சாஞ்சாதம் பஸ்யந்தி ந விது: ஸ்வஸ்தனம் ந லோகாலோகௌ

  த ஏதாவந்தோ பவந்தி-யதா ப்ரஞ்சாஹி ஸம்பவா:

                             
‘அவர்—பரமபுருஷன்- தோன்றியதை யாதொருவன் ஆத்மாவாக உணருகிறானோ, அவன் பரமானந்த்த்தை அடைகிறான். செடிகொடிகள், மற்றும் எல்லா உயிரின்ங்களும் ஆத்மாவின் உருவகங்களே என்று அவன் அறிகிறான். தாவர வர்க்கங்களில் சக்தி நீர் ரூபத்தில் -ரசமாக- காணப்படுகிறது. உயிருள்ளவையில் எல்லாம் மனம் தோன்றுகிறது; ஆத்மாவும் தோன்றுகிறது.;ரசமும்( சக்தியு) காணப்படுகிறது.ஆனால் மனித ஜாதியில் மனம்     மிகவும் சக்தி வாய்ந்த்தாக அமைகிறது.அறிவும்-ஞானமும் அவனில் மிகுந்து காணப்படுகிறது. அவன் அறிவதை அவன் சொல்ல முடிகிறது; அவன் அறிவதை அவன் காண முடிகிறது; நேற்று நடந்தவையை அவனால் நினைந்து கூற முடிகிறது;திருசியங்களையும்—காண்பதையும், அதிருசியங்களையும் – காணாதவையையும் அவன் அறிகிறான்.மரணம் உறுதி என்பதால் மரணமின்மையை விரும்புகிறான்.மற்ற உயிரினங்களுக்கு பசியும் தாகமும் மட்டும் தான் உண்டு.மனிதனுக்கோ ஞானம் –அறிவு என்ற ஒன்று அதிகமாக உள்ளது.மற்ற உயிரினங்களால் அறிந்ததை சொல்லமுடிவதில்லை; அறிவதை அவை காண்பதில்லை; நேற்று நடந்தவை அவைகளின் நினைவில் இருப்பதில்லை;திருசியாதிருசியங்களை அவைகள் அறிவதில்லை.. அறிவு அளவிற்கேற்ப  அமைகிறது ஜன்மங்கள்.”
ஐதரேண்யகம் 2-3-2   
இவ்வாறு தோன்றிய மனித ஜீவராசிகளில் அந்தர்யாமியாக குடிகொண்டுள்ள பரமபுருஷன் பௌதிக தேகத்துடன் பந்திக்கப் படும்பொழுது தேகி என்ப்படுகிறான்.
பகவத் கீதை13 ஆம் அத்தியாயம் முதல் சுலோகத்தில் பகவான் கூறுகிறார்:

                              इदम् शरीरम् कौन्तेय क्षेत्रमित्यमिधीयते !

                              एतयो वेत्ति तम् प्राहू: क्षेत्रन्ज इति तद्दिविदा:  !

இதம் சரீரம் கௌந்தேய க்ஷேத்ரமித்யபீதியதே !

ஏதத்யோ வேத்தி தம் ப்ராஹூ: க்ஷேத்ரஞ இதி த்த்வித: !

