Monday 30 November 2015

ஞானப்பானா –கிருஷ்ண கீதை 11

ஞானப்பானா –கிருஷ்ண கீதை 11

அத்தியாயம் 11 பிரம்மம்-4

 கிருஷ்ண கிருஷ்ணா ! முகுந்தா!ஜனார்தனா!

கிருஷ்ணா! கோவிந்தா! நாராயாண ! ஹரே!

அச்யுதானந்தா! கோவிந்தா! மாதவா!

ஸச்சிதானந்தா ! நாராயண! ஹரே


                               ஒன்னொன்னாயி நினைக்கும் ஜனங்கள்க்கு

                                              ஒன்னுகொண்டறிவாகுன்ன வஸ்துவுமாய்
                                                ஒன்னிலுமொரு பந்தமில்லாதெயாய்
                                                நின்னவன் தன்னெ விஸ்வம் சமச்சுபோல்

“ ஒன்றையே பலதாக காணுகின்ற பாமர ஆத்மாக்கள், எல்லா பந்தங்களையும் அற்றுப்போன பின் தெரிந்து கொள்கிறார்கள்: “இந்த பிரபஞ்சமே மித்யை; இதை படைத்தைதே தனது அவித்யை தான்; உண்மையில் இருப்பது ஒன்றே” என்று சொல்கிறார் பூந்தானம் என்று மேலோட்டமாக பார்க்கும்பொழுது தெரிகிறது. ஆனால் சற்று ஆழமாக சிந்த்தித்துப் பார்த்தால் அவர் கூறிய
ஒன்னொன்னாயி நினைக்கும்” என்ற வார்த்தைகளுக்கு ஆழமான பொருள் இருப்பது தெரிய வரும்.இந்த பக்தி கவிஞர் உபனிஷத்துக்களின் சாரத்தை இந்த இரு வார்த்தைகளில் சுட்டிக்காட்டுகிறார் என்று புரியவரும் குறிப்பாக ‘பிரஹாதரண்ய உபனிஷத்தில்” வரும் ‘அஜாதசத்ரு-கார்க்யர் சம்வாதத்தில் வரும்   விசார மார்க்கத்தை அடிக்கோடிட்டு காட்டுகிறார் ஞானப்பானாவின் ஆசிரியர் பூந்தானம்.
நாமும் இந்த சந்தர்ப்பத்தில் பிரஹதாரண்ய உபனிஷத்தில் கூறியிருப்பதை சற்றே பார்ப்போம்.
ஒரு முறை கார்க்யர் மிகுந்த அறிவுள்ளவர், பேச்சுத்திறைமையுள்ளவர், ஆனால் தன் அறிவின் மீது கர்வம் கொண்டவர் வாரணாசி மன்னர் அஜாதசத்ருவை காண வந்தார்

                                  ‘ மன்னா, நான் உனக்கு பிரம்மத்தைக் குறித்து கற்பிப்பதற்காக வந்துள்ளேன்.” என்று ஒரு நீண்ட முகவுரைக்குப்பின்  கூறினார்

