Friday 8 January 2016

ஞானப்பானா –கிருஷ்ண கீதை 19

ஞானப்பானா –கிருஷ்ண கீதை 19

அத்தியாயம் 19 ஒன்றும் மூன்றும் 4

கிருஷ்ண கிருஷ்ணா ! முகுந்தா!ஜனார்தனா

கிருஷ்ணா! கோவிந்தா! நாராயாண ! ஹரே!

அச்யுதானந்தா! கோவிந்தா! மாதவா!

ஸச்சிதானந்தா ! நாராயண! ஹரே

            மூன்னுமொன்னிலடங்குன்னு பின்னெயும்

            ஒன்னுமில்லபோல் விசுவமன்னேரத்து


 இந்த அத்தியாயத்தில் இன்னொரு மூன்றைப் பார்ப்போம். அது தான் ஜீவாத்மாக்கள் அனுபவிக்கின்ற அவஸதா த்ரயம். அதாவது மூன்று நிலைமைகள். அவை முறையே ஜாக்ரத்-விழிப்பு, ஸ்வபனம்-கனவு, சுழுப்தி- ஆழ்ந்த உறக்கம் என்பவையாகும். இவைகளைக் குறித்துள்ள சரியான விளக்கம் மாண்டூக்கியோபனிஷத்தில் காணப்படுகிறது.
பிரகிருதியின்  மூன்று குணங்களும் மாண்டூக்கியோபனிஷத்தில் விவரிக்கப் பட்டுள்ள அவஸ்தா த்ரயங்களுடன் தொர்புடையாகவிருக்கின்றன.. ஜாக்ரத்திலும் ஸ்வப்னத்திலும் ரஜோ குணம் மேலோங்கி நிற்கின்றது.. சுஷுப்தியில் தமோகுணம் மட்டுமே மேலோங்கி நிற்கின்றது. .
உபனிஷத் மந்திரங்களின் உதவியுடன் இன்னும் சற்று விரிவாக பார்ப்போம்.
மாண்டூக்கியோபனிஷத் மாண்டூக முனிவரால் இயற்றப்பட்டது. நாமறிந்த 108 உபனிஷத்துக்களில் இதுவே மிகச் சிறிய உபனிஷத் எனலாம். பன்னீரண்டு சுலோகங்கள் அல்லது மந்திரங்களை மட்டுமே கொண்டது இந்த உபனிஷத். ஆனால் இந்த உபனிஷத் எல்லா உபனிஷத்துக்களின் சாரத்தையும் உட்கொண்டது என்று ஆச்சாரியர்கள் சொல்லுகிறார்கள். ஆகவே இது மிகவும் முக்கியமான உபனிஷத்தாக்க் கருதப்படுகிறது.

         माण्डूक्यम् एकम् एवालम् मुमुकषानाम् विमुक्तये

 முக்தியை நாடுகிறவர்களுக்கு மாண்டூக்கியோபனிஷத் ஒன்றே போதும் என்கிறார்கள் ஞானிகள்.. இந்த உபனிஷத்திலுள்ள மந்திரங்களின் பொருள் புரியவில்லையென்றால் மற்ற எந்த உபனிஷத் படித்தும் பயனில்லை.ஏனென்றால் ஜீவாத்மாக்களின் மனதின் இயற்கை குணங்களை இந்த உபனிஷத்தில் கூறியுள்ளது போல் வேறெந்த உபனிஷத்திலும் கூறப்படவில்லை. இதில் உதாரணங்கள் இல்லை; கதைகள் இல்லை; ஒப்புனோக்குகளும் இல்லை. உண்மை மட்டுமே தான் உள்ளது.
இந்த உபனிஷத் ஆரம்பிக்கின்றதே மஹா மந்திரமான ‘ ஓம்” என்ற ஒற்றைசொல்லுக்கான விளக்கத்துடன் தான். தமிழில் இது இரண்டு எழுத்துக்களாக எழுதப்படுகின்றது என்றாலும் அது மூன்று எழுத்துக்களின் கூட்டே ஆகும் .உபனிஷத் என்ன சொல்லுகிறது என்று பார்ப்போம்.

