Tuesday 19 January 2016

ஞானப்பானா-கிருஷ்ண்கீதை 22

ஞானப்பானா-கிருஷ்ண்கீதை 22


அத்தியாயம் 22

கர்மபந்தனம் 2

கிருஷ்ண கிருஷ்ணா ! முகுந்தா!ஜனார்தனா!

கிருஷ்ணா! கோவிந்தா! நாராயாண ! ஹரே!

அச்யுதானந்தா! கோவிந்தா! மாதவா!

ஸச்சிதானந்தா ! நாராயண! ஹரே


 മൂന്നുജാതി നിരൂപിച്ചുകാണുമ്ബോള്

                                                    മൂന്നുകൊണ്ടുമ് തളൈക്കുന്നു ജീവനെ

                                                    പൊ ന്നിന്ചന്ഗലയൊന്നിപ്പറന്ജ്ന്ജതി

                                                   ലൊന്നിരുമ്ബുകൊണ്തെന്നത്രെഭേദന്ഗള്

രണ്ടിനാലുമെടുത്തു പണിചെയ്ത

                                                   ചന്ഗലയല്ലോ മിശ്രമാമ് കര്മ്മവുമ്


                       மூன்னுஜாதி நிரூபிச்சு காணூம்போள்

                                                     மூன்னுகொண்டும் தளைக்குன்னு ஜீவனெ

                                                     பொன்னின்சங்கலையொன்னிப்பறஞ்சதி

                                                     லொன்னிரும்புகொண்டதனெனத்ரபேதங்கள்

                        ரண்டுனாலுமெடுத்து பணிசெய்த

                         சங்கலயல்லோ மிஸ்ரமாம் கர்மவும்

இந்த பௌதிக பிரபஞ்சத்தை சிருஷ்டித்த  பரபிரம்மமே சிருஷ்டி, சம்ஹாரம், ரக்ஷித்தல்—ஆக்கல், போற்றல், அழித்தல் என்ற மூன்று கர்மங்களையும் செய்வதற்காக சத்துவ-ரஜோ-தமோ குணங்களை அடிப்படையாகக்கொண்டு மூன்றாகப் பிரிந்து ரஜோகுணத்தை வரித்து பிரம்மாவாகத் தோன்றி சிருஷ்டி கரமத்தையும், சத்துவ குணத்தை வரித்து விஷ்ணுவாக காத்தல் கர்மத்தையும், தமோ குணமெடுத்து அழித்தல் கர்மத்தை நிர்வகிப்பதற்காக சிவனாகவும் அவதரிக்கிறான். இந்த மும்மூர்த்திகளும் மூன்று வெவ்வேறு கர்மங்களையும் அனுஷ்டித்தாலும் அவர்கள் ஒவ்வொருவரும் எல்லாக் கர்மங்களையும் ஆற்றுவதற்கு சக்தியுடையவர்கள் தான் என்று நமது புராணங்கள் பல இடத்திலும் தெளிவு படுத்தியுள்ளது.மூன்று குணங்களும் ஒன்று சேர்ந்துதான் எல்லாக் காரியங்களும் நடை பெறுகிறது. சந்தர்ப்பத்திர்கு தகுந்தாற் போல் ஒரு குணம் மட்டும் பிரதானமாகக் காணப்படுகிறது. அவ்வளவுதான், அவை வெவ்வேறு சக்திகளல்ல.அவர்கள் பற்பல கர்மங்கள் செய்கிறார்களென்றாலும் எந்த ஒரு குணமோ விகாரமோ அவர்களை பாதிப்பதில்லை.சத் சிதானந்தன் சத் ரூபமாகவே நிலை கொள்கிறான்.
எந்த ஒரு குணம் மேலோங்கி நிற்கிறதோ அதற்கு அனுஸ்ருதமாய் பரமாத்மாவின் அம்சமான ஜீவாத்மாக்களின் கர்மங்களும் புண்ணிய கர்மங்கள் என்றோ, பாப கர்மங்கள் என்றோ, புண்ணிய-பாப கர்மங்கள் என்றோ உருவம் எடுக்கின்றது. சத்துவ குணம் மேலோங்கி நிற்கின்ற பொழுது புண்ணிய கர்மங்களும், தமோகுணம் மேலோங்கி நிற்கின்ற பொழுது பாப கர்மங்களும், ரஜோ குணம் மேலோங்கி நிற்கின்றபொழுது புண்ணிய-பாப கலவையான கர்மங்களும் ஆற்ற வேண்டி வருகிறது.