மன்னனும் மிகுந்த பணிவுடன், ’ இந்த உபகாரத்திற்கு ஆயிரம் பசுக்களை பரிசாகத் தருகிறேன். ஏனென்றால் இக்காலத்தில் அறிஞர்களும் ஞானிகளும் ஜனகரின் அரண்மனைக்குத்தான் இம்மதிரி சம்வாதத்திற்கு செல்கிறார்கள்.   நீர் என்னை மதித்து வந்துள்ளீர். தங்கள் விளக்கங்களை கேட்க மிகவும் ஆவலாக உள்ளேன்.” என்றார். ( பி.உப. 2.1.1 )
அந்தக் காலத்தில் பசுக்களை பரிசாக கிடைப்பது மிகவும் பெரிதாக மதிக்கப்பட்டு வந்தது. மேலும் இந்த ஒரு சுலோகத்தின் மூலம் குறைகுடம் எப்படி கூத்தாடும் என்பதை சூசகமாக உபனிஷதாச்சாரியன் சுட்டிக்காட்டுகிறார். ஆதி சங்கரர் பாஷ்யம் எழுதுகையில் கார்க்யரின் அஹந்தைக்கு பிரம்மத்தைக் குறித்துள்ள அவரது அரைகுறை ஞானம் தான் காரணம் என்று கூறியுள்ளார்.
அஜாதசத்ரு ஜனகரை ஏன் குறிப்பிடுகிறார் என்றால் அந்த காலகட்டத்தில் மிதிலையின் மன்னனான ஜனகர் ஒரு ராஜ ரிஷியாக மதிக்கப்பட்டு வந்தார்.அவர் வேத வேதாந்தங்களில் கரைகண்டவர்.அவரோடு சம்வாதம் செய்வதை பெருமையாகக் கருதினார்கள் அக்காலத்து அறிஞர்கள்.
கார்க்யர் கூறினார்,” ஏதொரு புருஷன்  சூரியனிலும் நமது கண்களிலும் ஒரே நேரத்தில் இருந்து கொண்டிருக்கிறானோ, எவனொருவன் நமது கண்கள் வழியாக நம் தேகத்தில் புகுந்து, நமது இதயத்தில் வசித்து வருகின்றானோ,எவனொருவன்  செயலாற்றுபவனாகவும் செயலின் பலனை அனுபவிக்கின்றவனாகவும் இருக்கிறானோ அந்த பரம புருஷனை நான் பிரம்மம் என்று தியானிக்கின்றேன்.”
அஜாதசத்ரு உடனடியாக சொன்னான், “ நேதி, நேதி,( இல்லை, இல்லை).பிரம்மம் ஸ்வயம் பிரகசிக்கின்றது;அது எதிலிருந்தும் வருவதில்லை.அது எல்லாவற்றிற்கும் மேலானது. அப்படிப்பட்ட பிரம்மத்தை தியானம் செய்கிறவன் பிரபஞ்சத்திலுள்ளா எல்லா சிருஷ்டிகளுக்கும் மேலானவனாகிறான்.” (பி.உப.2.1.2)
கார்க்யர் சொன்னது முழுவதும் தவறில்லை. பிரம்மம் எல்லோருடைய உள்ளிலும் வசிக்கின்றது.ஆகவே எல்லாயிடத்திலும் இருக்கிறது.ஆனால் அது மட்டும் அதன் இயல்பல்ல.பிரம்மனை காண்பதற்கு கண்கள் வேண்டுமென்பதில்லை; சூரிய ஒளியும் தேவையில்லை.
அறிஞர் தொடர்ந்தார்:” சந்திரனிலும் நமது மனதிலும் இருப்பது பிரம்மம்.”
மன்னர் மறுத்தார், “  நேதி,நேதி இல்லை, இல்லை, பிரம்மம் எல்லையில்லாதது, சுத்த சத்தானது,அதை தியானம் செய்பவர்களுக்கு எந்த குறையும் இராது.அவர்கள் என்றும் நித்திய ஆனந்தத்தையுடையவர்களாயிருப்பார்கள்.”
பிரம்மம் நம் மனதில் உள்ளான் என்பதில் சந்தேகமில்லை.ஆனால் ஞானேந்திரியமான மனதால் அதை அறிய முடியாது.
கார்க்யர் தொடர்ந்தார்,” எவனொருவன் ஆகாயத்தில் தோன்றும் மின்னல்களிலும் நமது இதயத்திலும் ஒரே நேரத்தில் வசிக்கின்றானோ அவனே பிரம்மம்.”
