Sunday 8 November 2015

ஞானப்பானா- கிருஷ்ணகீதை 2

ஞானப்பானா- கிருஷ்ணகீதை 2

அத்தியாயம் 2 மலையாள பக்தி இயக்கம்-தோற்றம்-ஏற்றம்-மறுமலர்ச்சி


புத்திர சோகத்தில் ஆழ்ந்திருந்த பூந்தானம் நம்பூதிரி பன்னீரண்டு வருடங்கள் குருவாயூரப்பனே சரணம் என்று கோயிலிற்கு சென்று வந்தார்; கோயிலிலேயே வசித்து வந்தார் என்று கூட சொல்லலாம்.. அந்த உண்ணிக்கண்ணனுக்கே அவர் பேரில் இரக்கம் வந்ததோ என்னவோ ஒரு நாள் இரவு பாலகோபாலனாக அவர் மடியில் வந்து அமர்ந்ததாக ஐதீகம் அப்பொழுது அவருக்கு ஞானம் வந்தது—‘கிருஷ்ணன் எப்பொழுதும் தன்னுள்ளேயெ இருக்கிறான்; அப்புறம் நான் ஏன் அவனை வெளியில் தேடிக்கொண்டிருக்கிறேன்”என்று. இந்தக் கதையிலுள்ள myth-ஐ நீக்கிவிட்டு ஆராய்ந்தால் அவர் புத்திர சோகத்திலிருந்து மீண்டு-பரமன் எல்லோர் உள்ளிலும் தான் இருக்கிறான்; இஹலோக பந்தங்களில் ஏதும் பொருள் இல்லை; அவையெல்லாம் பந்தனங்களே என்ற ஞானம் அவருக்கு அப்பொழுது தான் உதித்தது என்று கொள்ளலாம்.பகவன் நாமம் ஒன்றே நித்ய சாந்தியை தரும் என்பதை புரிந்து கொண்டார் என்றும் கூறலாம்.
அதன் பின் அவர் பாகவதம் வாசிப்பதிலும் கேட்பதிலும் ஈடுபாடு கொண்டார்.அதைத் தொடர்ந்து ‘ஞானப்பானா’ என்ற மாபெரும் காப்பியமும் ஏனைய காவியங்களும் எழுதத் தலைப்பட்டார்.
அவர் எழுதிய காப்பியங்கள்:
·         ஞானப் பானா
·         பாஷாகர்ணமிருதம்
·         ஆஞ்சனா ஸ்ரீதரா கிருஷ்ணா
·         அம்பாடி பைதல்
·         ஹரி ஸ்தோத்ரம்
·         ஸப்த ஸ்வர கீர்த்தனம்
·         கான ஸங்கம்
·         நீயத்ரே கோவிந்தா
·         மூலதத்வம்
·         மாயா வாமனம்( தமிழ்)
·         குரு ஸ்துதி
·         த்வாதச நாம கீர்த்தனம்
·         தச அவதார ஸ்தோத்ரம்
·         வாஸுதேவ ஸ்துதி (தமிழ்)
·         அஷ்டாக்ஷர கீர்த்தனம்
மேற்கூறியவை உட்பட ஏறக்குறைய 60 காவியங்கள் பூந்தானம் இயற்றியுள்ளார்.
அந்த முயற்சிகளில் அவர் எதிர்க் கொள்ள வேண்டி வந்த இடர்கள் கணக்கிலடங்கா.
இந்த இடத்தில் மலையாளத்தில் பக்தி இயக்கம் எப்பொழுது ஆரம்பித்தது, அந்த இயக்கத்தின் தளகர்த்தர்கள் யார் யார் என்பதை தெரிந்து கொள்வது அவசியமாகிறது. ஏனென்றால் அந்த வளர்ச்சியில் பூந்தானத்தின் பங்கு எவ்வளவு முக்கியம் எனபது புரிந்துகொள்ள அது உதவும்.
மலையாளம் திராவிட மொழிக்குடும்பதின் இளைய வாரிசு. ஏறக்குறைய 400-500 ஆண்டுகளுக்கு முன் தான் மலையாள மொழி தனது தனித் தன்மையைப் பெற்றது. சரியாக சொல்லப் போனால் கி.பி.பதினைந்து-பதினாறாம் நூற்றாண்டில் தான் அது சரியான வடிவம் பெற்றது. ஆனால் பக்தி இலக்கியத்திற்கு பரசுராம க்ஷேத்திரமான கேரள தேசத்தின் பங்களிப்பு அந்த மொழி முழு தனித் தன்மை பெறுவதற்கு முன்பே காணப்படுகிறது.
தமிழ் சங்ககாலத்திலிருந்தே கேரளக்கரையில் இலக்கியகர்த்தாக்கள் தோன்றியுள்ளார்கள். கேரளத்து இலக்கிய வாதிகள் தமிழ் மற்றும் சம்ஸ்க்ருத இலக்கியத்திற்கு அளித்த அர்ப்பணிப்புக்கள் மிகவும் பாராட்டுக்குரியது. ஆகவே தான் மலையாள மொழி உருவான பிறகு அந்த மொழியில் இயற்றப்பட்ட நூல்களும் இலக்கியங்களும் கவிதைகளும் சிறந்து விளங்கின என்று கூட கூறலாம்.
மொழியின் இளைமையும் மற்ற திராவிட மொழிகளுடனான இணக்கமான போக்கும் எந்த மொழியாயிருந்தாலும் அந்த மொழிகளிலிருந்து  நல்லவைகளை உள்வாங்கி தனதாக்கி கொண்டதும், விந்திய மலைகளை தாண்டியுள்ள பாரத தார்சனிக தத்துவங்களையும் கலாச்சாரத்தையும் தனதாக்கிக் கொண்டதும் தான். மலையாள மொழியின் சிறப்பு
மற்ற மொழிகளில் தோன்றிய பக்தி இலக்கியங்களை முன்மாதிரியாக கொண்டதும் மற்ற மொழி பக்தி இலக்கியங்களுக்கு சில காலங்களில் முன்னோடியாகவும் மாற முடிந்ததும் அந்த மொழியின் மற்றொரு சிறப்பு.
பக்தி இலக்கிய புரட்சியில் மட்டுமல்லாமல், ஜன நாயக புரட்சிகளிலும், சமுதாய புரட்சிகளிலும் கேரளம் முன் மாதிரியாக திகழ முடிந்தது.
குலசேகர ஆழ்வாரிலிருந்து-அதாவது ஏறக்குறைய கி.பி. ஏழாம் நூற்றாண்டிலிருந்து டாக்டர் K.N. எழுத்தச்சன்( பன்னீரண்டாம் நூற்றாண்டுவரை குறிப்பாக கவனத்திற் கொள்ள வேண்டிய காலம். முகுந்தமாலா’ என்ற அழகிய பக்தி காவியம் முதல், ‘கேரளோதயா’ என்ற சிறிதே காலதாமதமாக வந்த  மஹாகாவியம் வரை யிலான இடைப்படட காலத்தில் எண்ணற்ற இலக்கியங்கள் கேரளக்கரையில் தோன்றின. ஆனால் அவையில் பெரும்பானவை சம்ஸ்கிருத மொழியில் எழுதப்பட்டவை.
குலசேகரரின் ‘தபதிசம்வரணா’,வும் ‘சுபத்ராதனஞ்சயா’வும், சக்திபத்ராவின் ‘ஆச்சரிய சூடாமணி’ யும் குறிப்ப்டத்தக்க நூல்கள்.
தோலனின் ‘மஹோதயபுராசரிதா’வும், வாஸுதேவ பட்டதிரியின் யமகாவ்யமும்’ லக்ஷ்மிதாஸின் ‘ஸுகசந்தேசமும்’ சிறந்த காவியங்கள்
ஆதிசங்கரரின் அத்வைத வேதாந்த நூல்கள் ஒரு புரட்சியையே கேரளத்தில் மட்டுமல்லாமல் பாரதம் முழுவதும் உண்டுபண்ணியது. வேதாந்த புரட்சி மட்டுமல்ல, கவிதை நயத்திலும் சங்கரரின் காவியங்கள் சிறந்து விளங்குகின்றன.
சுருங்க சொன்னால் மலையாள இலக்கிய வளர்ச்சியை மூன்று காலமாக பிரிக்கலாம்.
1.       தமிழ் இலக்கியம் சார்ந்த காலம்
2.       சம்ஸ்க்ரிதத்தின் தாக்கம்
3.       மலையாள மறுமலர்ச்சி

தமிழ் இலக்கிய மரபு சார்ந்த மலையாள இலக்கியங்கள்

 தமிழ் இலக்கியத்தின் சார்பு நிலை உருவாவதற்கு முன் வாய்வழி இலக்கியங்கள் கேரளத்தில் தோன்றின.ஆனால் அவைகளில் எதுவும் அவைகளின் மூல ரூபத்தில் இன்று கிடைப்பதில்லை; காலப்போக்கில் அவைக்ள் மருவி இடைச்செருகல்களும் திருத்தல்களும் ஏற்பட்டு உருக்குலைந்து காணப்படுகின்றன.அவைகள் குழந்தைகள் இலக்கியம் அல்லது மழலைப் பாட்டுக்கள்,நாடோடிப் பாடல்கள், பருவ கால மாற்றத்திற்கு ஏற்ப பாடப்படும் இசைப்பாடல்கள், முதலியன.
இரண்டு குறிப்பிடத்தக்க பாடல்கள், வடக்கன் பாட்டுக்களும் தெக்கன் பாட்டுக்களும்.
இரண்டுமே ஜன்மி குடும்பங்களையும் அவர்களைச் சார்ந்திருந்த வீர மறவர்களின் போர் சாகசங்களையும் பெருமைப்படுத்தி காண்பிக்கும் பாடல்கள். வடக்கன் பாட்டுக்களில் முக்கியமன கதாபாத்திரங்களாக,உன்னியார்ச்சா, ஆரோமல் சேவகர் ஆரோமலுண்ணி, தச்சோளி ஒதேனன் முதலியவர்களும் அவர்களது வீர சாகசங்களும்.பேசப்படுகின்றன.
‘இரவிப்பிள்ளைப் போர்’ தெக்கன் பாட்டுக்களில் குறிப்பிடக்கூடியவை. போர்க்களத்தில் வீரமரணம் அடையும் போராளிகளைக் குறித்த பாடல்கள் இவை.
தமிழ் இலக்கியத்தில் முக்கியமான காலம் சங்க காலம். சங்ககாலத்து முக்கியமான நூல்களான புறனானூறு, பதிற்றுப்பத்து போன்ற இலக்கியங்களின் சிற்பிகள் ஸஹ்யாத்திரி மலைத்தொடற்சிக்கு மேற்கேயுள்ள கேரள தேசத்தில் பிறந்தவர்கள் பதிற்றுப்பத்து  பத்து பாடலகள் கொண்ட பத்து படலங்களாக பிரிக்கப் பட்ட நூறு பாடல்கள். இவையில் பெரும்பாலானவை சேரமன்னர்களை புகழ்ந்து இயற்றப்பட்டவை..இதை இயற்றியவர்களில் குறைந்தது மூன்று பேராவது கேரள  நாட்டிலிருந்து வந்தவர்கள்: பறனார், நக்கீரர் மற்றும் கபிலர். அதே போல் புறனானூறு நானூறு பாடல்கள் கொண்டது. புற வாழ்வைப் பற்றியது.புறம் என்றால் போர் சம்பந்தப்பட்ட வாழ்வு.ஆதை இயற்றிவர்களிலும்  நிறைய கவிஞர்கள் கேரள நாட்டில் பிறந்தவர்கள்.
இவ்வளவு ஏன்? ஐம்பெரும் காப்பியங்களில் தலை சிறந்ததான சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோவடிகள் சேர  நாட்டு அரச குடும்பத்திலிருந்து வந்தவர்

ஸம்ஸ்க்ருதத்தின் தாக்கம்

முதல் மலையாள காவியம் ராமசரிதம் என்பது Dr,Gundert  போன்ற ஆராய்ச்சியாளர்களின் அசைக்க முடியாத நிகமனம்.இந்த காவியம் சம்ஸ்ருத லிபி கேரள நாட்டில் தோன்றுவதற்கு முன் இயற்றப்பட்ட காவியம்.ஆனால் பிற்பட்ட வருடங்களில் சம்ஸ்ருதத்தின் தாக்கம் அதிகரித்தது. சுத்த சம்ஸ்க்ருத நூல்கள் பாமரர்களுக்கு ஏற்றுக்கொள்ள தகுந்ததாக இல்லாமலாய்விட்டதால் படித்த பண்டிதர்கள் –பெரும்பாலும் நம்பூதிரிகள்- மணிப்ரவாளம் என்ற முறையை கேரளத்தில் அறிமுகப்படுத்தினார்கள்.ஆனால் இந்த முயற்சியும் ஆண்டான்-அடிமை மனோபாவத்தை பிரதிபலித்ததால் பாமரர்களிடையே எடுபடவில்லை.

மறுமலர்ச்சி

இந்த காலகட்டத்தில் நாட்டின் மற்ற பிரதேசங்களில் பிரபலமடைந்து வந்த பக்தி இயக்கம் கேரள தேசத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியது.பதினாலாம்-பதினைந்தாம் நூற்றாண்டுகளில் கேரளத்தின் தென்பகுதிகளில் கண்ணச்சன்களும்.- நிரணம் கிரமத்திலிருந்து வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த நாயர்களும்,வட பகுதியில் செறுசேரி குடும்பத்தினரும் பக்தி இலக்கியத்திற்கு ஊக்கம் அளித்தனர்.அவர்கள் சம்ஸ்க்ருததின் ஆதிக்கத்தை குறைக்க உதவினாலும், ஏற்கனவே தமிழில் தோன்றிய பக்தி இலக்கியங்களின் பாரம்பரியத்தை பின் தொடர்ந்தார்கள்..தமிழ் நாட்டில் தோன்றிய சைவ-வைஷ்ணவ இலக்கியங்களின் தாக்கம் விந்திய மலைகளுக்கு வடக்கேயும் எதிரொலித்தது.அதாவது பிராந்தீய மொழி பக்தி இலக்கியங்கள் மற்ற பிராந்தியங்களிலும் அதாது பிராந்திய மொழிகளில் காவியங்கள் தோன்றுவதற்கு தூண்டுதலாக அமைந்தன
.ராமானுஜரின் படைப்புகள் ராமானந்தர் போன்றவர்களாலும், மாத்வாச்சாரியரின் படைப்புக்கள் சைதன்ய அடிகளாரின் மூலம் வங்க தேசத்திலும் பிரபலமடைந்தன.
இந்த காலகட்டத்தில் தான் பூந்தானம் தோன்றினார். இந்த மறுமலர்ச்சி காலத்தில் கேரளத்து பக்தி இயக்கத்தின்  நான்கு தூண்களாக விளங்கியவர்கள் துஞ்சத்து எழுத்தச்சன், பூந்தானம் நம்பூதிரி, நாரயண பட்டதிரிப்பாடு, வில்வமங்கலம் அடிகளார்.என்பவர்கள்.
இதில் எழுத்தச்சனின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது-பக்தி இலக்கிய வேதியில் மட்டுமல்லாமல்,; மலையாள மொழியை நவீன மொழியாக்கி மாற்றி அதற்கு ஒரு தனித்தன்மையை அளித்ததிலும் அவரது பங்கு மிகவும் சாலச்சிறந்தது. ஆகவே தான் அவர் மலையாள மொழியின் தந்தை என அழைக்கப்படுகின்றார்..
நாராயண பட்டதிரிப்பாடு இயற்றிய நாரயணீயம் கேரளத்தையும் கடந்து பிரசித்தி பெற்றது.
வில்வமங்கலத்தின் கிருஷ்ண கர்ணாம்ருதம் வங்க தேசத்தில் கிருஷ்ண பக்தியை பிரபலமாக்கிற்று.
ஆனால் பூந்தானம் அதிகம் சம்ஸ்கிருத பாண்டித்யம் இல்லாதவராக இருந்ததால் கேரளத்திற்கு வெளியே அதிகம் தெரியப்படவில்லை. அது மட்டுமல்ல,அவரது வாழ் நாளில் நிறைய இடையூறுகளை சந்தித்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன
ஒரு முறை ‘பத்மனாபோமர” என்கின்ற வாக்கியத்தை விளக்கும் பொழுது ‘பத்மனாப”,’மர” என்று பிரித்துக் கூறியதற்காக பண்டிதர்களால் நகைப்பிற்கு ஆளாகி, இனிமேல் வித்வத் சதஸ்ஸுகளில் கலந்துகொள்ளக்கூடாது என்று நாராயணீயத்தின் தளகர்த்தரான பட்டதிரிப்பாடு கூறினார் என்று ஒரு கதை உண்டு. குருவாயூரப்பன் அல்லது பத்மனாபன் அமரர்களுக்கெல்லாம் தேவன் என்பது பத்மனாபன் மரங்களுக்கெல்லாம் தேவன் என்று அர்த்தம் வரும்படி பூந்தானம் விளக்கம் கூறிவிட்டார் என்பது குற்றச்சாட்டு. பண்டித பாமரர்களுக்கிடையேயான சுவர் அவ்வளவு வலுவானதாக இருந்தது.