                    ओमित्येतदक्षरमिदम् सर्वम् तस्योपव्याख्यानम्

                       भूतम् भवद्भाविश्यदिति सर्व्मोन्गार एव

                     यच्चान्यत् त्रिकालातीतम् तदप्योम्कार एव !


                   ஒமித்யேதத் அக்ஷரமிதம் சர்வம், தஸ்யோபவ்யாக்யானம்
           பூதம் பவத் பவிஷ்யத் இதி சர்வம் ஓம்கார ஏவ
           வச்சான்யத் த்ரிகாலாதீதம் தத் அப்யோம்கார ஏவ!

ஓம்! இதுவே அனசுவரமான பிரபஞ்சம். இதுவே காணப்படுகின்ற பிரபஞ்சமும். நிகழ்ந்தவை, நிழ்கின்றவை, நிகழப்போகின்றவை எல்லாமே ‘ஓம்’காரத்தில் அடக்கம்.முக்காலங்களுக்கு அதீதமான வேறெதுவும்  இருந்தாலும் அதுவும் இந்த ஒன்றில் அடங்கும்.
பூந்தானத்தின் வரிகளை நினைவுகொள்வோம்.

மூன்னுமொன்னிலடங்குன்னு பின்னெயும்

காணப்படுகின்றவை, உணரப்படுகின்றவை, எல்லாமே ஓம்காரத்தில் அடங்கும். நாம் தினமும் ‘ஓம்” என்ற வார்த்தையுடன் தான் எல்லா மந்திரங்களையும் ஆரம்பிக்கிறோம்; ஒருவருக்கொருவர் வந்திக்கும்பொழுதும் ‘ஓம்” அல்லது ‘ஹரி ஓம்’ அல்லது “ஓம் நமச்சிவாயா”  என்று சொல்லுகிறோம். ’ஓம்’ காரம் தான் எல்லாபவற்றின் ஆரம்பமும். ‘ஓம்” தான ப்ரணவம். இது தான் முதன் முதலில் தோன்றிய ஒலியாக இருக்கவேண்டும்.ஆகவே தான் ‘ஓம்’காரத்தை பீஜாக்ஷரம் அல்லது பீஜ மந்திரம் என்கிறர்கள். இது வைதீக முறையிலானாலும் தாந்திரிக முறையிலினாலும் உண்மையே.
இது மொழிகளைத் தாண்டிய மந்திரம். இது எல்லா நாம-ரூபங்களுக்கும் பொருந்தும்.
‘ஓம்’ என்பது ‘அ’ ‘உ’ ‘ம்’ என்கின்ற மூன்று அக்ஷரங்களின் கூட்டே.
இதன் முக்கியத்துவம் , இதிலிருந்து தான் ‘பூஹ:’ ‘புவஹ:’ ‘ஸ்வஹ:” என்ற மூன்று வ்யாஹ்ரிதிகளும் உளவாகின்றன என்பதிலிருந்து தெளிவாகிறது. இந்த மூன்று ‘வ்யாஹ்ரிதிகளிலிருந்து தான் காயத்திரி மந்திரத்தின் மூன்று பாதங்களும் உண்டாயிற்று. காயத்திரியின் மூன்று பாதங்களிருந்து தான் புருஷ சூக்தத்தின் மூன்று பகுதிகளும் தோன்றின.
‘ஒம்;’ என்பது வெறும் வாயினால் உச்சரிக்கப்படுகின்ற ஒரு சொல் அல்ல. அதிலிருந்து இந்த மாயா பிரபஞ்சமே உண்டாயிற்று. இது பிரம்மனின் பிரணவ ஒலி. நாம் ஓம் என்று உச்சரிக்கும்பொழுது உண்டாகின்ற சலனம் பிரபஞ்ச உற்பத்தியோடு ஒன்றி போகின்றது.
‘ஓம்’ என்பது ‘அக்ஷரம்’-நாசமில்லாதது. பிரபஞ்சத்திலுள்ள எல்லா பொருள்களும் இல்லாதாகலாம்; ஆனால் ‘ஓம்’ என்கின்ற பிரணவ ஒலி நிலைத்து நிற்கும்.
அது காலங்களை கடந்தது, மூன்று காலங்களிலும் உள்ளது; காலங்களை கடந்தும் உள்ளது.
‘ஓம்’ என்பது மூன்று எழுத்துக்களைக் கொண்டது என்று சொல்லப்பட்டது.’அ’ என்று உச்சரிக்கும்பொழுது நாம் உதடுகளைப் பிரித்து வாயை நன்றாக திறந்து உச்சரிக்கிறோம்; ‘உ’ என்கின்ற பொழுது உதடுகள் குவிய ஆரம்பிக்கின்றது; வாய் மூட துவங்குகின்றது; ‘ம்’ என்கின்றபொழுது உதடுகல் ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்கிறது. அதற்கு பின் நிசப்தம்; ஒரு விதமான சலனமற்ற அமைதி; அங்கு ஒலி-ஓசை கிடையாது.இதை ‘அமாத்ரா’ என்று சம்ஸ்கிருதத்தில் சொல்லுவார்கள்.’அமாத்ரா’ என்றால் அளப்பற்கரிய,என்று பொருள். ‘ஓம்’காரத்தின் வலிமையை அளக்கமுடியாது.
அது வெறும் ஒலியல்ல; அதுவே சத்சிதானந்தம்- ஈசுவரன் , பரபிரம்மம் அதுவே நேற்று, இன்று, நாளை. நாளைக்குப்பின்னும் அதுவே உண்மை;
மாண்டூக்யோபனிஷத்தின் இரண்டாவது சுலோகம் அல்லது மந்திரம் இந்த உண்மையை மேலும் வலுப்படுத்துகிறது.