முன் அத்தியாயத்தில் கூறியது போல் நம் உள் மனதில் உறங்கிக் கிடக்கும் சம்ஸ்காரங்கள்-வாசனைகள் பிராரப்த கர்மங்களாக ஜீவாத்மாவுடன் பிறப்பிலேயே வருகிறது. அந்த வாசனைகள் வெளிவருவதற்கு வெளி பிரபஞ்சத்திலிருந்து ஒரு கிரியா ஊக்கி  (stimuli)  வேண்டி வருகிறது. அப்படிப்பட்ட கிரியா ஊக்கிகள் ஜீவாத்மாவில் தாக்கமேற்படுத்தும் பொழுது அது சத்துவ- ரஜோ தமோ குணங்களை தனதாக்கிக் கொள்கிறது..முன் ஜன்ம கர்மங்கள் புண்ணிய கர்மங்களாக இருந்தால் சத்துவ குணம் தான் எதிர்கொள்ளும் க்ரியா ஊக்கிகளுக்கு எதிர் வினையாற்றுகிறது.ஆகவே இந்த ஜன்ம கர்மங்களும் புண்ணிய கரமங்களாக பரிணமிக்கிறாது.மாறாக முன் ஜன்ம வாசனைகள் பாபகர்மங்களை அடிப்படையாகக் கொண்டிருந்தால் இந்த ஜன்மத்திலும் தமோ குணம் முன் தூக்கம் பெறுகிறது. பாபகர்மங்களை செய்யத் தூண்டுகிறது. அதே போல் ரஜோ குணம் புண்ணிய –பாப கர்மங்களை செய்ய வைக்கின்றது.
ஆனால் கர்மங்கள் எதுவாக இருந்தாலும் அவை நம்மை இகலோகத்துடன் பந்திக்கிறது. நாம் பந்தத்திலிருந்து விடுபட முடிவதில்லை.கட்டிப் போடுகின்ற சங்கிலியின் தரத்தில் தான் வேறுபாடு என்கிறார் பூந்தானம்.புண்ணியகர்மங்கள் செய்யும்பொழுது நாம் நல்லது செய்தோம் என்ற திருப்தி ஏற்பட்டு மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் அந்த மகிழ்ச்சியின் பின்னால் ‘நான்’ செய்தேன் என்ற ‘அகந்தை’ ஒளிந்திருக்கிறது பாபார்மங்கள் செய்பவர்களும் நாம் மற்றவர்களுக்கு ஒரு பாடம் கற்பித்தோம் என்ற மமதையில் மிதக்கிறார்கள். ரஜோகர்மத்தை அடிப்படையாகக் கொண்ட புண்ணிய –பாப கர்மங்களின் பின்னாலும் ‘ மமதாகாரம்’ செயல்படுகிறது.இந்த செயல்கள் எதுவும் ஆத்மா செய்யாததால் ‘நான்; செய்தேன் என்ற மமதாகாரம் வரும்பொழுது அந்த ‘நான்’ ‘நானல்ல’.அது ‘தனுவான நானென்ற எண்ணத்திலிருந்து உதித்த நானாக இருக்கிறது..ஆகவே இந்த கர்மங்கள் நம்மை பௌதிக உடலுடன் பிணைத்து ‘புனரபி மரணம் ,புனரபி ஜனனம்’ என்ற சக்கரச் சுழற்சியில் சிக்க வைக்கிறது.
ஆகவே பூந்தானம் ஒரு சங்கிலி தங்கத்தால் செய்த்தென்றல் இன்னொன்று இரும்பினால் செய்தது; மற்றொன்று உலோகங்களின் கலவையில் செய்தது என்கிறார். நிதரிசனமான உண்மை நாம் கட்டப்பட்டிருக்கிறோம் என்பது தான். கிளிக்கு தங்க கூண்டானால் என்ன? இரும்பு கூண்டானால் என்ன? கூண்டு கூண்டு  தான்.கர்மங்கள் பந்தமே-பந்தனமே.
இந்த கர்மங்களை அனுஷ்டிக்காமல் இருந்தால் விடுதலை கிடைக்குமா? நாம் முக்தியடைந்து விடுவோமா? பூந்தானம் இனிவரும் வரிகளில் பதில் சொல்லுகிறார். அதை அடுத்த அத்தியாயத்தில்ப் பார்ப்போம். இப்பொழுது பகவத் நாமம் சொல்லுவோம்.
                 கிருஷ்ண கிருஷ்ணா ! முகுந்தா!ஜனார்தனா!
                கிருஷ்ணாகோவிந்தாநாராயாண ! ஹரே!
                அச்யுதானந்தாகோவிந்தா! மாதவா!
                ஸச்சிதானந்தா ! நாராயண! ஹரே
                                                           


Friday 15 January 2016

ஞானப்பானா-கிருஷ்ணகீதை 21

ஞானப்பானா-கிருஷ்ணகீதை 21                      

அத்தியாயம் 21

  கர்ம பந்தம்-1

கிருஷ்ண கிருஷ்ணா ! முகுந்தா!ஜனார்தனா!
கிருஷ்ணா! கோவிந்தா! நாராயாண ! ஹரே!
அச்யுதானந்தா! கோவிந்தா! மாதவா!
ஸச்சிதானந்தா ! நாராயண! ஹரே


                                        ഒന്നുകൊണ്ടു ചമച്ചൊരു വിശ്വത്തിൽ

                                        മൂന്നായിട്ടുള്ള കർമങ്ങളായ്

                                        പുണ്യകrmമംഗന്ഗളും പാപകര്മ്മന്ഗളും 

                                        പുണ്യപാപ ന്ഗള് മിശ്രമാമ് കര്മ്മവുമ്

                                                           

