Friday 1 January 2016

ஞானப்பானா – கிருஷ்ண கீதை 18

ஞானப்பானா – கிருஷ்ண கீதை 18

அத்தியாயம் 18 ஒன்றும் மூன்றும் -3


கிருஷ்ண கிருஷ்ணா ! முகுந்தா!ஜனார்தனா!

கிருஷ்ணா! கோவிந்தா! நாராயாண ! ஹரே!

அச்யுதானந்தா! கோவிந்தா! மாதவா!

ஸச்சிதானந்தா ! நாராயண! ஹரே


மூன்னுமொன்னிலடங்குன்னு பின்னெயும்

ஒன்னுமில்லபோல் விசுவமன்னேரத்து

முன் அத்தியாயத்தில் பிரகிருதியின் முக்குணங்களால் தேஹி தேஹத்துடன் பந்திக்கப்படுகிறான்; அப்பொழுது அவனில் ஏற்படும் மாற்றங்கள் வெறும் மாயத்தோற்றங்களே என்ற்றியாத ஜீவாத்மாக்கள் அவித்யையில் கட்டப்பட்டு அஞ்ஞானத்தில் உழலுகிறார்கள் என்று கண்டோம். அதற்கு சான்றாக பகவத் கீதையிலிருந்து சில மேற்கோள்கள் காட்டினோம். அந்த வியாக்கியானத்தை தொடருவோம்.
பிரகிருதியின் முக்குணங்கள் எனப்படும் சத்வம், ரஜஸ், தமஸ் இவைகளின் தன்மை என்ன என்று சற்றே பார்ப்போம்.
முதலில் சத்துவ குணத்தைக் குறித்து அறிந்து கொள்வோம்.
பகவத் கீதை 14 ஆம் அத்தியாயம்- குணத்ரய விபாக யோகம் சுலோகம் ஆறில் பகவான் கிருஷ்ணர் கூறுவார்:

                                          तत्र शत्वम् निर्मलत्वात्प्रकाश्कमनामयम् !

                                          शुखशन्गेन बन्धाति झ्नशन्गेन चानक !!

                                          தத்ர ஸத்வம் நிர்மலத்வாத்ப்ரகாசகமனாயம் !

                                          ஸூகஸ்ங்கேன பத்னாதி ஞானஸங்கேன சானக !!

“ ஸத்துவ குணமானது களங்கமில்லாததும் ஒளி பொருந்தியதுமாக காணப்படுகிறது. அது எதற்கும் இடைஞ்சல் கொடுக்காததும் சுகபற்றுதலாலும் ஞானப்பற்றுதலாலும் தேஹியை தேஹத்துடன் பிணைக்கிறது”.
சத்துவகுணம் படைத்தவர்கள் அழுக்கு படியாத தூய கண்ணாடிக்கு ஒப்பாவார்கள். அப்படிப்பட்ட கண்ணாடி எவ்வாறு ஒளியை கடத்தி விடுமோ அதுபோல் சுயம்பிரகாசமானது. ஆகவே சத்துவகுண்முடையவர்கள் ஆத்மாவை எளிதில் அடையாளம் காண்கிறார்கள். பொருள்கள் அதன் மூல நோக்கும் பொழுது அவையின் உண்மை உருவத்திலே தெரிகிறது. அவை தரும் சுகமும் புலனாகிறது. அப்படிப்பட்ட சுகப்பற்று ஞானத்தை தேடி செல்லவைக்கிறது.
ரஜோகுணமோ ஆசையை வளர்க்கிறது. அது ஒருவனை எப்பொழுதும் வினை ஆற்றத் தூண்டுகிறது. வினை ஆற்றுவதற்கான தூண்டுதல் அவனை இஹலோகத்துடன் வலுவாக பிணைக்கிறது.
கீதையில் பகவான் சொல்லுவார்:

        ரஜோ ராகாத்மகம் வித்தி த்ருஷ்ணாஸங்கஸமுத்பவம் !

        தன்னிபத்னாதி கௌந்தேய கர்மஸங்கேன தேஹினம்  !!

ரஜோகுணம் ஆசையை வடிவெடுத்து முடிவில்லாத பிரவிருத்தியை உண்டு பண்ணுகிறது. அடையாத பொருளை அடைய வேண்டுமென்றுள்ள வேட்கை; அடைந்த பொருளை இழக்காமலிருக்க வேண்டுமென்றுள்ள வேட்கை; எரிகின்ற நெருப்பில் விறகை போடப்போட விறகை சாம்பலாக்கி இன்னும் வேண்டும் என்ற ஆசையை தூண்டும்.ஆத்மாவை கர்ம்ம் செய்யவைப்பதன் மூலம் ‘கர்த்ரு’ மனோபாவத்தை உண்டு பண்ணுகிறது ரஜோகுணம்.
தமோகுணமோ சோம்பலை உளவாக்கி மயக்கத்தில் ஆழத்துகின்றது.அது அஞ்ஞானனத்திலிருந்து உண்டாகின்றது.அது விவேகத்தை மறைக்கின்றது. ரஜோ குணம் வேகத்தின் மூலம் விவேகத்தை மறைக்கின்றது; தமோகுணம் ஜடத்தன்மை அல்லது வேகமின்மை மூலம் விவேகத்தை அழிக்கின்றது.
                                                                      ‌तमस्थ्वज्नानजम् विद्धि मोहनम् शर्वतेहीनाम् !
                                   प्रमादालस्यनिद्राभिभिस्तन्निब्न्धाति भारत !

