Tuesday 10 November 2015

ஞானப்பானா-கிருஷ்ண கீதை 4

ஞானப்பானா-கிருஷ்ண கீதை 4


அத்தியாயம் 4 காலலீலை


கிருஷ்ண கிருஷ்ணா ! முகுந்தா!ஜனார்தனா!

                                    கிருஷ்ணா! கோவிந்தா! நாராயாண ! ஹரே!

                                    அச்யுதானந்தா! கோவிந்தா! மாதவா!

                                    ஸச்சிதானந்தா ! நாராயண! ஹரே !

காலத்தின் விளையட்டை பூந்தானம் தொடருகிறார்:     

                                    கண்டுகண்டங்கிரிக்கும் ஜனங்களெ

                                    கண்டில்லென்னு வருத்துன்னதும் பவான்

                                    ரண்டுநாலு தினம் கொண்டொருத்தனெ

                                    தண்டிலேற்றி நடத்துன்னதும் பவான்

                                    மாளிகமுகளிலேறிய மன்னன்றெ

                                    தோளில் மாறாப்பு கேற்றுன்னதும் பவான்

“ நாம் தினமும் பார்த்துக் கொண்டேயிருக்கின்ற மனிதர்களை, காணாமல் பண்ணுவதும் அந்த பகவான் தான்;இரண்டு நாலு நாட்களில்  நல்ல ஆரோக்கியத்துடன் நடமாடிக்கொண்டிருக்கும் ஒருவனை பாடை மேல் படுக்கவைத்து எடுத்துச் செல்ல வைப்பதும் அந்த பகவான் தான்; மாடமாளிகையில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கின்ற மன்னனை தோளில் துண்டு போட்டுக்கொண்டு தெருவில் நடக்க வைப்பதும் அந்த பகவான் தான்.”
பூந்தானம் இந்த வரிகளில் ,மனித வாழ்வின்  நிலையற்ற தன்மையை எடுத்துரைக்கிறார். நாம் இந்த உலகில் காணும் செல்வம் ஏதும் நிரந்தரமல்ல; இன்றிருக்கும் நாளை காணாமல் போய்விடும்.ஏன், இன்றிருக்கின்ற மனிதர்கள் நாளையிருப்பார்கள் என்று உறுதியில்லை; நேற்றுக்கண்டவர்களை இன்று காண்பதில்லை . மரணம் தன் வீட்டுக்கதவை தட்டுகிறதா, அடுத்த வீட்டுக் கதவை தட்டுகிறதா என்று யாருக்கும் தெரிவதில்லை. தினமும் மரணம் யாரையெல்லாமோ அழைத்துச் செல்வதை கண்டாலும் நான் மட்டும் நித்தியம், சிரஞ்சீவி என்று நினைக்கிறோம். எல்லா செல்வ செழிப்புகளும் உள்ளவர்கள் ஏழைகளைக்கண்டு நிந்திக்கிறார்கள்; தன்னுடைய செல்வங்கள் தான் பிறக்கும் பொழுது கொண்டு வந்ததல்ல; எப்பொழுது வேண்டுமானாலும் இழக்க நேரிடலாம் என்று அறியாமல் இறுமாந்திருக்கிறோம்.இன்று அரச கட்டிலில் படுத்து உறங்குபவர்களையும் மாடமாளிகைகளில் கேளிக்கைகளில் மூழ்கியிருப்பவர்களையும் ஒரே நிமிடத்தில் பகவான் தெருவிற்கு கொண்டு வந்து விட முடியும்.
இதே கருத்துக்களை பட்டினத்து பிள்ளை கீழ்க்கண்ட வரிகளில் கூறுகிறார்:

                                    நீர்க்குமிழி யாமுடலை நித்தியாம யெண்ணுதே

                                    ஆர்க்கு முயிராசை அழியேனென்குதே

                                    கண்ணுக்கு கண்ணெதிரே கட்டையில் வேகக்கண்டும்

                                    எண்ணுன் திரமாயிருப்போமென் றெண்ணுதே

                                    கன்னிவன நாதா! கன்னிவன நாதா!

                                    அனித்தியத்தை நித்தியமென் றாதராவா யெண்ணுதே

                                    தனித்திருக்கேனெ ன்குதே தனை மறக்கேனெங்குதே/

குசேலனை குபேரனக்குவதற்கு பகவானுக்கு ஒரு பிடி அவல் தின்கின்ற நேரம் போதுமாயிருந்தது.
 பூர்வ ஜன்ம கர்ம பலங்களால் எவ்வளவு துன்பங்கள் சுமக்க நேரிட்டாலும் பகவானை சரணடைந்து அவன் நாமம் ஜபித்தோமென்றால் பிராரப்தத்தின் பாரம் தெரியாமல் இருக்கும்.
ஆகவே அந்த நாராயணனின் நாமம் சொல்லிப்பாடுவோம் என்கிறார் பூந்தானம்
ஆகவே  நாமும் கீர்த்தனம் பாடுவோம்.

கிருஷ்ண கிருஷ்ணா ! முகுந்தா!ஜனார்தனா!

                                    கிருஷ்ணா! கோவிந்தா! நாராயாணா! ஹரே!

                                    அச்யுதானந்தா! கோவிந்தா! மாதவா!

                                    ஸச்சிதானந்தா! நாராயணா! ஹரே!




No comments:

Post a Comment