Saturday 28 November 2015

ஞானப்பானா –கிருஷ்ண கீதை 10

ஞானப்பானா –கிருஷ்ண கீதை 10


அத்தியாயம் 10 -பிரம்மம்-2



கிருஷ்ண கிருஷ்ணா ! முகுந்தா!ஜனார்தனா!

கிருஷ்ணா! கோவிந்தா! நாராயாண ! ஹரே!

அச்யுதானந்தா! கோவிந்தா! மாதவா!

ஸச்சிதானந்தா ! நாராயண! ஹரே    


                                               


முன்னமிக்கண்ட விசுவமசேஷவும்   
ஒன்னாயுள்ளோரு ஜ்யோதிஸ்ஸ்வரூபமாய்
ஒன்னும் சென்னங்கு தன்னோடு பற்றாதெ
ஒன்னினும் சென்னு தானும் வலையாதெ


பிரம்மம் சுயம் பிரகாசமானது; அதற்கு ஈடு இணை வேறு எதுவும் கிடையாது; மற்றவையெல்லாம் மாயை அல்லது அவித்யையினால் உண்டான பொய்த் தோற்றங்களே. பிரபஞ்சத்தில் நம் மனோ விருத்தியினாலும் புத்தி சாதுரியத்தாலும் இந்திரியங்களின் தூண்டுதலினாலும் தோன்றியுள்ள சகல உயிருள்ள-உயிரில்லாத எல்லா பொருள்களும் பிகிருதியின் சத்துவ-ரஜோ-தமோ குணங்களினால் பாதிக்கப் பட்டிருக்கின்றன.இவையெல்லம் –பஞ்சபூதங்களினாலானவை என்றாலும்,அவைகளுடைய எந்த குணங்களும் பிரம்மத்தை பாதிப்பதில்லை.பிரம்மத்தால் படைக்கப் பட்ட ஜீவராசிகள் அனுபவிக்கின்ற சுக-துக்கங்கள் பிரம்மத்தை பாதிப்பதிலை.அது சாக்ஷி மாத்திரமாய் இருந்துகொண்டிருக்கும்.ஆகாசத்தில் மேகங்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டு இடிமுழக்கங்களையும் மின்னல்களையும் தோற்றுவித்தாலும் ஆகாசம் எப்படி பாதிக்கப்படாமல் சாக்ஷி மாத்திரமாய் இருந்துகொண்டிருக்கிறதோ அது போல்..
இது யாருக்கு புரியும்? பிரம்ம்ம் இதுவா? அதுவா? என்று ஒன்றொன்றாய் ஆராய்ந்து பார்க்குமிடத்தில் “இல்லை, இல்லை” என்று கடைசியில் வந்து நிற்கின்ற நிலையில் பிரம்ம்மே நான் தான் அல்லது நானே பிரம்மம் என்ற உண்மை வெளியாகிறது.
அந்த நிலையில்,
                   ந தத்ர சூர்யோ பாதி, ந சந்த்ரதாரகம்
                   நேம வித்துதோ பாந்தி குதோயமக்னி
                   தமேவ பாந்தம் அனுபாதி சர்வம்
                   தஸ்ய பாசா சர்வமிதம் விபாதி
அங்கே சூரியனுமில்லை நிலவுமில்லை நக்ஷத்திரங்களுமில்லை.மின்னலும் வருவதில்லை.ஆனால் ஒளிமயமாக இருக்கிறது.எப்படி? பிரபஞ்சத்திலுள்ள எல்லாம் பிரம்மனுடைய ஒளியை உள்வாங்கி பிரதிபலிக்கின்றது.அங்கு அது மட்டும் தான்  உண்மையான ஒளி.
பிரம்ம சூத்திரம் கூறுகிறது:
                     ज्न्माध्यस् यत:
              ஜன்மத்யஸ யத
“அதுவே எல்லாவற்றிற்கும் ஆரமபம் மற்றுமாக இருக்கிறது.”
பிரம்மமே எல்லாவற்றிற்கும் ஆதியும் அந்தமுமாக இருக்கிறது.அதுவே சிருஷ்டி, சம்ரக்ஷணை, சமஹாரம் என்கின்ற மூன்று கர்மங்களையும் ஆற்றுகிறது.பிரம்மம் நித்தியமாக இருக்கிறது; அது புத்தியாக இருக்கிறது; அதுவே முக்தமாகவும் இருக்கிறது.அதுவே  எல்லாவற்றிற்கும் உற்பத்தி காரணமாகவும் இருக்கிறது.
அவ்வாறு ஸ்ருஷ்டி, சம்ரக்ஷணை, சம்ஹாரம் மூன்றையும் நிர்வகிக்ககூடியது ‘ஸர்வக்ஞானியாகவும் சர்வ வ்யாபியாகவும்” இருக்க வேண்டும்.
இந்த சூத்திரத்திற்கு ஆதாரம் தைத்திரீயோபனிஷத்தில் காணப்படுகின்றது.(III-i).
பிர்கு வாருணி தனது தந்தை வருணனை அணுகி, ‘தந்தையே, எனக்கு பிரம்மன் என்றால் என்ன என்று விளக்கிக் கூறவும்” என்று கேட்டதற்கு, வருணன் கூறினான்:” எங்கிருந்து நாம் காண்பவையெல்லாம் உற்பத்தியாயிற்றோ, ஏதோன்றின் சக்தியால் அவையெல்லாம் இங்கு இருந்து வருகிறதோ, அழிவில் அவையெல்லாம் ஏதொன்றில் போய் லயிக்கின்றதோ, அது தான் பிரமன் என்று அறிக என் மகனே”.
பகவத் கீதை அத்தியாயம் 10-ல்( விபூதி யோகம் )20 ஆவது சுலோகத்தில் கிருஷ்ண பரமாத்மா கூறுகிறார்:
                 अहमाथ्मा गुडाकेश् सर्वभूताशयस्तित: !
                     अहमादिश्च मध्यम् च भूतानामन्त एव च !!
                 அஹ்மாத்மா குடாகேச ஸர்வபூதாஸ்யஸ்தித: !
                 அஹமாதிஸ்ச மத்யம் ச பூதானாமந்த ஏவ ச !!
‘குடாகேசா,எல்லா உயிரினங்களின் உள்ளே உறையும் ஆத்மா நானே;  அவைகளின் ஆதியும், நானே, இடையும் நானே; முடிவும் நானே.” இங்கு ‘குடாகேசா” என்ற பதம் மிகவும் பொருள் பொதிந்தது.குடாகேசன் என்றால் தூக்கத்தை வென்றவன் என்று பொருள். மாயையினால் உண்டான மயக்கத்தை வென்று உண்மையான நான் யார் என்று அறிந்து-உணர்ந்துகொள்ப்வனுக்கு பிரம்மத்தைக் குறித்துள்ள சந்தேகங்கள் இராது.
பூந்தானம் இதற்கும் ஒரு படி மேலே போய் ‘ஆதியில் அது ஜ்யோதி சொரூபமாயிருந்தது” என்கிறார்.
அதற்கும் பிரம்ம சூத்திரத்தில் ஆதாரம் இருக்கிறது.
                 ज्योतिश्चरणाभिधानात् !
ஜோதியே பிரமன் என்கிறது பிரம்ம சூத்திரம்-1.1.24

