Friday 1 January 2016

ஞானப்பானா ---கிருஷ்ணகீதை 16

ஞானப்பானா ---கிருஷ்ணகீதை 16

அத்தியாயம் 16 ஒன்றும் மூன்றும்

                     

ஞானப்பானா ---கிருஷ்ணகீதை 16

அத்தியாயம் 16 ஒன்றும் மூன்றும்   



                        கிருஷ்ண கிருஷ்ணா ! முகுந்தா!ஜனார்தனா!

                                      கிருஷ்ணா கோவிந்தாநாராயாண ! ஹரே!

                                      அச்யுதானந்தாகோவிந்தாமாதவா!

                          ஸச்சிதானந்தா ! நாராயண! ஹரே

        

மூன்னுமொன்னிலடங்குன்னு பின்னெயும்

ஒன்னுமில்லபோல் விசுவமன்னேரத்து

                

இந்த வரிகளில் பூந்தானம் இரண்டு பதங்களை கையாண்டு நம்மையெல்லாம் வியப்பிலாழ்த்துகிறார். ‘மூன்றும் ஒன்றில் அடங்கிவிடுகிறது; அப்பொழுது எதுவுமே இல்லாமல் ஆகிவிடுகிறது’ என்கிறார் பூந்தானம்.
எந்த மூன்று? எந்த ஒன்று?
ஒன்று என்பது பரமாத்மனைக் குறிக்கும். பரமாத்மன் அல்லது பர பிரம்மம் ஏகன், அத்விதீயன், அவனன்றி வேறொன்றில்லை, ஓங்காரஸ்வரூபன்,அக்ஷரன்( நாசமில்லாதவன்), ஆதியும் அந்தமும் இல்லாதவன், அவ்யக்தன், அவனே நிர்குணன், சகுணன், நித்தியன், சுயம் பிரகாசிக்கின்றவன், சர்வ வியாபி, சர்வ சக்தன், சர்வஞ்சன், சத்-சித்-ஆனந்தன் என்றெல்லாம் முன் அத்தியாயங்களில் சொன்னோம். அவனை பட்டினத்தார் கீழ்க்கண்டவாறு பாடியுள்ளார்:

                    ஓத எளிதோ? ஒருவர் உணர்வரிதோ?

                   பேதமற எங்கும் விளங்கும் பெருமையங்காண்.

                    வாக்கு மனமுங்கடந்த மனோலயங்காண்.

                   நோக்க அரியவங்காண்,நுண்ணியரில்                                                       நுண்ணியன்காண்

                  சொல்லுக்கடங்கான்காண்,! சொல்லிறந்து நின்றவன்                                                       காண்!

                   கல்லு ளிலிருந்த கனலொளிபோ நின்றவங்காண்!