                                           ஒன்னுகொண்டு சமச்சொரு விசுவத்தில்

                                          மூன்னாயிட்டுள்ள கர்மங்களொக்கெயும்

                                          புண்யகர்மங்கள் பாபகர்மங்களும்

                   புண்யபாபங்கள் மிஸ்ரமாம்கர்மவும்

‘ஒரே வஸ்துவிலிருந்து உருவான இந்த விசுவ பிரபஞ்சத்தில்      கர்மங்கள் மூன்றாகக் காணப்படுகின்றன. புண்யகர்மங்கள், பாபகர்மங்கள், புண்ணியமும் பாபமும் கலந்த கர்மங்கள் என்று மூன்று வகை” என்று கூறுகிறார் பூந்தானம் இந்த நாலுவரிகளில்.
ஒன்று என்பது பரமாத்மனைக் குறிக்கும். பரமாத்மன் அல்லது பர பிரம்மம் ஏகன், அத்விதீயன், அவனன்றி வேறொன்றில்லை, ஓங்காரஸ்வரூபன்,அக்ஷரன்( நாசமில்லாதவன்), ஆதியும் அந்தமும் இல்லாதவன், அவ்யக்தன், அவனே நிர்குணன், சகுணன், நித்தியன், சுயம் பிரகாசிக்கின்றவன், சர்வ வியாபி, சர்வ சக்தன், சர்வஞ்சன், சத்-சித்-ஆனந்தன்.அவனிலிருந்துதான் இந்த பிரபஞ்சம் உண்டாயிற்று என்று முன்பே கண்டோம்.
இதன் முழு அர்த்தமும் புரிய வேண்டுமென்றால் கர்ம்மம் என்றால் என்ன? அவையை எப்படி குழுக்களாக பிரிப்பது? என்ற கேள்விகளுக்கு பொருள் புரிய வேண்டும் நமக்கு.
முதல் கேள்வி கர்மம் என்றால் என்ன்?
‘க்ரி’ என்ற சொல்லிலிருந்து ‘க்ரியை’, ‘கர்மம்’ ‘கர்த்தா’ என்பன போன்ற சொற்கள் உண்டாகின்றன என்று கூறுகிறார்கள் சம்ஸ்க்ரித மொழி வல்லுனர்கள்.
க்ரி’ என்றால் ‘செய்வது’ ‘வினையாற்றுவது’ என்று பொருள். ஆகவே ‘கர்மம் என்றால் செயல், வினை என்று புரிந்து கொள்ளலாம்.
செயல் அல்லது வினை என்றால் ஸ்தூல சரீரத்தின் மூலமாக செய்யப்படுகின்ற செயல்கள் மட்டு மல்ல; மனதால் நினைக்கப்படுகின்றவையும் செயல்கள் தான்.’மனஸா’ வாசா, கர்மணா- மனதால், வாக்கால், செயலால் ஆற்றப்படுகின்றவை எல்லாம் கர்ம்ம் என்ற சொல்லில் அடங்கும். எண்ணங்களும் செயல்களின் விளைவுகளும் கர்மத்தில்ப்படும்.
இந்த கர்மங்களை எப்படி தரம் பிரிக்கலாம்? ஆச்சாரியர்கள் ‘சஞ்சித கர்மம்’., ப்ராரப்த கர்மம்’ ‘ஆகாமி கர்மம் என்று மூன்றாகப் பிரித்துள்ளார்கள்.
ஒரு ஜீவன் இந்த பிரபஞ்சத்தில் தோன்றும்பொழுது முன் ஜன்மங்களில் அது செய்து கூட்டிய வினைகளின் பயன்களை  சேகரித்து அந்த சேகரத்துடன் பிறக்கிறது            .’சஞ்சித”என்ற வார்த்தையின் பொருள் ‘சேகரித்து வைக்கப்பட்ட’,’ குவிக்கப்பட்டுள்ள’ என்று கொள்ளலாம். அப்படி சேகரிக்கப்பட்டுள்ள கர்ம பலன்களை முழுவதுமாக ஒரு பிறவியில் அனுபவித்துத் தீர்க்க முடியாது. ஆகவே குவியலலிருந்து ஒரு பகுதி நாம் பிறக்கும்பொழுது அந்தப் பிறவியில் அனுபவித்துத் தீர்க்கவேண்டியது என்ற ரீதியில் நம்முடன் வருகிறது. இதை பிராரப்த கர்ம என்கிறார்கள். பிராரப்த கர்மத்தின் அளவை யார் நிர்ணயிக்கிறார்கள்? இதற்கு பகவான் ரமணர் ஒரு பக்தருக்கு அளித்த பதில் நம்மை திருப்திப் படுத்தும் என்று எண்ணுகிறேன்.
பகவான் ரமணர் உபதேச சாரத்தில் கூறுகிறார்:” கர்த்துராக்ஞ்சயயா ப்ராப்யதே ஃபலம்( கன்மம் பயன் தரல் கர்த்தன்னது ஆணயால்-உபதேச உந்தியார்)”.அந்த கர்த்தர் யார் என்ற கேள்விக்கு பகவான் ரமணர் கூறுவார்:
“கர்த்தா ஈசுவரனே.! அவரவர் கர்மங்களைப் பொறுத்துப் பலன்களை கொடுப்பவன் அவனே.சகுணபிரம்மம் என்று அர்த்தம்.வாஸ்தவத்தில் பிரம்மம் என்றால் நிர்குணம்; அசலம்.அதுவே குணங்களும் சலனமும் உள்ளதாக உலக வியவகாரத்தை நடத்தி வைக்கும்பொழுது சகுண பிரம்மம் எனப்படுகிறது.சகுணபிரம்மத்திற்கே  ஈசுவரன் என்று பெயர்.அவன் அவரவர் கர்மங்களுக்கேற்ப பலன் கொடுப்பவன்.ஒரு ஏஜண்டு.என்று சொல்லலாம்.வேலைக்கேற்ப சம்பளம் கொடுப்பவன்.அவ்வளவு தான்.அந்த ஈசுவரனின் சக்தியில்லாமல் இந்த கர்மா நடக்காது.அதனால்த் தான் ‘கர்மத்தை ஜடம்’ என்றார்கள் பெரியோர்கள்.இதுதான் அதன் உட்கருத்து.”
இந்த கர்மங்கள் எப்படி சேகரித்து வைக்கப்படுகின்றன? இந்த இடத்தில் ‘சம்ஸ்காரா’ என்ற இன்னொரு சொல்லின் பொருளை புரிந்துகொள்ள வேண்டும்.சித்த விருத்தி என்பது மனதில் நமது சித்தத்தில் ஏற்படும் எண்ண அலைகள்,அல்லது சுழல்கள் எனலாம்.இந்த எண்ண அலைகள் உயிரோட்ட்த்துடன் மேல்மனதில் இருந்து செயலாற்றத் தூண்டுகின்றன. செயலாற்றினாலும் இல்லையெனிலும் சிறிது காலத்திற்குப் பின் அடிமனதிற்கு தள்ளப் படுகிறது.அவை அழிவதில்லை.அங்கு நீறு பூத்த நெருப்பாக உற்ங்கிக் கிடக்கும்..இப்படி பதிந்து கிடக்கும் எண்ணங்கள் தான் ‘சம்ஸ்காரம்’ எனப்படுகிறது..நமது கடந்தகால செயல்கள், சிந்தனைகள், , கோப-தாபங்கள், விருப்பு-வெறுப்பக்கள் எல்லாம் ஒரு அணு போலும் பிசகாமல் நஷ்டமடையாமல் பதிந்து கிடக்குமிவை மற்றொரு சந்தர்ப்பத்தில் மேல் மனதிற்கு பொந்தி வரும்பொழுது அது பெரிய அலையாக வரும்.
ஒருமுறை ரசகுல்லா சாப்பிட்டீர்களேயானால், ரசகுல்லாவின் நிறம், உருவம், ருசி எல்லாம் அடிமனதில் பதிந்து விடுகிறது. வேறொரு சந்தர்ப்பத்தில் ரசகுல்லாவை பலகாரக்கடையின் கண்ணாடி அலமாரியிகல் பார்க்கும்பொழுது  நீங்கள் வருடங்களுக்குமுன் சாப்பிட்ட ரசகுல்லாவின் ருசி உங்கள் மேல் மனதிற்கு வந்து மீண்டும் ரசகுல்லாவை வாங்கத் தூண்டும்.இது தான் ‘சம்ஸ்காரம்’ என்பதின் பொருள்..
ஒரு தேகத்தை விட்டு உங்கள் ஆத்மா வேறொரு தேகத்தை அடைக்கலமாகும்பொழுது இந்த சம்ஸ்காரம் ப்ராரப்த கர்ம்மாக வருகிறது.
சம்ஸ்காராம் முன் ஒரு பிறவியிலிருந்து மட்டும் தான் வருகிறது என்றில்லை.எண்ணற்ற முன் சன்மங்களின் சம்ஸ்காரங்கள் அந்தக்கரணத்தில் உறைந்து கிடக்கின்றன்.அவையெல்லாம் பிறக்கும் பொழுது உடன் வருகின்றன,
இந்த சம்ஸ்காரங்கள் தான் வாசனைகளாக உருவெடுக்கின்றன.
இதன் ஆரம்பம் எது என்று சொல்வதற்கில்லை. அனாதி என்று சொல்ல்லாம்.இதன் ஒரு பகுதி தான் ப்ராரப்த கர்ம்மாக மாறுகிறது.
இப்படி நம்முடன் பிறவியிலேயே நம்முடன் வரும் பிராரப்த கர்மம் ஆரம்பிக்கப்பட்ட கர்மம்; நிறுத்த இயலாதது.அவை அனுபவங்களாக இந்த பிறவியில் உருவெடுக்கிறது.அப்படி நமக்கு ஏற்படுகின்ற அனுபவங்களின் பொழுது நாம் ஆற்றுகின்ற செயல்களினால் உளவாகின்ற பலன்கள் ஆகாமி கர்மம் எனப்படுகிறது..
பிராரப்தம் முடிந்துவிட்டால் ஆத்மா அந்த தேஹத்தைவிட்டு இன்னொன்றைத் தேடிப் போகிறது புதிய சஞ்சித கர்மாக்களுடன்.