‘ குந்திபுத்ரா, இவ்வுடல் க்ஷேதிரம் எனப்படுகிறது.இதை அறிகிறவனை க்ஷேத்திரஞன் என்று ஞானிகள் சொல்லுகிறார்கள்.”
க்ஷேத்திரம் என்றால் எது கெட்டு போகாமல் காப்பாற்றப் பட வேண்டியுள்ளதோ அது என்று பொருள்.அதன் இன்னொரு பொருள் ‘வயல்’. வயல் உழைப்பிற்கேற்ற விளை தரும்.பூமியில்-வயலில்- நல்லதும் விளையும்; கெட்ட்தும்- உபயோகமற்றதும் விளையும்.வினை விதைத்தால் வினை விளையும்; தினை விதைத்தால் தினை விளையும். பலன் கர்மங்களைப் பொறுத்து இருக்கும். அது போல் எவ்விதம் நாம் நமது உடலாகப்பட்ட க்ஷேத்திரத்தை பயன்படுத்துகிறோமோ அதற்கேற்ற பலன் கிடைக்கும் .நம் உடல் எனும் க்ஷேத்திரத்தில் மனம், புத்தி, இந்திரியங்கள் என்பவை உள்ளன. அவைகளை நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோமோ அதற்கு தகுந்த பலன் கிடைக்கும்.
அடுத்த சுலோகத்தில் பகவான் சொல்லுகிறார் எல்லா க்ஷேத்திரங்களிலும் பரமாத்மா எனும் க்ஷேத்திரஞனே குடியிருக்கிறான்.இந்த அறிவே ஞானம் எனப்படுகிறது.
க்ஷேத்திரம் எனும் உடல் பிரகிருதியைக் குறிக்கிறது.க்ஷேத்திரஞன் எனும் பரமாத்மா பரம புருஷனைக் குறிக்கிறது.பிரகிருதியின் சேர்க்கையால் ஏற்படும் குண மாற்றங்களை எப்பொழுது புருஷாத்மா தனது என்று எண்ண ஆரம்பிக்கிறானோ அப்பொழுது அவன் ஜீவாத்மா ஆகிறான்.பிரகிருதி பேதம் எண்ணிலடங்கா; ஆகவே ஜீவாத்மாக்களும் எண்ணிலடங்காத வேற்றுமைகளுடன் காணப்படுகிறது.பிரகிருதியுடன் சேர்ந்திருந்து அதன் குண நலங்களால் பாதிக்கப்படாத ஜீவாத்மாக்கள் முக்தர்கள்.
அதே அத்தியாயத்தில் பகவான் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்:
शत्वम् रजश्तम इति गुणा: प्रक्रुतिशम्बवा:  !
निबत्नन्ति महाबाहो देहे देहिनमव्ययम्.!!

:              ஸத்வம் ரஜ்ஸ்தம இதி குணா: ப்ரக்ருதிஸம்பவா: !

             நிபத்ன்ந்தி   மஹாபாஹோ தேஹே தேஹினமவ்ய்யம் !!

“ பெருந்தோளுகளுடைய அர்ஜுனா, பிரகிருதியிலிருந்து உளவாகின்ற சத்வம்,ரஜஸ், தமோ குணங்கள் அழிவற்ற தேஹியை தேஹத்துடன் பிணைக்கின்றன.”
பிரகிருதி முக்குணங்களையுடைது என முன்னொரு அத்தியாயத்தில் குறிப்பிட்டிருந்தோம். ஆனால் பிரகிருதி வேறு, இந்த குணங்கள் வேறல்ல.உஷ்ணமும் அக்னியும் எப்படி வேற்படுத்தி பார்க்க முடியாதோ அதே போல் பிரகிருதியையும் அதன் குணங்களையும் வேறுபடுத்த இயலாது..இந்த குணங்களால் க்ஷேத்திரஞனான பரமாத்மா பாதிக்கப்படுவதில்லை. ஆனால் ஜீவாத்மா பதிக்கப்பட்டது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்குகிறது. அது ஒரு மாயத் தோற்றம்.நீரில் தெரிகின்ற சூரியனின் பிரதி பிம்பம் நீர் அசையும் பொழுது அசையும்; ஆனால் சூரியன் அசைவதில்லை.அதே போல் ஜீவாத்மா பிரகிருதியின் குணங்களில் கட்டுப்பட்டுள்ளது போல் தோன்றுகிறது. அந்த உண்மையற்ற நிலையை உண்மை என்று எண்ணி கர்மம் இயற்றும்பொழுது அதன் பலன்கள் ஜீவாத்மாவை பாதிக்கின்றது.
இதைத் தான் பகவான் கிருஷ்ணர் பகவத் கீதையின் மூன்றாம் அத்தியாயம் 25 ஆம் சுலோகத்தில் கூறினார்:                          

                        प्रक्रुते: क्रियमाणानि गुणैइ: कर्माणि सर्वच: !

                        अहन्गारविमूदात्मा कर्ताहमिति मन्यते !!

                                    ப.கீ. அத் 3 சுலோ 26

               ப்ரக்ருதே: க்ரியமாணானி குணை: கர்மாணி ஸர்வாச: !

              அஹங்காரவிமூடாத்மா கர்தாஹமிதி மன்யதே !!