“ஓதுவதற்கு எளிதல்ல; அவனைப்பற்றி சொல்ல வார்த்தைகள் போரா.;யாராலும் எளிதாக உணர்ந்து கொள்ள முடியாதவன்; பேதமில்லாமல் எல்லா ஜீவராசிகளிலும் அசேதனங்களிலும் ஒருங்கே காணப்படுபவன்; வார்த்தைகளினாலோ மனத்தாலோ உருவகப்படுத்தமுடியாத அவைகளை கடந்து நம்மில் லயித்துள்ளவன்; காண்பதற்கு எளிதில் கிடைக்காதவன்,சிறிய அணுவிலும் சிறியவனாக அணுக்களில் காண்பவன்,சொல்லுக்கடங்காதவன்; அவனைக்கண்டுவிட்டாலோ சொல்லின்றி நம்மை வாயடைத்து போக செய்கிறவன்;கல்லுக்குள்( மலையில்) அக்னிப்பிழம்பாகத்  தோன்றியவன்.”
அப்படிப்பட்ட ஒருவனில்-ஒன்றில் மூன்றும் லயிக்கின்றது.
எந்த மூன்று?
நமது வேத உபனிஷத்துக்கள் நிறைய ‘மூன்றுகள்’ குறிப்பிட்டுள்ளது.
·         பரமாத்மா ( நிர்குணபிரம்மம், ஸகுண பிரம்மம்), பிரகிருதி( மஹா மாயா, யோக மாயா, லோக மாயா),ஜீவாத்மா   
·         மும்மூர்த்திகள்
·         முப்பெரும் தேவிகள்
·         சிருஷ்டி, பாலனம், சம் ஹாரம்
·         பிரகிருதியின் முக்குணங்கள்
·         ஜீவாத்மாவின் அவஸ்தாத்ரயம்  
·         ஞாதா, ஞேயம், ஞானம்     
·         பூதம், நிகழ்காலம், வருங்காலம்
முதல் மூன்றைக் குறித்து முன் அத்தியாயத்தில் நிறைய சொல்லப்பட்டுவிட்டது.
சகுண பிரம்மத்தின் மூன்று தோற்றங்களான மும்முர்த்திகளைக்குறித்து சற்றே பார்ப்போம்.
விஷ்ணு புராணத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது:
“ஏகனாயிருக்கின்ற பகவான் ஜனார்த்தனன் சிருஷ்டி-ஸ்திதி-சம் ஹாரங்களை ஆற்றுவதற்காக பிரம்மா, விஷ்ணு, மஹேசுவரன் என்ற மூன்று பெயர்களை தனதாக்கிக் கொள்கின்றான்.’
சர்வாத்மகனான, கால-தேசங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவனான நிர்குண்பிரம்மம், சிருஷ்டி-ஸ்திதி-சம் ஹார கர்மங்களை அனுஷ்டிப்பதற்காக காலதேசமாறுபாடுகளுக்கு உட்பட்டு, சகுணனாக மூர்த்தி திரயமாக ( மும்மூர்த்திகளாக) தோற்றம் எடுக்கின்றது.
இன்னொரு விதத்தில் சொல்லப் போனால் சர்வேசுவரனுடைய இச்சா, ஞான, க்ரியா சக்திகள் தான் மும்முர்த்திகள் எனப்படுவர்.
மும்மூர்த்திகள் முப்பெரும் தேவிகளுடன் இணை பிரியாமல் இருந்து அவரவர்களின் கருமங்களை ஆற்றுகிறார்கள்.
பிரம்மா சிருஷ்டிக்கு அதிபதி.அவருடைய சக்தி ஞான ஸ்வரூபிணியான ஸரஸ்வதி-கலைமகள் என்றறியப்படுகிறாள்.ஞானத்தின் அதிஷ்டான தேவதையாக இருக்கின்ற கலைமகளின் உதவியில்லாமல் பிரம்மாவால் சிருஷ்டி கர்மத்தை செயலாக்க முடியாது. அவர் நான்முகன்- நாலு முகங்களையுடவர். ஏனென்றால், நாலாப்பக்கமுமள்ள சகல வஸ்துக்களையும் அவர் சிருஷ்டிக்கிறார் என்பதால்.
அவரது வாஹனம் அன்னம்-ஹம்ஸம். ஹம்ஸம்  என்பது சம்ஸ்கிருதத்தில் “ஸ:: அஹம்”—அதாவது ஸோஹம் என்பதின் மறு உருவம். ‘அஹம் புத்தியோடுள்ள ஜீவராசிகளை சிருஷ்டிப்பதால் அவர் ஹம்ஸத்தை வாஹனமாக கொண்டுள்ளார்.
விஷ்ணு பகவான் பிரம்மாவால் சிருஷ்டிக்கப்படுகின்ற எல்லா ஜீவராசிகளையும் பரிபாலித்து-காத்தல்,தனது கருமத்தை ஆற்றுகிறார்.
