Friday 15 January 2016

ஞானப்பானா-கிருஷ்ணகீதை 21

ஞானப்பானா-கிருஷ்ணகீதை 21                      

அத்தியாயம் 21

  கர்ம பந்தம்-1

கிருஷ்ண கிருஷ்ணா ! முகுந்தா!ஜனார்தனா!
கிருஷ்ணா! கோவிந்தா! நாராயாண ! ஹரே!
அச்யுதானந்தா! கோவிந்தா! மாதவா!
ஸச்சிதானந்தா ! நாராயண! ஹரே


                                        ഒന്നുകൊണ്ടു ചമച്ചൊരു വിശ്വത്തിൽ

                                        മൂന്നായിട്ടുള്ള കർമങ്ങളായ്

                                        പുണ്യകrmമംഗന്ഗളും പാപകര്മ്മന്ഗളും 

                                        പുണ്യപാപ ന്ഗള് മിശ്രമാമ് കര്മ്മവുമ്

                                                           

                                           ஒன்னுகொண்டு சமச்சொரு விசுவத்தில்

                                          மூன்னாயிட்டுள்ள கர்மங்களொக்கெயும்

                                          புண்யகர்மங்கள் பாபகர்மங்களும்

                   புண்யபாபங்கள் மிஸ்ரமாம்கர்மவும்

‘ஒரே வஸ்துவிலிருந்து உருவான இந்த விசுவ பிரபஞ்சத்தில்      கர்மங்கள் மூன்றாகக் காணப்படுகின்றன. புண்யகர்மங்கள், பாபகர்மங்கள், புண்ணியமும் பாபமும் கலந்த கர்மங்கள் என்று மூன்று வகை” என்று கூறுகிறார் பூந்தானம் இந்த நாலுவரிகளில்.
ஒன்று என்பது பரமாத்மனைக் குறிக்கும். பரமாத்மன் அல்லது பர பிரம்மம் ஏகன், அத்விதீயன், அவனன்றி வேறொன்றில்லை, ஓங்காரஸ்வரூபன்,அக்ஷரன்( நாசமில்லாதவன்), ஆதியும் அந்தமும் இல்லாதவன், அவ்யக்தன், அவனே நிர்குணன், சகுணன், நித்தியன், சுயம் பிரகாசிக்கின்றவன், சர்வ வியாபி, சர்வ சக்தன், சர்வஞ்சன், சத்-சித்-ஆனந்தன்.அவனிலிருந்துதான் இந்த பிரபஞ்சம் உண்டாயிற்று என்று முன்பே கண்டோம்.
இதன் முழு அர்த்தமும் புரிய வேண்டுமென்றால் கர்ம்மம் என்றால் என்ன? அவையை எப்படி குழுக்களாக பிரிப்பது? என்ற கேள்விகளுக்கு பொருள் புரிய வேண்டும் நமக்கு.
முதல் கேள்வி கர்மம் என்றால் என்ன்?
‘க்ரி’ என்ற சொல்லிலிருந்து ‘க்ரியை’, ‘கர்மம்’ ‘கர்த்தா’ என்பன போன்ற சொற்கள் உண்டாகின்றன என்று கூறுகிறார்கள் சம்ஸ்க்ரித மொழி வல்லுனர்கள்.
க்ரி’ என்றால் ‘செய்வது’ ‘வினையாற்றுவது’ என்று பொருள். ஆகவே ‘கர்மம் என்றால் செயல், வினை என்று புரிந்து கொள்ளலாம்.
செயல் அல்லது வினை என்றால் ஸ்தூல சரீரத்தின் மூலமாக செய்யப்படுகின்ற செயல்கள் மட்டு மல்ல; மனதால் நினைக்கப்படுகின்றவையும் செயல்கள் தான்.’மனஸா’ வாசா, கர்மணா- மனதால், வாக்கால், செயலால் ஆற்றப்படுகின்றவை எல்லாம் கர்ம்ம் என்ற சொல்லில் அடங்கும். எண்ணங்களும் செயல்களின் விளைவுகளும் கர்மத்தில்ப்படும்.
இந்த கர்மங்களை எப்படி தரம் பிரிக்கலாம்? ஆச்சாரியர்கள் ‘சஞ்சித கர்மம்’., ப்ராரப்த கர்மம்’ ‘ஆகாமி கர்மம் என்று மூன்றாகப் பிரித்துள்ளார்கள்.
ஒரு ஜீவன் இந்த பிரபஞ்சத்தில் தோன்றும்பொழுது முன் ஜன்மங்களில் அது செய்து கூட்டிய வினைகளின் பயன்களை  சேகரித்து அந்த சேகரத்துடன் பிறக்கிறது            .’சஞ்சித”என்ற வார்த்தையின் பொருள் ‘சேகரித்து வைக்கப்பட்ட’,’ குவிக்கப்பட்டுள்ள’ என்று கொள்ளலாம். அப்படி சேகரிக்கப்பட்டுள்ள கர்ம பலன்களை முழுவதுமாக ஒரு பிறவியில் அனுபவித்துத் தீர்க்க முடியாது. ஆகவே குவியலலிருந்து ஒரு பகுதி நாம் பிறக்கும்பொழுது அந்தப் பிறவியில் அனுபவித்துத் தீர்க்கவேண்டியது என்ற ரீதியில் நம்முடன் வருகிறது. இதை பிராரப்த கர்ம என்கிறார்கள். பிராரப்த கர்மத்தின் அளவை யார் நிர்ணயிக்கிறார்கள்? இதற்கு பகவான் ரமணர் ஒரு பக்தருக்கு அளித்த பதில் நம்மை திருப்திப் படுத்தும் என்று எண்ணுகிறேன்.
பகவான் ரமணர் உபதேச சாரத்தில் கூறுகிறார்:” கர்த்துராக்ஞ்சயயா ப்ராப்யதே ஃபலம்( கன்மம் பயன் தரல் கர்த்தன்னது ஆணயால்-உபதேச உந்தியார்)”.அந்த கர்த்தர் யார் என்ற கேள்விக்கு பகவான் ரமணர் கூறுவார்:
“கர்த்தா ஈசுவரனே.! அவரவர் கர்மங்களைப் பொறுத்துப் பலன்களை கொடுப்பவன் அவனே.சகுணபிரம்மம் என்று அர்த்தம்.வாஸ்தவத்தில் பிரம்மம் என்றால் நிர்குணம்; அசலம்.அதுவே குணங்களும் சலனமும் உள்ளதாக உலக வியவகாரத்தை நடத்தி வைக்கும்பொழுது சகுண பிரம்மம் எனப்படுகிறது.சகுணபிரம்மத்திற்கே  ஈசுவரன் என்று பெயர்.அவன் அவரவர் கர்மங்களுக்கேற்ப பலன் கொடுப்பவன்.ஒரு ஏஜண்டு.என்று சொல்லலாம்.வேலைக்கேற்ப சம்பளம் கொடுப்பவன்.அவ்வளவு தான்.அந்த ஈசுவரனின் சக்தியில்லாமல் இந்த கர்மா நடக்காது.அதனால்த் தான் ‘கர்மத்தை ஜடம்’ என்றார்கள் பெரியோர்கள்.இதுதான் அதன் உட்கருத்து.”
இந்த கர்மங்கள் எப்படி சேகரித்து வைக்கப்படுகின்றன? இந்த இடத்தில் ‘சம்ஸ்காரா’ என்ற இன்னொரு சொல்லின் பொருளை புரிந்துகொள்ள வேண்டும்.சித்த விருத்தி என்பது மனதில் நமது சித்தத்தில் ஏற்படும் எண்ண அலைகள்,அல்லது சுழல்கள் எனலாம்.இந்த எண்ண அலைகள் உயிரோட்ட்த்துடன் மேல்மனதில் இருந்து செயலாற்றத் தூண்டுகின்றன. செயலாற்றினாலும் இல்லையெனிலும் சிறிது காலத்திற்குப் பின் அடிமனதிற்கு தள்ளப் படுகிறது.