பிரக்ருதியின் குணங்களால் ஜீவாத்மா பாதிக்கப்படுகிறது. .ஜீவாத்மா கர்மங்கள் செய்யத் தூண்டப்படுகிறது.. கர்மங்கள் ஆற்றப்படுன்றபொழுது நம்முள் ஜனிக்கும் ‘அஹம்’ என்ற உணர்வு நாம் தான் கர்மங்கள் இயற்றுகிறோம் என்று எண்ணத் தோன்றுகிறது. அந்த ‘கர்த்ருத்வ’ மனோபாவம் தான் கர்மபலங்களின் ஊற்றுக்கண். இந்த நேரத்தில் ப்ரகிருதி வேறு, நிஜமான ‘நான்’ வேறு என்று உணராத நிலைமை ஏற்படுகிறது.அஞ்ஞானத்தின் ஆரம்பம் உதயமாகிறது. ‘தனக்கு’ அன்னியமான ஒன்றை ‘தனது’ என்ற எண்ணம் தான் அஹங்காரம். மேலும் பார்ப்போம் அடுத்த அத்தியாயத்தில்.
அதுவரை பாடுவோம்:
கிருஷ்ண கிருஷ்ணா ! முகுந்தா!ஜனார்தனா!
கிருஷ்ணா! கோவிந்தா! நாராயாண ! ஹரே!
அச்யுதானந்தா! கோவிந்தா! மாதவா!
ஸச்சிதானந்தா ! நாராயண! ஹரே











ஞானப்பானா ---கிருஷ்ணகீதை 16

ஞானப்பானா ---கிருஷ்ணகீதை 16

அத்தியாயம் 16 ஒன்றும் மூன்றும்

                     

ஞானப்பானா ---கிருஷ்ணகீதை 16

அத்தியாயம் 16 ஒன்றும் மூன்றும்   



                        கிருஷ்ண கிருஷ்ணா ! முகுந்தா!ஜனார்தனா!

                                      கிருஷ்ணா கோவிந்தாநாராயாண ! ஹரே!

                                      அச்யுதானந்தாகோவிந்தாமாதவா!

                          ஸச்சிதானந்தா ! நாராயண! ஹரே

        

மூன்னுமொன்னிலடங்குன்னு பின்னெயும்

ஒன்னுமில்லபோல் விசுவமன்னேரத்து

                

இந்த வரிகளில் பூந்தானம் இரண்டு பதங்களை கையாண்டு நம்மையெல்லாம் வியப்பிலாழ்த்துகிறார். ‘மூன்றும் ஒன்றில் அடங்கிவிடுகிறது; அப்பொழுது எதுவுமே இல்லாமல் ஆகிவிடுகிறது’ என்கிறார் பூந்தானம்.
எந்த மூன்று? எந்த ஒன்று?
ஒன்று என்பது பரமாத்மனைக் குறிக்கும். பரமாத்மன் அல்லது பர பிரம்மம் ஏகன், அத்விதீயன், அவனன்றி வேறொன்றில்லை, ஓங்காரஸ்வரூபன்,அக்ஷரன்( நாசமில்லாதவன்), ஆதியும் அந்தமும் இல்லாதவன், அவ்யக்தன், அவனே நிர்குணன், சகுணன், நித்தியன், சுயம் பிரகாசிக்கின்றவன், சர்வ வியாபி, சர்வ சக்தன், சர்வஞ்சன், சத்-சித்-ஆனந்தன் என்றெல்லாம் முன் அத்தியாயங்களில் சொன்னோம். அவனை பட்டினத்தார் கீழ்க்கண்டவாறு பாடியுள்ளார்:

                    ஓத எளிதோ? ஒருவர் உணர்வரிதோ?

                   பேதமற எங்கும் விளங்கும் பெருமையங்காண்.

                    வாக்கு மனமுங்கடந்த மனோலயங்காண்.

                   நோக்க அரியவங்காண்,நுண்ணியரில்                                                       நுண்ணியன்காண்

                  சொல்லுக்கடங்கான்காண்,! சொல்லிறந்து நின்றவன்                                                       காண்!

                   கல்லு ளிலிருந்த கனலொளிபோ நின்றவங்காண்!