அஜாதசத்ரு மறுத்தார்,” இல்லை இலை. பிரம்மன் எல்லாவற்றையும் விட சக்தி வாய்ந்தது. அதை மின்னல் போன்ற ஒரு தோற்றத்துடன் ஒப்பிடலாகாது.”
கார்க்யர்:” ஒரே நேரத்தில் ஆகாயத்திலும் நமது இதயத்திலும் இருப்பவன் பிரம்மன்”
மன்னர்: “ இல்லை, இல்லை.பிரம்மன் ஆகாயத்தில் மட்டுமல்ல, எங்கேயும் எல்லாயிடத்திலும் இருப்பவன் அவன் சர்வவியாபி.” மன்னரின் கூற்று ‘பிரம்மனுக்கு எல்லை கிடையாது; அவன் இங்கிருக்கிறான், அங்கிருக்கிறான் என்றெல்லாம் கூற முடியாது.அவன் எங்குமிருக்கிறான்’ என்பது. பிரகலாதன் கூறியது போல் அவன் தூணிலும் இருப்பான்; துரும்பிலும் இருப்பான்.
இப்படியே கார்க்யர் பிரம்மனின் ஒவ்வொரு குண நலன்களை கூற அஜாதசத்ரு அவை மட்டுமல்ல பிரம்மன் என்று கூறிக்கொண்டே வந்தான்
கடைசியில் கற்றுக் கொடுக்க வந்த கார்க்யர் தன்னுடைய அறிவு முழுமையடையாதது என்று ஒத்துக் கொண்டு நிஜமான பிரம்மனை எங்கே காண்பது என்று கேட்கிறார்.கற்றுக்கொடுக்க வந்த குரு, கற்றுக்கொள்ள ஆவலுடைய முமுக்சு-மாணாக்கனாகிறான்.
அஜாதசத்ரு எனும் அந்த ஞானி கார்க்யரை கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தார். சம்வாதம் தொடரவில்லை. கொஞ்ச தூரம் போனதும் வழியில் ஒரு மனிதன் தூங்கிக் கொண்டிருந்ததைக் கண்டார்கள்.
திடீரென்று மன்னர், அந்த உறங்கி கிடப்பவனை பார்த்து,” அறிஞரே, வெணிற ஆடை அணிந்துள்ளவரே, சோமரே, மன்னவரே, துயிலெழும்.” என்றார். அந்த மனிதர் அசையவில்லை.
மன்னர் பிறகு அவன் உடலைத் தொட்டு உலுக்கினார்.அவன் மெல்ல விழித்தான்.
மன்னர் கார்க்யரிடம் கேட்டார்,” உணர்வுள்ள இந்த மனிதன்,சாமானிய புத்திசாலியாகவும் தெரிகிறவன் உறங்கும்பொழுது எங்கேயிருந்தான்? அவன் பெயர் சொல்லி, குண நலன்களைச் சொல்லி கூப்பிட்டபொழுது எழாதவன் உடலை தொட்டவுடன் எப்படி எழுந்திருந்தான்?”
கார்க்யரிடமிருந்து பதிலேதும் வரவில்லை. மன்னரே தொடர்ந்தார்.
“உணர்வுடைய, புத்தியுடைய தன்னுடைய சுஷுப்தியில் தனது இதயத் தாமரையில் அவன் அடைக்கலம் புகுந்து விட்டான்;  அந்த நேரத்தில் அவனது மனமும் இந்திரியங்களும் அவனுடன் அடைக்கலமாகிவிட்டன. அந்த  நிலையில் அவன் எதையும் அறிவதில்லை. –ஆனால் அவன் உறங்கும்பொழுதும் கனவுகள் காணும்பொழுதும் அவன் அவனுடைய ஒரு தனி உலகிலிருக்கிறான். அவன் விழித்து இருக்கும்பொழுது பிச்சைக்காரனாக இருந்தாலும் அவன் அந்த நிலையில் மன்னராகவோ செல்வந்தனாகவோ வாழ்கிறான்.”
அஜாத சத்ரு முடிக்கிறார்,” எல்லாவற்றிற்கும் ஒரே ஆதாரம், நமது உள்ளிலிருக்கும் உண்மைகளின் உண்மை( truth of the truth) .அதுவே ஒரு சிலந்தி போல் நூலிழைகளை கசித்து, நெருப்பிலிருந்து வரும் தீப்பொறிகள் போல் இந்திரியங்கள் .பிரபஞ்சத்தில் காணும் வித விதமான பொருள்கள், ஏன் கடவுளையும் கூட சிருