Thursday 12 November 2015

ஞானப்பானா –கிருஷ்ணகீதை 6

ஞானப்பானா –கிருஷ்ணகீதை 6

ஆத்தியாயம் 6


சாத்திரங்கள் எத்தனை? சூத்திரங்கள் எத்தனை?


கிருஷ்ண கிருஷ்ணா ! முகுந்தா!ஜனார்தனா!

                                    கிருஷ்ணா! கோவிந்தா! நாராயாண ! ஹரே!

                                    அச்யுதானந்தா! கோவிந்தா! மாதவா!

                                    ஸச்சிதானந்தா ! நாராயண! ஹரே


கடந்த அத்தியாயத்தின் கடைசிப் பகுதியில் பட்டினத்தார் பாடல்களை மேற்கோள் காட்டியிருந்தேன். அந்த பாடல்களில் அவர் சிவனை ‘நினைமின்’ என்று சொல்லியுள்ளார்; பூந்தானம் கிருஷ்ண நாமம் சொல்லுவீர் என்று பாடியுள்ளார். இரண்டும் ஒன்றே; ஹரியும் ஹரனும் வேறல்ல என்றும் கூறியிருந்தேன். இதே கருத்துக்கள் பூந்தானத்தின் அடுத்த வரிகளில் பிரதிபலிக்க காண்கிறோம்.

                                    மனுஜாதியில் தன்னே பலவிதம்

                                    மனஸ்ஸின்னு விசேஷமுண்டோர்க்கணும்

                                    பலர்க்குமறியேணமென்னிட்டல்லோ

                                    பலஜாதி பறயுன்னு சாஸ்திரங்கள்

                                    கர்ம்மத்திலதிகாரி ஜனங்கள்க்கு

                                    கர்ம சாஸ்திரங்களுண்டு பலவிதம்

                                    கர்ம சாஸ்திரங்கள் யோகங்களென்னிவ

                                    ஸங்கியில்லது நில்கட்டெ ஸர்வ்வவும்

‘ மனிதர்கள் பலவிதம்; ஒவ்வொருவருக்கும் ஞானம் பெறுவதற்கான திறைமையும் ஏற்றத்தாழ்வுகளுடனுள்ளது; ஆகவே எல்லோருக்கும் புரியவேண்டுமென்பதற்காக சாத்திரங்களும் பலதாக எழுதப் பட்டுள்ளன.ஒவ்வொரு சாத்திரங்களையும் பலரும் பல விதமாக வியாக்கியானித்துள்ளார்கள்.அதுவும் எல்லோருக்கும் புரிய வேண்டும் என்பதற்காகத் தான்.
அதே போல் கர்மங்களையும் பலவிதமாக குறிப்பிட்டுள்ளார்கள். வழிகளையும் ( ‘சத் சிதானந்தனை கண்டறிவதற்கான மார்க்கங்களையும்) பலதாக சொல்லியுள்ளார்கள் நமது முன்னோர்கள்.அந்தந்த மார்க்கங்களுக்கான விதி முறைகளும் பலவிதமாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த எண்ணிலடங்கா சாத்திரங்களும் சூத்திரங்களும் இருக்கிறபடி இருக்கட்டும், நாம் கிருஷ்ண நாமம் சொல்லிப் பாடுவோம்” என்கிறார் பூந்தானம்.
நமது ஆச்சாரியர்கள்- குருக்கள்- ஒவ்வொருவரும் ஒவ்வொரு மார்க்கத்தை சிலாகித்து சாத்திரங்கள் இயற்றியுள்ளார்கள். எல்லோரும் கடைசியில் முடிவாக சொல்வது எல்லோர் உள்ளிலும் இருக்கின்ற பகவான் ஒன்று தான்; அது மட்டும் தான் நித்தியமாथ्रैனது; சத்தியமானது;  நிரந்தர சாந்தியும் சந்தோஷமும் தரக்கூடியது என்பது தான் எல்லாவற்றின் சாராம்சமும்.. அவர்கள் வேறுபடுவதெல்லாம் நாம் ஏன் அதை தெரிந்துகொள்வதில்லை, அதை எப்படி தெரிந்து கொள்ள முடியும், அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதில்த்தான். இந்த வேற்றுமைகள்  ஏனென்றால்  நம்மில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் சொன்னால்த்தான் புரியும் என்று அவர்கள் நினைப்பதால்த் தான். சைவமும் வைணவமும் சாக்தேயமும் நம்முள் இருக்கும் அந்த நித்திய சைதன்யத்தை வெவ்வேறு பெயரிட்டு அழைக்கிறார்கள். அத்வைதமும் விசிஷ்டத்வைதமும் த்வைதமும் நாம் அந்த சத்தான சைதன்யத்திலிருந்து வந்தவர்கள் தான் என்பதில் வேறுபடவில்லை; அந்த சக்தி நம்மை சிருஷ்டித்ததா, இல்லை நாம் வேறு அது வேறு என்று சில பல காரணங்களால் நினைக்கிறோமா என்று விளக்குவதில் தான் வித்தியாசம். நமது உடல்-தேகம் நாமல்ல; இது அனித்தியம், ஆத்மா நித்தியமானது அதற்கு இறப்பும் கிடையாது. பிறப்பும் கிடையாது. அத்வைதம் ஆத்மாவும் பரமாத்மாவும் ஒன்றுதான் என்று ஞானம் ஏற்படும்பொழுது நமக்கு முக்தி கிடைக்கிறது என்று கூறுகிறது என்றால் த்வைதம் நாம் நித்தியமல்ல, பரமன் மட்டும் தான் நித்தியம், நமக்கு ஞானம் ஏற்படும்பொழுது நாம பரமனின் காலடியில் சென்று சரணடைகிறோம் என்கிறது, விசிஷ்டாத்வைதமோ அப்படி ஞானமேற்படும்பொழுது அவனில் லயித்து விடுகிறோம் என்கிறது இந்த ஞானம் கிடைப்பதற்காக பல கர்மங்களையும் விதி முறைகளையும் மார்க்கங்களையும் கூறுகிறார்கள்.
பகவத் கீதையில் கிருஷ்ணபரமாத்மா இரண்டாம் அத்தியாயத்தில்45ஆம் சுலோகத்தில் கூறுகிறார்:
                                                त्रैगुण्यविषया वेटा निस्त्रैगुण्यो पवार्जुना !
                                निर्ट्न्ट्वो नित्यसतुवस्तो निर्योगक्षेम आत्मवान् !