இன்னொரு விதத்தில் கர்மங்களை தரம் பிரிப்பதுமுண்டு
மனிதனின் மனப்பான்மைக்கு ஏற்றபடி கர்மங்கள் வெவ்வேறு வடிவெடுக்கின்றான..முக்கியமான வடிவங்கள் கீழ்க்கண்டவையாகும்:
·         நித்திய கர்மம்-------எதைச் செய்தால் புண்ணியமில்லையோ, ஆனால் செய்யாவிட்டால் பாபமேற்படுமோ , அது நித்திய கர்மம் உண்பது,உறங்குவது,நீராடுவது,முதலியன.
·         நைமித்திக கர்மஃம்--------சில சந்தர்ப்பங்களை முன்னிட்டு ஆற்றும் கர்மங்கள் நைமித்திக கர்மங்கள். ஏகாதசி விரதம்,சிவராத்திரி விரதம்,கிரகண வேளை
·         காமிய கர்மங்கள்---------சில காரிய சித்திக்காக செய்யும் கர்மங்கள்—பொருள் வேண்டி,பதவி வேண்டி முதலியன
·         நிஷித்த கர்மங்கள்------செய்யக் கூடாத கர்மங்கள்
ஆனால் பூந்தானம் இந்த பிரிவுகளையெல்லாம் விட்டு விட்டு சாமானியர்களும் புரிந்து கொள்ளும்படியாக மூன்றுவிதமான கர்மங்களைக் குறிப்பிடுகிறார்:
·         புண்ணிய கர்மங்கள்
·         பாப கர்மங்கள்
·         புண்ணிய-பாப கர்மங்கள்.
எல்லா ஜீவாத்மாக்களும் பரமாத்மாவின் அம்சமே; எல்லோருள்ளும் ஒளிர்ந்து கொண்டிருப்பது அந்த பரம சைதன்யமே;ஒருவனுக்கு நன்மை பயக்கும் கர்மம் எல்லோருக்கும் நன்மை பயக்க வேண்டும் அது புண்ணிய கர்மம். தனக்கு மட்டும் நன்மை பயக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செய்யப் படும்  கர்மங்கள் பாப  கர்மங்கள். ஆனால் சந்தர்ப்பத்தைப் பொறுத்து இந்த வியாக்கியானம் மாறலாம். ஆகவே பூந்தானம் மூன்றாவது ஒரு வகை கர்மத்தைக் குறிப்பிடுகிறார். அது தான் புண்ணிய பாபகர்மங்கள்.
ஒரு முறை ஒரு நீதிமானான அரசன் கொள்ளையரிடமிருந்து தப்பிப்பதற்காக ஓடி ஓடி ஒரு நதிக்கரையை வந்தடைந்தான். அங்கு பாதை நான்காகப் பிரிந்தது. அவன் கிழக்கு  நோக்கிச் செல்லுமுன் அங்கு அரச மரத்தடியிலமர்ந்திருந்த முனிவரிடம் “நான் எந்த திசையில் போனேன் என்று என்னைத் துரத்தி வரும் கொள்ளயரிடம் கூறாதீர்கள். அப்படிக் கூறினால் என் உயிருக்கும் நாட்டிற்கும் கேடு விளையும்” என்று சொல்லிவிட்டு ஓடி மறைந்தான்.
அந்த முனிவர் பொய் சொல்லாத சத்திய சந்தர். அவர் தர்ம சங்கடத்தில் அகப்பட்டுக்கொண்டார்.
கொள்ளையர் வந்ததும் அவர் நாவிலிருந்து உண்மை தான் வெளிவந்தது. கொள்ளையர் அரசனை துரத்திச் சென்று பிடித்துக் கொன்றுவிட்டார்கள்.
முனிவர் உண்மை பேசியதன் மூலம் புண்ணியம் தேடிக்கொண்டாரா? ஒரு நல்ல அரசனை கொள்ளையரிடம் சிக்கவைத்து நாட்டிற்கு கேடு விளைவித்ததின் மூல பாபம் தேடிக்கொண்டாரா?
இப்படி எவ்வளவோ கர்மங்கள் புண்ணியம் என்றோ பாபம் என்றோ பிரிக்க முடியாமலிருக்கும்.அவைகளைத்தான் பூந்தானம் புண்ணிய-பாப கர்மங்கள் என்று சொல்லுகிறார் போலும்.
இப்படிப்பட்ட கர்மங்களால் நாம் எவ்வாறு பாதிக்கப் படுகிறோம்? அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.அதுவரை பூந்தானத்துடன் நாமும் பகவத் நாமம் சொல்லுவோம்.
.
கிருஷ்ண கிருஷ்ணா ! முகுந்தா!ஜனார்தனா!
கிருஷ்ணா! கோவிந்தா! நாராயாண ! ஹரே!
ஸச்சிதானந்தா ! நாராயண! ஹரே