“ஓதுவதற்கு எளிதல்ல; அவனைப்பற்றி சொல்ல வார்த்தைகள் போரா.;யாராலும் எளிதாக உணர்ந்து கொள்ள முடியாதவன்; பேதமில்லாமல் எல்லா ஜீவராசிகளிலும் அசேதனங்களிலும் ஒருங்கே காணப்படுபவன்; வார்த்தைகளினாலோ மனத்தாலோ உருவகப்படுத்தமுடியாத அவைகளை கடந்து நம்மில் லயித்துள்ளவன்; காண்பதற்கு எளிதில் கிடைக்காதவன்,சிறிய அணுவிலும் சிறியவனாக அணுக்களில் காண்பவன்,சொல்லுக்கடங்காதவன்; அவனைக்கண்டுவிட்டாலோ சொல்லின்றி நம்மை வாயடைத்து போக செய்கிறவன்;கல்லுக்குள்( மலையில்) அக்னிப்பிழம்பாகத்  தோன்றியவன்.”
அப்படிப்பட்ட ஒருவனில்-ஒன்றில் மூன்றும் லயிக்கின்றது.
எந்த மூன்று?
நமது வேத உபனிஷத்துக்கள் நிறைய ‘மூன்றுகள்’ குறிப்பிட்டுள்ளது.
·         பரமாத்மா ( நிர்குணபிரம்மம், ஸகுண பிரம்மம்), பிரகிருதி( மஹா மாயா, யோக மாயா, லோக மாயா),ஜீவாத்மா   
·         மும்மூர்த்திகள்
·         முப்பெரும் தேவிகள்
·         சிருஷ்டி, பாலனம், சம் ஹாரம்
·         பிரகிருதியின் முக்குணங்கள்
·         ஜீவாத்மாவின் அவஸ்தாத்ரயம்  
·         ஞாதா, ஞேயம், ஞானம்     
·         பூதம், நிகழ்காலம், வருங்காலம்
முதல் மூன்றைக் குறித்து முன் அத்தியாயத்தில் நிறைய சொல்லப்பட்டுவிட்டது.
சகுண பிரம்மத்தின் மூன்று தோற்றங்களான மும்முர்த்திகளைக்குறித்து சற்றே பார்ப்போம்.
விஷ்ணு புராணத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது:
“ஏகனாயிருக்கின்ற பகவான் ஜனார்த்தனன் சிருஷ்டி-ஸ்திதி-சம் ஹாரங்களை ஆற்றுவதற்காக பிரம்மா, விஷ்ணு, மஹேசுவரன் என்ற மூன்று பெயர்களை தனதாக்கிக் கொள்கின்றான்.’
சர்வாத்மகனான, கால-தேசங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவனான நிர்குண்பிரம்மம், சிருஷ்டி-ஸ்திதி-சம் ஹார கர்மங்களை அனுஷ்டிப்பதற்காக காலதேசமாறுபாடுகளுக்கு உட்பட்டு, சகுணனாக மூர்த்தி திரயமாக ( மும்மூர்த்திகளாக) தோற்றம் எடுக்கின்றது.
இன்னொரு விதத்தில் சொல்லப் போனால் சர்வேசுவரனுடைய இச்சா, ஞான, க்ரியா சக்திகள் தான் மும்முர்த்திகள் எனப்படுவர்.
மும்மூர்த்திகள் முப்பெரும் தேவிகளுடன் இணை பிரியாமல் இருந்து அவரவர்களின் கருமங்களை ஆற்றுகிறார்கள்.
பிரம்மா சிருஷ்டிக்கு அதிபதி.அவருடைய சக்தி ஞான ஸ்வரூபிணியான ஸரஸ்வதி-கலைமகள் என்றறியப்படுகிறாள்.ஞானத்தின் அதிஷ்டான தேவதையாக இருக்கின்ற கலைமகளின் உதவியில்லாமல் பிரம்மாவால் சிருஷ்டி கர்மத்தை செயலாக்க முடியாது. அவர் நான்முகன்- நாலு முகங்களையுடவர். ஏனென்றால், நாலாப்பக்கமுமள்ள சகல வஸ்துக்களையும் அவர் சிருஷ்டிக்கிறார் என்பதால்.
அவரது வாஹனம் அன்னம்-ஹம்ஸம். ஹம்ஸம்  என்பது சம்ஸ்கிருதத்தில் “ஸ:: அஹம்”—அதாவது ஸோஹம் என்பதின் மறு உருவம். ‘அஹம் புத்தியோடுள்ள ஜீவராசிகளை சிருஷ்டிப்பதால் அவர் ஹம்ஸத்தை வாஹனமாக கொண்டுள்ளார்.
விஷ்ணு பகவான் பிரம்மாவால் சிருஷ்டிக்கப்படுகின்ற எல்லா ஜீவராசிகளையும் பரிபாலித்து-காத்தல்,தனது கருமத்தை ஆற்றுகிறார்.