மேலும் பூந்தானம் கூறுகிறார்:

ஒன்னும் சென்னங்கு தன்னோடு பற்றாதெ

ஒன்னினும் சென்னு தானும் வலையாதெ


பிரம்மத்தை ஒன்றும் பாதிப்பதில்லை; அது எதையும் நாடுவதுமில்லை.
நாமெல்லாம் அந்த பிரம்மத்திலிருந்து தான் உற்பத்தியாகின்றோமென்றாலும், அந்த பிரம்மம் தான் நம்மையெல்லாம் சம்ரக்ஷிக்கின்றதென்றாலும், முடிவில் நாம் பிரமனோடு தான் லயிக்கின்றோமென்றாலும், நமது கர்மங்கள் எதுவும் பிரம்மனைப் பாதிப்பதில்லை.
பகவத் கீதையில் கிருஷ்ணர் கூறுகிறார்:

                                                मत्त: परतरम् नान्यत्किन्जदस्ति धनन्जय !

                                      मयि सर्वमिदम् प्रोतम् सूत्रे मणिगणा इव !!

                                    மத்த: பரதரம் நான்யத்கிஞ்சிதஸ்தி தனஞ்சய !

                                    மயி ஸர்வமிதம் ப்ரோதம் ஸூத்ரே மணிகணா இவ !!