அச்யுதானந்தாகோவிந்தாமாதவா!

 

Friday 8 January 2016

ஞானப்பானா –கிருஷ்ண கீதை 20

ஞானப்பானா –கிருஷ்ண கீதை 20

அத்தியாயம் 20 ஒன்றும் மூன்றும்  5

கிருஷ்ண கிருஷ்ணா ! முகுந்தா!ஜனார்தனா!

கிருஷ்ணா! கோவிந்தா! நாராயாண ! ஹரே!

அச்யுதானந்தா! கோவிந்தா! மாதவா!

ஸச்சிதானந்தா ! நாராயண! ஹரே

              மூன்னுமொன்னிலடங்குன்னு பின்னெயும்

              ஒன்னுமில்லபோல் விசுவமன்னேரத்து


முன் அத்தியாயத்தில் ‘ஓம்’ என்ற பீஜாக்ஷர மந்திரத்தைக் குறித்தும், எல்லாமே பிரம்மம் தான் என்றும் அந்த பிரம்மத்திற்கு நான்கு பாதங்கள் உண்டு என்றும், அதில் முதல் பாதம் ஜாக்ரத் அவஸ்தை என்றும் ஜாக்ரத் அவஸ்தையில் ஜீவாத்மா வெளி பிரபஞ்சத்திலுள்ள பௌதிக வஸ்துக்களை அனுபவித்து இன்ப துன்பங்களை நேடுகிறதென்றும் கண்டோம்.அந்த அவஸ்தையில் ஜீவாத்மாவை வைஸ்வானரன் என்றழைக்கின்றோம் என்றும் அவன் ‘சப்தாங்கன் என்றும் பத்தொன்பது வாயில்களை உடையவன் என்றும் மாண்டூக்கிய உபனிஷத்திலுள்ள மந்திரங்களின் அடிப்படையில் விவரித்தோம்.
அந்த வியாக்கியானத்தை தொடருவோம்.
ஏழு அங்கங்கள் யாவை? பத்தொன்பது வாயில்கள் என்ன, என்ன? என்பதற்கான விளக்கங்கள் மாண்டூக்கியத்தில் காணப்படவில்லை. அதற்கு முண்டகோபனிஷத்தை நாட வேண்டியுள்ளது.
முண்டகோபனிஷத்தி நமது முனிவரியர்கள் கூறுகிறார்கள்:

              अग्निर्मुऊर्धा,चक्षुषि चन्द्र-सूर्याउ, दिशा:श्रोत्रे, वाक् विव्रितास्च वेदा:,

               वायु: प्रान:,ह्रिदयम् विश्वमास्य,पादभ्याम् प्रिथ्वि,एश सर्व-भूतान्तरात्मा


   அக்னிர்மூர்தா,சக்ஷுசி சந்த்ர-சூர்யா,திசா ஸ்ரோத்ரே, வாக் விவ்ரிதச்ச வேதா: 

வாயு:ப்ராண-ஹ்ரிதயம் விஸ்வமாஸ்ய பாதாப்யாம்,ப்ர்த்வி,ஏச சர்வ-பூதாத்மா

இந்த பரமாத்மன் எல்லோர் உள்ளிலும் அந்தராத்மாவாக வசிக்கிறான். ஒளிமயமான ஆகாயம்-சிதாகாசம் அவனது புத்தியாகவும், சூரிய சந்திரர்கள் அவனது கண்களாகவும், நான்கு திசைகளும் அவனது செவிகளாகவும்,வேதங்களே அவனது வாக் இந்திரியமாகவும்,, வாயுவாகப்பட்டது அவனது ப்ராணனாகவும், இந்த விஸ்வபிரபஞ்சமே அவனது இதயமாகவும், பூமியே அவனது கால்களாகவும் இருக்கிறது. இவனே வைஸ்வானரன் அல்லது விஸ்வாத்மாஅல்லது விராட் புருஷன்.இவனைத்தான் புருஷ சூக்தத்தில் பாடியுள்ளார்கள். இந்த விராட் ரூபத்தை தான் அர்ஜுன்ன் குருக்ஷேத்திர யுத்த பூமியில் கண்டான். சமாதான தூதுவனாக சென்ற பொழுது கௌரவர்கள் கண்டதும் இந்த விராட் புருஷனைத் தான்; இதே விஸ்வரூபத்தை யசோதாமாதாவும் பாலகிருஷ்ணனின் வாயில் கண்டாள்.அவனே விஸ்வத்திலுள்ள ஒரே புருஷன், மஹாபுரூஷன், புருஷோத்தமன்,.
இந்த விஸ்வ புருஷனுக்கு பத்தொன்பது வாய்கள் என்று கூறப்படுகிறது.அவை எவை?
ஐந்து கர்மேந்திரியங்களும் ஐந்து ஞானேந்திரியங்களும் ஐந்து ப்ராணனுகளும் சேர்ந்து பதினைந்து ஆகிறது.
ஞானேந்திரியங்கள் என்பவை ‘ஸ்ரோத்றேந்திரியம், த்வக்கிந்திரியம், சக்ஷுசிந்திரியம், ஜிஹுவேந்திரியம், க்ரானேந்திரியம்.
இந்த இந்த்ரியங்கள் நமது ஸ்தூல சரீரத்திலுள்ள சில அங்கங்களின் மூலமாக வெளி உலகத்துடன் தொடர்பு கொள்கிறது..
ஸ்ரோத்ரேந்திரியம் செவிகள் மூலமாகவும், சக்ஷுசேந்திரியம் கண்கள் வழியாகவும், த்வக்கிந்திரியம் உடலிலுள்ள சகல உறுப்புக்களின் ஸ்பரிசம் மூலமும், ஜிஹ்வேந்திரியம் நாவின் ருசியறிதல் மூலமும் க்ராணேந்திரியம் நாசித்துவாரங்கள் மூலமும் வெளியுலக தொடர்பை ஏற்படுத்திக்கொள்கிறது.  அதனுடன் தொடர்புடைய உடல் உறுப்புக்கள் தான் நமது செயல்களை ஆற்றுகின்றது. செயல்கள் என்றால் பேச்சு, ஒலி, கைகளும் கால்களும்  பாயு-உபஸ்தா விசர்ஜன- உற்பத்தி உறுப்புக்கள். இந்த உடல் உறுப்புக்களை கர்மேந்திரியங்கள் என்கிறோம். ஏனெனென்றால் அவைகள் இல்லாமல் நாம் குறிப்பிட்ட செயல்கள் ஆற்றமுடியாது..இந்த ஸ்தூல அங்க அவையவையங்களைத் தவிர ஐந்து சூக்ஷ்ம சரீர அவையவையங்களும் உள்ளன, ப்ரானா, அபானா, வ்யானா, உதானா, மற்றும் சமானா.