அன்று இரவே பட்டதிரிப்பாடின் உறக்கத்தில் அவரை தட்டியெழுப்பி வெளியே வரும்படி யாரோ கூப்பிட்டது போல் அவருக்குத் தோன்ற, அவர் வெளியே வந்த பொழுது தோட்டத்திலுள்ள மரங்களெல்லாம் ஒளி வெள்ளத்தில் பிரகாசித்துக் கொண்டிருந்ததையும் அவையின் உச்சியில் மயிலிறகு போல நீல வர்ணம் தெரிந்ததையும் பட்டதிரிப்பாடு கண்டார். அவருக்கு குருவாயூரப்பனின் விளையாட்டு மனதில் தெளிந்தது. ‘தான், பண்டிதர்களுக்கும் தேவர்களுக்கும் மட்டுமல்ல் தேவன், மரம், செடிகொடிகளுக்கும் தேவன் தான்; அவைகளிலும் தான் உள்ளேன்’ என்று விளக்கவே இப்படி ஒரு அதிசயத்தை காட்டியுள்ளதாகவும் தான் முதல் நாள் பூந்தானத்தை அவமதித்தது குருவாயூரப்பனுக்கு பொறுக்கவில்லை என்பதையும் அவர் புரிந்து கொண்டார்.
ஆனால் தனது சம்ஸ்கிருத பாண்டித்யத்திலுள்ள அகந்தை அவரை விட்டு நீங்கவில்லை. தன் குருவின் மீதுள்ள பக்தியால் பட்டதிரிப்பாடு பக்க வாதத்தால் பீடிக்கப்பட்ட தன் குருவின் வியாதியை கேட்டு வாங்கிக்கொண்டு அதை குணப்படுத்த குருவாயூரப்பன் கோயிலில் வசனம் இருந்து நாராயணீயம் மஹாகாவியத்தையும் எழுதிக்கொண்டிருந்த காலம்.. பூந்தானம் மலையாளத்தில் ‘ஞானப் பானா’ எழுதி முடித்து அதை பட்டதிரிப்பாடிடம் காண்பித்து, ஏதேனும் பிழையிருந்தால் திருத்தித் தர வேண்டும் என்று வேண்டினார். பட்டதிரிப்பாடோ தனது அகந்தையினால் மதியிழந்து ‘ நீ மலையாளத்திலல்லவா எழுதியிருக்கிறாய்? அதையெல்லாம் பார்க்க எனக்கு நேரம் இல்லை; யாராவது மலையாளம் முன்ஷியிடம் கொண்டு போய் கொடு” என்று எகத்தாளமாக சொல்லிவிட்டார்.
என்னே பரிதாபம், குறைந்துகொண்டு வந்த அவரது வியாதி அன்று இரவே அதிகமாக ஆரம்பித்தது.அவரால் அதற்குப் பின் ஒரு சுலோகம் கூட எழுத முடியவில்லை.நாராயணீயம் அரைகுறையாக நின்று விட்டது.அவருக்கு தான் ஏதோ தெய்வ குற்றம் செய்து விட்டது புரிந்தது. ஆனால் என்ன குற்றம் செய்தோம் என்றுமட்டும் புரியவில்லை
‘என் பக்தியில் குறையென்ன கண்டாய், கண்ணா? குற்றமென்ன செய்தேன்? எனக்கு ஏன் இந்த சோதனை?” என்று கதறி அழுது கோயிலிலேயே குடியிருந்து விட்டார்.
அதன் பின் நாராயணன் அவர் கனவில் தோன்றி,’ நீ என் பக்தன் தான். ஆனால் உன் விபக்தியை விட பூந்தானத்தின் பக்தியை நான் மெச்சுகிறேன்.அவனை அவமதித்து விட்டாய் நீ.அவனிடம் .மன்னிப்பு கேட்டு அவன் விரும்பியதை செய்து கொடு. நீ ரோகவிமுக்தனாவாய்”என்று அருளினார்.
மறு  நாளே பூந்தானத்தை அழைத்து மன்னிப்பு கேட்டு ‘உன் காவியத்தை கொடு. நான் பிழை திருத்தித் தருகிறேன்” என்றார் பட்டதிரிப்பாடு. பூந்தானமோ மிகவும் அடக்கத்துடன்,’நீங்கள் என்ன பெரிய பெரிய வார்த்தைகளெல்லாம் சொல்லுகிறீர். வேலை மிகுதியால்  நீங்கள் அப்படி கூறியுள்ளீர்கள்.  நான் நேற்றே   எனது நூலை குருவாயூரப்பன் காலடியில் சமர்ப்பித்து விட்டேன், என் பாலகோபாலனும் அதன்மீது பூக்களை அர்ச்சித்து என்னை அனுக்கிரகித்துள்ளான். மிக்க  நன்றி ஐயா “. என்று கூறினார்.
பட்டதிரிப்பாடும் வியாதி நீங்கி நாராயணீயத்தை முழுமித்தார்.
பூந்தானம் ஞானப்பானாவை அடுத்த வித்வத் சதஸ்ஸில் வெளியிட்டார்.
அந்த காவியத்தை அடுத்த மடலில் பார்ப்போம்.



No comments:

Post a Comment