அவர் எப்பொழுதும் அந்தர்யாமியாக-எல்லோர் உள்ளிலிருந்துகொண்டு,பிரபஞ்சத்தை நடத்திக்கொண்டு செல்கிறார். அதற்கான சக்தி, எல்லா செல்வங்களுக்கும் அதிகாரியான சாக்ஷாத் மஹாலக்ஷ்மியிடமிருந்து அவருக்கு கிடைக்கிறது.அதனால் அவர் ஸ்ரீனிவாசனாக பேசப்படுகிறார். ’ஸ்ரீ’ அவரிடம்-அவரது மார்பில் எப்பொழுதும் குடிகொண்டிருக்கிறாள். நாலாபக்கமும் இருக்கின்ற ஜீவராசிகளை காக்க வேண்டியுள்ளதால் நான்கு கைகளை கொண்டவராயிருக்கிறார்  
.’காத்தலுக்கு’ அவசியம் வேகமும் விவேகமும். இது இரண்டும் பொருந்திய கருடன் அவரது வாஹனமாக இருக்கிறான்.
சிவன் என்றோ மஹா தேவன் என்றோ மஹேசுவரன் என்றோ அழைக்கபடுகின்ற சகுண பிரம்மாவதாரம் தான் சம் ஹாரமூர்த்தி. ‘சம் ஹாரம்” என்ற சம்ஸ்க்ருத வார்த்தைக்கு பொருள் அழித்தல் என்பதல்ல; திரும்பப் பெற்றுக்கொள்ளுதல், உற்பத்தி ஸ்தானத்திற்கே திரும்புவதல்; லயித்தல் என்று கொள்ளலாம். பிரம்மா, விஷ்ணு, மஹாதேவன் மூன்றும் பரபிரம்மத்தின் வெவ்வேறு பரிமாணங்கள் என்பதை ஞாபகப்படுத்திக்கொண்டால் மஹாதேவனின் செயலின் பொருள் நமக்கு தெளிவாகப் புரியும்..
மஹாதேவன் நம்மை இந்த இஹலோக பந்தங்களிலிருந்து விடுவித்து பரமனுடன் சேர்த்துவைக்கின்ற  கர்மத்தின் அதிபதியாக விள்ங்குகிறார்.அவர் நம்மிலுள்ள அவித்யயை நாசமடைய செய்து நமக்கு முக்திக்கு வழிகாட்டுகிறார். அவர் நமக்கு நித்திய சாந்தியை தருகிறார்.அவருக்கு துணையாக இருப்பதோ உமா தேவியெனப்படும் இச்சா சக்தியின் பிரதீகமாயிருக்கின்ற,பிரம்ம வித்யா தான். அவள் நமக்கு பிரம்மத்தை காண்பதற்கும் அதிலேயே லயித்து நித்திய சாந்தியை பெறுவதற்கும் ஏதுவாகிறாள்.
மஹாசிவனோ சன்னியாசி கோலத்தில் காட்சியளிக்கிறார். அவர் ‘சர்வசங்க ப்ரிதியாகம்’ செய்த முனிவர்களின் பக்திக்கு பாத்திரமானவர் என்பதை அவரது வேஷ விதானங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
அவரது வாஹனமோ ரிஷபம் அல்லது காளைமாடு.அது மனதையும் ஸ்தூல பிரகிருதியையும் ஞாபகப்படுத்துவதாக உள்ளது. ரிஷப வாஹனன் மனோஜயன் என்பதைக் குறிக்கிறது. புலித்தோல் அவர் காமனை தஹனம் செய்தவர் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. காமன் காமனைகளின்—ஆசைகளின் பிரதிபலிப்பு. ஆசைகள்- ராகம் தான் சம்சார பந்தங்களுக்கெல்லாம் மூல காரணம். அதிலிருந்து தான் துவேஷமும், குரோதமும் வெறுப்பும் மனவிப்ராந்தியும் உளவாகின்றது.இவைகளை வென்று பரமான்ந்த ஸ்வரூபியாக காட்சியளிக்கும் ஈசுவரனை மஹேசுவரன், மஹா தேவன் என்று கூறுவதில் எந்த தவறும் இல்லை.
மேற்கூறிய விவரணங்களெல்லாம் பரப்பிரம்மம் மாயையால் ஆவரணம் செய்யப்பட்டு சிருஷ்டி-ஸ்திதி-சம் ஹார கர்மங்களை ஆற்றுகின்றது என்பதை ஆலங்காரிகமாக குறிப்பிடுவதாகும். மும்மூர்த்திகளும் முப்பெரும் தேவிகளும் ஒரே பிரம்மத்தின் வெவ்வேறு உருவகங்கள் தான் என்பதை மறக்க வேண்டாம்.
இனி அடுத்த அத்தியாயத்தில் பிரகிருதியின் முக்குணங்களை பார்ப்போம்.அதுவரை பகவத் நாம சங்கீர்த்தனம் செய்வோம்

 கிருஷ்ண கிருஷ்ணா ! முகுந்தா!ஜனார்தனா!
கிருஷ்ணா! கோவிந்தா! நாராயாண ! ஹரே!
அச்யுதானந்தா! கோவிந்தா! மாதவா!
ஸச்சிதானந்தா ! நாராயண! ஹரே




No comments:

Post a Comment