மேலும்  ‘அந்தக்கரண சதுஷ்டய” எனப்படும் ‘ மனசு,புத்தி, அஹம்காரா, மற்றும் சித்தம்’ எனுகம் நாலு வாயில்களும் உண்டும் அவ்வாறு பத்தொன்பது வாய்கள் அல்லது வாயில்கள் வைசுவானரனுக்கும் உண்டு ஜீவாத்மாவிற்கும் இதே பத்தொன்பது வாய்கள் உண்டு. இந்த பத்தொன்பது வாயில்கள் வழியாகத்தான் இந்திரிய விஷயங்கள் பிரவேசிக்கின்றன.
மனசாகப்பட்ட்து சிந்திக்கிறது,அலசி ஆராய்கிறது, புத்தியாகப்பட்டது அதின் ஆராய்ச்சி முடிவை உட்கொண்டு முடிவுகளை எடுக்கிறது,இந்த சிந்தனைகளையும் முடிவுகளையும் ‘தனது’ என்றாக்கிக்கொள்ளுகிறது ‘அஹங்காரா’.சித்தமோ இவைகளையெல்லாம் ஒருங்கிணைத்து, ஞாபகத்தில் வைத்துகொள்கிறது; சமயம் வரும்பொழுது எடுத்து கொடுக்கின்றது.
மனதின் சிந்தனைக்கேற்ப, புத்தியின் ஆணைக்கிணங்க ஞானேந்திரியங்கள் வெளிவிஷயங்களை உள்வாங்க தயாராகி, கர்மேந்திரயங்களை இயக்குகிறது.
இப்படிப்பட்ட பத்தொன்பது வாய்களும் வெளி விஷயங்களை அனுபவிப்பதில் பங்கு வகிங்க்கின்றது.
இரண்டாவது பாதம் ஸ்வப்னாவஸ்தை. இதில் வர்த்திக்கின்றவனை தைஜஸன் என்று கூறுகிறது மாண்டூக்கியம்.        

                    स्वप्नश्थानोन्थह्:प्रज्ना: सप्तान्ग एकोनविम्सतिमुख:

                       प्रविविक्त-भुक् तैजसो थ्वितीअ: पाद:

       ஸ்வப்ன-ஸ்தானோஅந்த: ப்ரஜ்ன: சப்தாங்க ஏகோனவிம்சதிமுக:           ப்ரவிவித்க-புக் தைஜசோ த்விதிய: பாத:

தைஜசனும் தனது ஏழு அங்கங்கள் வழியாகவும் பத்தொன்பது வாய்கள் வழியாகவும் செயலாற்றுகிறான்.ஒரே ஒரு வித்தியாசம் : இந்த அவஸ்தையில் அவனது ஸ்தூல சரீரம் செயல்படுவதில்லை; சூக்ஷ்ம சரீரம் மட்டும் தான் வினையாற்றுகின்றது. அதே போல் இந்திரியங்களுக்கு தேவையான விஷயங்களும் சூக்ஷ்ம ரூபத்திலேயே பிரத்தியக்ஷப் படுகின்றது.