                    த்ரைகுண்யவிஷயா வேதா நிஸ்த்ரைகுண்யோ பவார்ஜுன!

                    நிர்த்வந்த்வோ நித்யசத்வஸ்தோ நிர்யோகக்ஷேம ஆத்மவான் !

“ அர்ஜுனா, வேதங்கள் முக்குணமயமான சம்சாரத்தைப் பற்றியவை;நீ இருமைகளின்று விடுபட்டு,எப்பொழுதும் நடு நிலையில் நின்று, நல்லவை, கெட்டவை என்ற பாகுபாடு இல்லாமல்,ஆத்ம சொரூபத்தில் நிலைத்து நின்று முக்குணங்களையும் கடந்தவனாக இருக்க வேண்டும்.”
ஸத்வம் ,ரஜஸ், தமஸ் என்ற மூன்று குணங்களால் நிறைந்திருக்கிறது இந்த பிரபஞ்சம். இந்த பிரபஞ்சத்திலேயே சொர்க்கம் இருக்கிறது. அந்த சொர்க்கத்திற்கான வழி காட்டியாக வேத  நூல்கள் அமைந்துள்ளன. வேதங்களும் சாத்திரங்களும் எப்பொழுது. எக்காலத்தில், யாரால் இயற்றப்பட்டிருந்தாலும் அவை நிலையற்ற பிரபஞ்சத்தைக் குறித்தே எழுதப்பட்டிருக்கின்றன. ..இருமைகள் என்றால் நல்லது, கெட்டது, விருப்பு வெறுப்பு, பிடித்தது, பிடிக்காதது என்ற எண்ணங்கள். முக்குணங்கள் முற்றிலும் பாழ். முப்பாழுக்கும் அப்பாலுள்ள அந்த பரம் பொருள் ஒன்றே சத்யம். அதை நீ அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்; அடைய வேண்டும். அதற்கான உபாயம்  நீ இருமைகளை தியாகம் செய்ய வேண்டும் என்கிறார் கிருஷ்ணன்
அதற்கான- வழிமுறைகளை—பலவிதமான வழிகளை-பகவத் கீதையின் மற்ற அத்தியாயங்களில் விவரிக்கிறார். ஞானமார்க்கம், கர்ம மார்க்கம், பக்தி மார்க்கம் என்ற மூன்று விதமான மார்க்கங்களை அர்ஜுனனுக்கும்,  அதன் மூலம் நமக்கும், உபதேசிக்கிறார்.
பூந்தானம் சொல்கிறார் அந்த மார்க்கங்களெல்லாம் இருக்கட்டும் முடிந்தவர்கள் முயலட்டும். எல்லாவர்க்கும் இயலும் ஒரே வழி கிருஷ்ண நாம சங்கீர்த்தனம் தான். தானாக அந்த நடுவு நிலையை நாம் அடைவோம். இதைவிட எளிதான சிறந்த வழிமுறை என்ன இருக்க முடியும். ஆகவே  நாமும் கிருஷ்ண நாம சங்கீர்த்தனத்தில் ஈடுபடுவோம்.

 கிருஷ்ண கிருஷ்ணா ! முகுந்தா!ஜனார்தனா!

                                     கிருஷ்ணா! கோவிந்தா! நாராயாண ! ஹரே!

                                     அச்யுதானந்தா! கோவிந்தா! மாதவா!

                                     ஸச்சிதானந்தா ! நாராயண! ஹரே



No comments:

Post a Comment