                                     ப.கீ.அத்.7 சுலோ 7
‘எனக்கு மேலானது எதுவும் கிடையாது தனஞ்சயா; மணிகளை கோர்த்திணைக்கின்ற நூல் போல் நான் எல்லாவற்றினுள்ளிலும் இருந்து இணைப்புக்களை உண்டாக்குகின்றேன்.”
அதாவது உலகின் உற்பத்தி, ஒடுக்கம் எல்லாவற்றிற்கும் ஈசனே காரணம்.அவனுக்கு அன்னியமானது  வேறொன்றில்லை.அவன் நியதிகளை மாற்ற வல்லதும் வேறொன்றில்லை.இந்த உலகம் நிலை பெற்றிருப்பதும் அவனாலேயே தான். அந்த பிரமனை ஸூத்ராத்மன் என்றும் அழைக்கிறார்கள். ஸூத்திரம் என்றால் நூல். மணிகளும் முத்துக்களும் இரத்தினங்களும் நிறங்களிலும் குணங்களிலும் மாறுபடலாம்; ஆனால் அவைகளை இணைக்கின்ற நூல் ஒன்றே. அதன் குணமும் நிறமும் ஒன்றே.
அதை மேலும் விளக்கமாக பகவான்  அதே அத்தியாயம் 9 ஆவது  சுலோகத்தில் சொல்லுகிறார்                                        

                                                पुण्योग्न्ध: प्रुथ्वियाम् च तेजस्चास्मि विभावसौ !

                                      जीवनम् सर्वभूतेषु तपस्चास्मि तपस्विषु !!

                      புண்யோகந்த:  ப்ருத்வியாம் ச தேஜஸ்சாஸ்மி விபாவஸௌ !

                        ஜீவனம் ஸர்வபூதேஷு தபஸ்சாஸ்மி தபஸ்விஷு !!

                                                                        .கீ அத் 7 சுலோ 9

     “ மண்ணில் நறுமணமாகவும் ,அக்னியில் சுடராகவும், நானே இருக்கிறேன்.எல்லா உயிரினங்களுக்குள்ளும் உயிராகவும் தபஸ்விகளுக்குள் தவமாகவும் நானே இருக்கிறேன்.”மண்ணில் பலவித அழுக்குகள் சேர்ந்து பல வித மணங்களை உளவாக்கலாம்.ஆனால் மணங்களில் நறுமணம்- சத்தாக இருப்பது அந்த ஈசனே-அதாவது பிரமனே.அதே போல் அக்னி பல தோற்றங்களில் இருக்கலாம் ஆனால் எல்லாவற்றிலுமிருக்கும் ஒளியாக- சுடராக இருப்பது அந்த பிரமனே.ஒளி என்றால் ஆத்ம சைதன்யம்.       
மேலும் சொல்லப் போனால் பிரமன் எதையும் தேடிப் போவதில்லை. அவனவன் கர்மத்தின் பலனகளை அவனவனே தான் அனுபவிக்க வேண்டும்.இந்த ஜன்மத்தில் கர்ம பலன்கள் அனுபவித்து முடிவடையவில்லை என்றால் மீண்டும் மீண்டும் இந்த உலகில் பிறாக்க வேண்டி வரும்.
இந்தக் கருத்துக்கள் பகவத் கீதையிலும் எதிரொலிக்கின்றது.

                                                ये च एव शात्विकाभावा: राजसा: तामसा: च येव !

                                      मद्-त: एव इथि तान् विद्-हि न तु अहम् तेषु ते मयि !!

                            யே சைவ ஸாத்விகாபாவா ராஜஸாஸ்தமஸாஸ்சயே !

                             மத்த ஏவேதி தான்வித்தி ந த்வஹம் தேஷு தே மயி !!

“ சத்வ ரஜோ தமோ குணங்களுடையை எல்லா பொருட்களும் என்னிலிருந்து தோன்றியவை தான்.ஆனாலும் நான் அவைகளை சாரவில்லை;அவைகள் என்னை சார்ந்திருக்கின்றன.”
முக்குணமயமாகிய பிரபஞ்சம் பிரமனை ஆதாரமாக கொண்டுள்ளது. ஆனால் பிரமன் முக்குணப் பொருட்களை அதிஷ்டானமாக கொண்டவனில்லை. அவனது மாயா சக்தியால் உருவானது இந்த ஜகத். மாயையினால் ஆரோபிக்கப்பட்டுள்ள இந்த ஜகத் நம்மிலிருந்து மறைய வேண்டுமென்றால் பரமாத்மாவின் தரிசனம் பெற வேண்டும் அது தான் வாழ்வின் இலட்சியமும்.
அதை பெறுவதற்கு எளிதான வழி பகவத் நாம ஜபம் தான் என்கிறார் பூந்தானம்.நாமும் ஜபிப்போம்:

கிருஷ்ண கிருஷ்ணா ! முகுந்தா!ஜனார்தனா!

கிருஷ்ணா! கோவிந்தா! நாராயாண ! ஹரே!

அச்யுதானந்தா! கோவிந்தா! மாதவா!


 ஸச்சிதானந்தா ! நாராயண! ஹரே   !!

No comments:

Post a Comment