                          सर्वम् ह्येतद् ब्रह्मायमात्मा ब्रह्म,

                           सोअयमात्मा चतुषपात्

                    சர்வம் ஹ்யேத்த் ப்ரம்மாயமாத்மா ப்ரம்ம

                     சோஅயமாத்மா சதுஷ்பாத்

எல்லாம் பிரம்ம்ம் மாத்திரமே; ஜீவாத்மா-நானும் பிரம்ம்மே; இந்த பிரம்மத்திற்கு நான்கு பாதங்கள்
இந்த பிரபஞ்ச படைப்புக்கள் அனைத்துமே பிரம்ம்மே ‘இதுவே’ ‘அது’. ’இது’ என்றால் நம் அருகாமையில் இருப்பது; ‘அது’ என்றால் தொலைவில் இருப்பது. அருகாமையில் இருப்பது எப்படி தொலைவில் இருப்பது ஆகும்? ‘இது’ ‘அது’ வாக இருக்க வேண்டுமென்றால் அங்கு இரண்டு பொருட்கள் இருக்க முடியா. இரண்டும் ஒரே பொருளாக இருக்க வேண்டும்.ஆகவே தான் நமது ஸ்ருதி-ஸ்ம்ரிதிகள் சொல்கின்றன, ‘ ஏதத் வை த்த்”
நம் அருகிலுள்ள- நாம் காணுகின்ற இந்த பிரபஞ்சம் நம்மிலிருந்து வெகு தூரத்திலிருப்பதாக நாம் எண்ணும் பிரம்மமே. ஆனால் நாமும் இந்த பிரபஞ்சத்தின் ஒரு பகுதியே என்பதால் நாமும் பிரம்ம்மே. அப்பொழுது பிரம்மம் நம் அருகாமையிலேயே- நம்முள்ளேயே உள்ளது. ஆகவே ‘அது’ தான் ‘இது’.
அதாவது ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றே; ஆதை நாம் அறிவதில்லை. அது நமது அஞ்ஞானம்.
‘தத்துவமசி’ என்பதன் பொருளும் இதுவே. ‘த்த்’ த்வம்’ அஸி’ அதுவே நீயாக இருக்கிறாய். நான் பிரம்ம்ம்; நீயும் பிரம்ம்ம்; ஆகவே சர்வம் பிரம்ம்ம்.
இப்படிப்பட்ட ஆத்மா நான்கு பாதங்களுடையவை என்பது இரண்டாவது பகுதி. அது என்ன நான்கு பாதங்கள்? பாதங்கள் என்பது ஆத்மாவின் நான்கு நிலைகள்.
மூன்றவது மந்திரம் துவங்கி அவை விளக்கப்படுகின்றன..

                          जागरितस्थानो बहिष्प्रज्ना: सप्तान्ग

                         एकोनविम्सति-मुख्: स्थूलभुग्वैश्वानर

                                    प्रथम: पाद:

              ஜாகஅரித ஸ்தானோ பஹிஸ்ப்ரஜ்னா சப்தாங்க

              ஏகோனவிம்சதி முக: ஸ்தூல புக் வைஸ்வானர:

                                    ப்ரதம: பாத:

ஸ்தூலமான பௌதிக பொருட்களை உண்டு களிக்கின்ற வைஸ்வானரன் வசிக்கின்ற அவஸ்தை தான்  ‘ஜாக்ரத்’ எனும் விழிப்பு நிலை  ‘ஸ்தூல புக்’ .இந்த நிலையில் நமக்கு வெளியே உள்ள பொருட்களை- யாதொன்றை நம்மால், காணமுடிகின்றதோ, யாதொன்றை நம்மால் தொட முடிகின்றதோ,யாதொன்றின் ஒலியை நம்மால் கேட்க முடிகின்றதோ, யாதொன்றின் கந்தத்தை மணக்க முடிகின்றதோ ,யாதொன்றின் சுவையை ருசிக்க முடிகின்றதோ –அந்த ஸ்தூல பொருட்களையே நாம் உண்மை என்று எண்ணுகிறோம்.நாம் நம்மிலிருந்து வேறு என்று எண்ணுகின்ற பொருட்களின் சகவாசத்தால் அடையும் அனுபவத்தில் வாழ்கிறோம். அந்த அனுபவங்களுக்காக செயலாற்றுகின்றோம். நாம் புத்தகங்களை படிக்கின்றோம், சங்கீத்த்தை கேட்கின்றோம், மலரின் நறுமணத்தை முகருகின்றோம், நல்ல உணவு பதார்த்தந்தங்களை சுவைக்கின்றோம். இந்த செய்கையிலெல்லாம் நம்மைத் தவிர வேறு பொருட்கள் இருக்க காணுகிறோம்.அந்த பொருட்கள் நாம் எதிர்பார்க்கின்ற சுகத்தை தரவில்லையென்றால் ஏமாற்றம்
அடைகிறோம்; துன்ப்ப் படுகிறோம்.அடைந்து விட்டால் இன்பமுறுகிறோம்.
மேலும் இந்த மந்திரம் இந்த அவஸ்தையில் இருக்கின்ற ஆத்மா வைஸ்வானரன் என்றறியப்படுகிறான். அவன் சப்தாங்கன்—அதாவது ஏழு அங்கங்களையுடையவன். மட்டுமல்ல, பத்தொன்பது வாய்களையுடையவன். --ஏகனோவிம்சதி     .
ஸப்தாங்கங்கள் யாவை, பத்தொன்பது வாயில்கள் எவை என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம். அதுவரை பகவன் நாம்ம் சொல்லிப் பாடுவோம்.                                   

                 கிருஷ்ண கிருஷ்ணா ! முகுந்தா!ஜனார்தனா!

                       கிருஷ்ணா! கோவிந்தா! நாராயாண ! ஹரே!                                                                  

                       அச்யுதானந்தா! கோவிந்தா! மாதவா!

                       ஸச்சிதானந்தா ! நாராயண! ஹரே




 

No comments:

Post a Comment