         தமஸ்த்வக்ஞானஜம் வித்தி மோஹனம் ஸர்வதேஹீனாம்!

                                                                                     ப்ரமாதாலஸ்யனித்ராபிஸ்தன்னிபத்னாதி பாரத !

                                                     ப.கீ 14 -8
இந்த மூன்று குணங்களில் எது முந்தி நிற்கின்றதோ அதற்கேற்றார்போல் ஜீவாத்மாவின் கர்மங்கள் அமைகின்றன. சத்துவகுணம் மேலோங்கி நிற்கின்ற ஜீவாத்மா விழித்திருக்கின்ற பொழுதும் அமைதியே வடிவமாக இருக்கின்றது. அது ஞானத்தை எளிதாக தேடி செல்கிறது.
ரஜோகுணம் தலையெடுக்கும்பொழுது ஜீவாத்மா வித விதமான கர்மங்களில் ஈடுபடுகிறது;ஆதனால் பௌதிக பொருள்களுடன் அவனுக்குள்ள பந்தம் மேலும் இறுக்கமாகிறது. அவ்வளவு சுலபமாக அந்த பந்தங்களை அறுத்தெறிந்து விட்டு ஞானத்தை தேடி செல்ல முடிவதில்லை.எல்லாவற்றின்மீது தான் ஆட்சி செய்யவேண்டும் என்ற அவா உளவாகிறது; அதற்காக மேலும் மேலும் வினை ஆற்ற வேண்டி வருகிறது.
தமோ குணம் ஓங்குமிடத்து ஜீவாத்மா எதையும் கற்றுக்கொள்ள இயலாத நிலைக்கு தள்ளப்பட்டு சதாகாலமும் சோம்பலாக இருக்கிறது. ஞானத்தை அடைவதற்கு விடா முயற்சி வேண்டும்.அது தமோ குணம் படைத்த ஜீவாத்மாக்களால் இயலாத காரியமாகிறது.  ஒரே மனிதனில் இந்த மூன்று குணங்களும் ஒரே நாளில் வெவ்வேறு நேரங்களில் முன்னுக்க்கு வருவதும் உண்டு.ஜாக்ரத்தில் ரஜோ குணமும் சத்துவ குணமும் காணப்படுகின்றது. ஸ்வப்னாவஸ்தையில் ரஜோகுணம் மட்டும் ஓங்கி நிற்கிறது.சுஷுப்தியில் தமோ குணத்தின் தாக்கத்தால் ஒரு வினையும் தென்படுவதில்லை.
கீதையில் பகவான் சொல்லுவார்:

                                    रजश्तमश्चाभिभूय सत्वम् भवति भारत !

                                    रज: सत्वम् तमश्चैव तम: सत्वम्रजस्ततथा !

                                    ரஜஸ்தமஸ்சாபிபூய ஸத்வம் பவதி பாரத !

                                    ரஜ: ஸத்வம் தமஸ்சைவ தம: ஸத்வம் ரஜஸ்ததா !!


ரஜோகுணத்தின் வெளிப்ப்டுதல் எப்படியறியமுடியும்?
கீதை பதில் சொல்லுகிறது:

                                    लोभ: प्रव्रुत्तिरारम्भ: कर्मणामशाम: स्प्रुहा !

                                    रजस्येतानि जायन्ते विव्रुद्दे भरतरषभ !!

லோப: ப்ரவ்ருத்திராரம்ப: கர்மணாசம: ஸ்ப்ருஹா

ரஜஸ்யேதானி ஜாயந்தே விவ்ருத்தே பரதர்ஷப!!

பேராசை,இடைவிடாத பிரவிருத்தி, கர்மங்களின் நெருக்குதல், ஒருவிதமான அமைதின்மை, நிதானமற்ற பொக்கு, இவை ரஜோகுணத்தின் வெளிப்பாடுகளாகும்.பிறர் பொருள்களை தனதாக்கிக்கொள்ளவேண்டும் என்ற மோஹம் லோபம் எனப்படுகிறது. வருகிறது..திரியங்களின் தூண்டுதலின் பேரில் வெளியுலக விவகாரங்களில் ஈடுபட வேண்டி வருகிறது.அம்மாதிரியான கர்மங்கள் பிரவிருத்தி எனப்படுகிறது. கர்மங்கள் தனித்து வருவதில்லை. அவை முடிவில்லாத தொடர் சங்கிலி போல் வருகிறது. இந்த கருமங்கள் வெற்றி தோல்வி, விருப்பு- வெறுப்பு, இன்பம்- துன்பங்களுக்கு வழி வகுக்கின்றது. இவையெல்லாம் ரஜோகுணத்தின் அறிகுறிகளும் விளைவுகளுமாகும்.
                                अप्रकाशोअप्रव्रित्तिश्च प्रमादो मोह एव च !
                        तमस्येतानि जायन्ते विव्रुद्धे कुरुनन्दन् !