அவை அழிவதில்லை.அங்கு நீறு பூத்த நெருப்பாக உற்ங்கிக் கிடக்கும்..இப்படி பதிந்து கிடக்கும் எண்ணங்கள் தான் ‘சம்ஸ்காரம்’ எனப்படுகிறது..நமது கடந்தகால செயல்கள், சிந்தனைகள், , கோப-தாபங்கள், விருப்பு-வெறுப்பக்கள் எல்லாம் ஒரு அணு போலும் பிசகாமல் நஷ்டமடையாமல் பதிந்து கிடக்குமிவை மற்றொரு சந்தர்ப்பத்தில் மேல் மனதிற்கு பொந்தி வரும்பொழுது அது பெரிய அலையாக வரும்.
ஒருமுறை ரசகுல்லா சாப்பிட்டீர்களேயானால், ரசகுல்லாவின் நிறம், உருவம், ருசி எல்லாம் அடிமனதில் பதிந்து விடுகிறது. வேறொரு சந்தர்ப்பத்தில் ரசகுல்லாவை பலகாரக்கடையின் கண்ணாடி அலமாரியிகல் பார்க்கும்பொழுது  நீங்கள் வருடங்களுக்குமுன் சாப்பிட்ட ரசகுல்லாவின் ருசி உங்கள் மேல் மனதிற்கு வந்து மீண்டும் ரசகுல்லாவை வாங்கத் தூண்டும்.இது தான் ‘சம்ஸ்காரம்’ என்பதின் பொருள்..
ஒரு தேகத்தை விட்டு உங்கள் ஆத்மா வேறொரு தேகத்தை அடைக்கலமாகும்பொழுது இந்த சம்ஸ்காரம் ப்ராரப்த கர்ம்மாக வருகிறது.
சம்ஸ்காராம் முன் ஒரு பிறவியிலிருந்து மட்டும் தான் வருகிறது என்றில்லை.எண்ணற்ற முன் சன்மங்களின் சம்ஸ்காரங்கள் அந்தக்கரணத்தில் உறைந்து கிடக்கின்றன்.அவையெல்லாம் பிறக்கும் பொழுது உடன் வருகின்றன,
இந்த சம்ஸ்காரங்கள் தான் வாசனைகளாக உருவெடுக்கின்றன.
இதன் ஆரம்பம் எது என்று சொல்வதற்கில்லை. அனாதி என்று சொல்ல்லாம்.இதன் ஒரு பகுதி தான் ப்ராரப்த கர்ம்மாக மாறுகிறது.
இப்படி நம்முடன் பிறவியிலேயே நம்முடன் வரும் பிராரப்த கர்மம் ஆரம்பிக்கப்பட்ட கர்மம்; நிறுத்த இயலாதது.அவை அனுபவங்களாக இந்த பிறவியில் உருவெடுக்கிறது.அப்படி நமக்கு ஏற்படுகின்ற அனுபவங்களின் பொழுது நாம் ஆற்றுகின்ற செயல்களினால் உளவாகின்ற பலன்கள் ஆகாமி கர்மம் எனப்படுகிறது..
பிராரப்தம் முடிந்துவிட்டால் ஆத்மா அந்த தேஹத்தைவிட்டு இன்னொன்றைத் தேடிப் போகிறது புதிய சஞ்சித கர்மாக்களுடன்.
இன்னொரு விதத்தில் கர்மங்களை தரம் பிரிப்பதுமுண்டு
மனிதனின் மனப்பான்மைக்கு ஏற்றபடி கர்மங்கள் வெவ்வேறு வடிவெடுக்கின்றான..முக்கியமான வடிவங்கள் கீழ்க்கண்டவையாகும்:
·         நித்திய கர்மம்-------எதைச் செய்தால் புண்ணியமில்லையோ, ஆனால் செய்யாவிட்டால் பாபமேற்படுமோ , அது நித்திய கர்மம் உண்பது,உறங்குவது,நீராடுவது,முதலியன.
·         நைமித்திக கர்மஃம்--------சில சந்தர்ப்பங்களை முன்னிட்டு ஆற்றும் கர்மங்கள் நைமித்திக கர்மங்கள். ஏகாதசி விரதம்,சிவராத்திரி விரதம்,கிரகண வேளை
·         காமிய கர்மங்கள்---------சில காரிய சித்திக்காக செய்யும் கர்மங்கள்—பொருள் வேண்டி,பதவி வேண்டி முதலியன
·         நிஷித்த கர்மங்கள்------செய்யக் கூடாத கர்மங்கள்
ஆனால் பூந்தானம் இந்த பிரிவுகளையெல்லாம் விட்டு விட்டு சாமானியர்களும் புரிந்து கொள்ளும்படியாக மூன்றுவிதமான கர்மங்களைக் குறிப்பிடுகிறார்:
·         புண்ணிய கர்மங்கள்
·         பாப கர்மங்கள்
·         புண்ணிய-பாப கர்மங்கள்.
எல்லா ஜீவாத்மாக்களும் பரமாத்மாவின் அம்சமே; எல்லோருள்ளும் ஒளிர்ந்து கொண்டிருப்பது அந்த பரம சைதன்யமே;ஒருவனுக்கு நன்மை பயக்கும் கர்மம் எல்லோருக்கும் நன்மை பயக்க வேண்டும் அது புண்ணிய கர்மம். தனக்கு மட்டும் நன்மை பயக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செய்யப் படும்  கர்மங்கள் பாப  கர்மங்கள். ஆனால் சந்தர்ப்பத்தைப் பொறுத்து இந்த வியாக்கியானம் மாறலாம். ஆகவே பூந்தானம் மூன்றாவது ஒரு வகை கர்மத்தைக் குறிப்பிடுகிறார். அது தான் புண்ணிய பாபகர்மங்கள்.
ஒரு முறை ஒரு நீதிமானான அரசன் கொள்ளையரிடமிருந்து தப்பிப்பதற்காக ஓடி ஓடி ஒரு நதிக்கரையை வந்தடைந்தான். அங்கு பாதை நான்காகப் பிரிந்தது. அவன் கிழக்கு  நோக்கிச் செல்லுமுன் அங்கு அரச மரத்தடியிலமர்ந்திருந்த முனிவரிடம் “நான் எந்த திசையில் போனேன் என்று என்னைத் துரத்தி வரும் கொள்ளயரிடம் கூறாதீர்கள். அப்படிக் கூறினால் என் உயிருக்கும் நாட்டிற்கும் கேடு விளையும்” என்று சொல்லிவிட்டு ஓடி மறைந்தான்.
அந்த முனிவர் பொய் சொல்லாத சத்திய சந்தர். அவர் தர்ம சங்கடத்தில் அகப்பட்டுக்கொண்டார்.
கொள்ளையர் வந்ததும் அவர் நாவிலிருந்து உண்மை தான் வெளிவந்தது. கொள்ளையர் அரசனை துரத்திச் சென்று பிடித்துக் கொன்றுவிட்டார்கள்.
முனிவர் உண்மை பேசியதன் மூலம் புண்ணியம் தேடிக்கொண்டாரா? ஒரு நல்ல அரசனை கொள்ளையரிடம் சிக்கவைத்து நாட்டிற்கு கேடு விளைவித்ததின் மூல பாபம் தேடிக்கொண்டாரா?
இப்படி எவ்வளவோ கர்மங்கள் புண்ணியம் என்றோ பாபம் என்றோ பிரிக்க முடியாமலிருக்கும்.அவைகளைத்தான் பூந்தானம் புண்ணிய-பாப கர்மங்கள் என்று சொல்லுகிறார் போலும்.
இப்படிப்பட்ட கர்மங்களால் நாம் எவ்வாறு பாதிக்கப் படுகிறோம்? அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.அதுவரை பூந்தானத்துடன் நாமும் பகவத் நாமம் சொல்லுவோம்.
.
கிருஷ்ண கிருஷ்ணா ! முகுந்தா!ஜனார்தனா!
கிருஷ்ணா! கோவிந்தா! நாராயாண ! ஹரே!
ஸச்சிதானந்தா ! நாராயண! ஹரே

அச்யுதானந்தாகோவிந்தாமாதவா!

 

No comments:

Post a Comment