அவர் எப்பொழுதும் அந்தர்யாமியாக-எல்லோர் உள்ளிலிருந்துகொண்டு,பிரபஞ்சத்தை நடத்திக்கொண்டு செல்கிறார். அதற்கான சக்தி, எல்லா செல்வங்களுக்கும் அதிகாரியான சாக்ஷாத் மஹாலக்ஷ்மியிடமிருந்து அவருக்கு கிடைக்கிறது.அதனால் அவர் ஸ்ரீனிவாசனாக பேசப்படுகிறார். ’ஸ்ரீ’ அவரிடம்-அவரது மார்பில் எப்பொழுதும் குடிகொண்டிருக்கிறாள். நாலாபக்கமும் இருக்கின்ற ஜீவராசிகளை காக்க வேண்டியுள்ளதால் நான்கு கைகளை கொண்டவராயிருக்கிறார்  
.’காத்தலுக்கு’ அவசியம் வேகமும் விவேகமும். இது இரண்டும் பொருந்திய கருடன் அவரது வாஹனமாக இருக்கிறான்.
சிவன் என்றோ மஹா தேவன் என்றோ மஹேசுவரன் என்றோ அழைக்கபடுகின்ற சகுண பிரம்மாவதாரம் தான் சம் ஹாரமூர்த்தி. ‘சம் ஹாரம்” என்ற சம்ஸ்க்ருத வார்த்தைக்கு பொருள் அழித்தல் என்பதல்ல; திரும்பப் பெற்றுக்கொள்ளுதல், உற்பத்தி ஸ்தானத்திற்கே திரும்புவதல்; லயித்தல் என்று கொள்ளலாம். பிரம்மா, விஷ்ணு, மஹாதேவன் மூன்றும் பரபிரம்மத்தின் வெவ்வேறு பரிமாணங்கள் என்பதை ஞாபகப்படுத்திக்கொண்டால் மஹாதேவனின் செயலின் பொருள் நமக்கு தெளிவாகப் புரியும்..
மஹாதேவன் நம்மை இந்த இஹலோக பந்தங்களிலிருந்து விடுவித்து பரமனுடன் சேர்த்துவைக்கின்ற  கர்மத்தின் அதிபதியாக விள்ங்குகிறார்.அவர் நம்மிலுள்ள அவித்யயை நாசமடைய செய்து நமக்கு முக்திக்கு வழிகாட்டுகிறார். அவர் நமக்கு நித்திய சாந்தியை தருகிறார்.அவருக்கு துணையாக இருப்பதோ உமா தேவியெனப்படும் இச்சா சக்தியின் பிரதீகமாயிருக்கின்ற,பிரம்ம வித்யா தான். அவள் நமக்கு பிரம்மத்தை காண்பதற்கும் அதிலேயே லயித்து நித்திய சாந்தியை பெறுவதற்கும் ஏதுவாகிறாள்.
மஹாசிவனோ சன்னியாசி கோலத்தில் காட்சியளிக்கிறார். அவர் ‘சர்வசங்க ப்ரிதியாகம்’ செய்த முனிவர்களின் பக்திக்கு பாத்திரமானவர் என்பதை அவரது வேஷ விதானங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
அவரது வாஹனமோ ரிஷபம் அல்லது காளைமாடு.அது மனதையும் ஸ்தூல பிரகிருதியையும் ஞாபகப்படுத்துவதாக உள்ளது. ரிஷப வாஹனன் மனோஜயன் என்பதைக் குறிக்கிறது. புலித்தோல் அவர் காமனை தஹனம் செய்தவர் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. காமன் காமனைகளின்—ஆசைகளின் பிரதிபலிப்பு. ஆசைகள்- ராகம் தான் சம்சார பந்தங்களுக்கெல்லாம் மூல காரணம். அதிலிருந்து தான் துவேஷமும், குரோதமும் வெறுப்பும் மனவிப்ராந்தியும் உளவாகின்றது.இவைகளை வென்று பரமான்ந்த ஸ்வரூபியாக காட்சியளிக்கும் ஈசுவரனை மஹேசுவரன், மஹா தேவன் என்று கூறுவதில் எந்த தவறும் இல்லை.
மேற்கூறிய விவரணங்களெல்லாம் பரப்பிரம்மம் மாயையால் ஆவரணம் செய்யப்பட்டு சிருஷ்டி-ஸ்திதி-சம் ஹார கர்மங்களை ஆற்றுகின்றது என்பதை ஆலங்காரிகமாக குறிப்பிடுவதாகும். மும்மூர்த்திகளும் முப்பெரும் தேவிகளும் ஒரே பிரம்மத்தின் வெவ்வேறு உருவகங்கள் தான் என்பதை மறக்க வேண்டாம்.
இனி அடுத்த அத்தியாயத்தில் பிரகிருதியின் முக்குணங்களை பார்ப்போம்.அதுவரை பகவத் நாம சங்கீர்த்தனம் செய்வோம்

 கிருஷ்ண கிருஷ்ணா ! முகுந்தா!ஜனார்தனா!
கிருஷ்ணா! கோவிந்தா! நாராயாண ! ஹரே!
அச்யுதானந்தா! கோவிந்தா! மாதவா!
ஸச்சிதானந்தா ! நாராயண! ஹரே