             அப்ரகாகாசோஅப்ரவ்ருத்திஸ்ச ப்ரமாதோ மோஹ ஏவ ச !

              தமஸ்யேதானி ஜாயந்தே விவ்ருத்தே குருனந்தன் !!

விவேகமின்மை,,முயற்சியின்மை  தவறிழைத்தல்,மதிமயக்கம் ஆகியவை தமோகுண லட்சணங்கள். தமோ குணத்தால் மனம் இருளடைந்துவிடுகிறது.
சத்துவ குணம் மேலோங்கியுள்ள ஜீவாத்மாக்கள் ஞானத்தை தேடி போகின்றன; ஆசையை அடக்குகின்றன; ரஜோகுணம் இந்த ஞான வேட்கையை பௌதிக சுகங்களுக்கான ஆசையாக மாற்றி வினையாற்ற தூண்டுகின்றன. தமோகுணம் ஜீவாத்மாவை நிஷ்க்ரியமாக்கி—செயலிழக்க செய்து ஞானத்தை அடைய விடாமல் தடுக்கின்றது.
இத்தேகத்தின் எல்லா இந்திரியங்களும்  ஞானஒளியை நோக்கி திருப்பி விடப்படுகின்றனவோ அப்பொழுது ஸத்துவம் மேலோங்கி இருக்கிறது என்று பொருள். அந்த நிலையில் ஆத்மா பிரகாசமாக ஒளிர்கிறது. அந்த பிரகாசத்தில் இந்த மாயா பிரபஞ்சம் மறைந்து ஆத்ம- சாக்ஷாத்காரம் நிகழ்கிறது.
பகவான் கிருஷ்ணர் பகவத் கீதையில் கூறுகிறார்:
                                नान्यम् गुणेभ्य: कर्तारम् यदा द्रुश्तानुप्श्यति !
                            गुणेभ्यश्च परम् वेद्ति मद्भावम् सोतिकच्चति !!

                         நான்யம் குணெப்ய: கர்தாரம் யதா த்ரஷ்டானுபஸ்யதி !

                   குணேப்யஸ்ச பரம் வேத்தி மத்பாவம் ஸோஅதிகச்சதி !!

                                                ப்.கீ அத்14 சு 19
எப்பொழுது ஜீவாத்மா குணங்களுக்கு வேறான கர்த்தாவைக் காண்பதில்லையோ, அதாவது எல்லா குணங்களுக்கும் அதீதமான பரம புருஷனைக் காண்கிறானோ அப்பொழுது முக்தனாகிறான்.அவனே பிரம்ம சொரூபமாகிறான்.அதாவது இந்த மூன்று குணங்களுமே பிரகிருதியினுடையது; ஆகவே நடக்கின்ற எந்த நிகழ்விற்கும் தான் கர்த்தா அல்ல; இந்திரியங்கள். , இந்திரியார்த்தங்கள் எல்லாமே அந்த பிரகிருதியினிலிருந்து உண்டானவை; முக்குணங்களுக்கும் அப்பாலுள்ள பிரம்மத்தை உணர்ந்து விட்டால் அங்கு வேறொன்றுமிராது; சத்- சித்- ஆனந்தம் மட்டுமே இருக்கும்.மூன்றும் மறைந்து ஒன்றாகிவிடும்.பிரகிருதியினால் சிருஷ்டிக்கப்பட்ட பிரபஞ்சமும் மறைந்து விடும் .பிரம்மமோ  எந்த செயலுக்கும் கர்த்தாவுமல்ல; வெறும் சாக்ஷி மாத்திரம் தான்.
இதையே தான் பூந்தானமும் கூறுகிறார்

மூன்னுமொன்னிலடங்குன்னு பின்னெயும்

ஒன்னுமில்லபோல் விசுவமன்னேரத்து

மூன்றும் மறைந்து ஒன்றாய் நிற்கும்.பின் விசுவமும் என்ற ஒன்றே இல்லாதது போலாகிவிடும்.
மீண்டும் மூன்று ஒன்றாகின்ற விந்தையை அடுத்த அத்தியாயத்தில் டொடருவோம். அதுவரை பாடுவோம்.

கிருஷ்ண கிருஷ்ணா ! முகுந்தா!ஜனார்தனா!
கிருஷ்ணா! கோவிந்தா! நாராயாண ! ஹரே!
அச்யுதானந்தா! கோவிந்தா! மாதவா!
ஸச்சிதானந்தா ! நாராயண! ஹரே


No comments:

Post a Comment