                        यत्र सुप्तो कम् चन कामम् काम्यते

                          कम्चन् स्वप्नम् पश्यति तत्षुप्तम्

                         सुषुप्तस्थान् एकीभूत: प्रज्नान्घन् एकानन्दमयो

                         ह्यानन्द-भुक् चेतो-मुख: प्रज्नास्त्रुतीय:पाद:

                    யத்ர ச்உப்தோந கம்சன காம்ம் காமயதோ

                     ந கம்சன ஸ்வப்னம் பஸ்யதி த்த்சுஷுப்தம்

                சுஷுப்தஸ்தான் ஏகீபூத: ப்ரஞ்சான்கன ஏவானந்தமயோ

                ஹ்ய்-ஆன்ந்தபுக் சேதோமுக்: ப்ரஜ்னாஸ்துருதீய

மூன்றாவது அவஸ்தை  சுஷுப்தி எனப்படும்.ப்ரஜ்னா தான் இதின் அதிபதி. இந்த அவஸ்தயில் எவ்வித சித்த விருத்திகளும் இராது; எவ்விதமான ஆசா-பாசங்களும் தோன்றாது, ஸ்தூல-சூக்ஷ்ம சரீர பிரக்ஞ்சை இராது; கனவுகளும் இராது. அமைதியான உறக்கம்.ஆனால் உறக்கத்திலிருந்து விழித்து ஜாக்ரத் அவஸ்தைக்கு திரும்பும்பொழுது நன்றாக உறங்கினோம் என்பது ‘நானுக்கு’ த் தெரியும்.சுஷுப்தி நிலையிலும் ’நான் ஸாக்ஷியாக விழித்துக் கொண்டிருந்த்து என்பதற்கு அது ஒன்றே ருசு.
ஆனால் மூன்றாவது அவஸ்தை நிரந்தரமல்ல; அதிலிருந்து குறுகிய காலாயளவில் விழித்தெழுந்திருக்கிறோம். இந்த மூன்று நிலைகளையும் கடந்த ஒரு நிலை உள்ளது. அதை ஒரு அவஸ்தை என்று சொல்ல முடியாது; அது தான் உண்மை சொரூபம்; அது தான் நித்தியம்; நிரந்தரம்,; நிச்சலம்;நிச்சிந்தியம்.
இதை துரீயம் என்கிறோம்.

                       नान्त: प्रज्न:, बहिर्प्रज्न नोभयत्: प्रज्न न

                     प्रज्नान-घनम् न प्रज्न नाप्रज्नम् !

                    अद्द्रिर्षड्म्मव्यवहारयम्,अग्राहयम्,अलक्षणम्

                    अचिन्थियम् अव्यपदेश्यमेकात्मप्रत्यय सारम्

                    प्रपन्जोपशमम्, शान्तम्,शिवम्,अद्वैतम्,

                    चतुर्तम् मान्यन्ते स आत्मा स विज्नेय:

இந்த நிலையில் ‘அது’ அந்தர்முகமாகவோ பஹிர்முகமாகவோ இராது;ஏனென்றால் அதற்கு ரூபம் கிடையாது; இரண்டு முகமாகமும் இராது; அறியமுடிகின்ற அல்லது அறியமுடியாத ஒன்றாக இராது; எல்லாம் அறிந்ததாகவும் ஒன்றுமே அறியாத்தாகவும் இருக்கும்;அங்கு அறிவதற்கும் பார்ப்பதற்கும் ஒன்றுமிராது;அதிர்ஸ்யம்-பார்க்க முடியாதது,கேட்கமுடியாதது, தொட முடியாதது, உண்ரமுடியாதது, ஏனென்றால் அங்கு பார்ப்பத்ற்கோ தொடுவதற்கோ, கேட்பதற்கோ ‘அதை’த் தவிர வேறொன்றிராது.எந்த விதமான குண நலன்களும் இல்லாதது,சிந்தனைகளுக்கப்பாற்பட்டது,வரையறுத்து கூற முடியதது,சுருக்கமாக சொல்லப் போனால் ‘அது’ அது’வாக இருக்கும்; அங்கு மற்றொன்று இராது; வேறொன்றில்லாததால் எதனுடனும் தொடர்பில்லாததாகவும் இருக்கும்.ஒன்றையன்றி வேறொன்றில்லாததால் பரம சாந்தி நிலவும்;
ஜாக்ரத், ஸ்வப்னம் சுஷுப்தி என்ற மூன்றும் அந்த ஒன்றில் லயித்துவிடும்; அப்பொழுது இந்த பிரபஞ்சமும் காணாமல் போய் விடும். ஞானம், ஞேயம், ஞானகமயம் என்ற முப்பரிமாணங்களும் இல்லாமலாகிவிடும். அறிவு- ஞானம், அறியப்படும் பொருள் ஞேயம்; அறியப்படிதல் ஞானகமயம். ( காணுபவன், காட்சி, காணுதல்) என்ற மூன்றும் மறைந்து விடும்; அங்கு சத்சிதன்ந்தமே மிஞ்சும்.

இந்த அவஸ்தையைத் தான் பூந்தானம்

                             மூன்னுமொன்னிலடங்குன்னு பின்னெயும்

                              ஒன்னுமில்லபோல் விசுவமன்னேரத்து

என்று சொல்கிறார்.
பூந்தானத்தின் பிற வரிகளை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.அதுவரை பூந்தானத்துடன் சேர்ந்து பகவத் நாம சங்கீர்த்தனம் செய்வோம்

                  கிருஷ்ண கிருஷ்ணா ! முகுந்தா!ஜனார்தனா!

                 கிருஷ்ணா! கோவிந்தா! நாராயாண ! ஹரே!

                அச்யுதானந்தா! கோவிந்தா! மாதவா!

                 ஸச்சிதானந்தா ! நாராயண! ஹரே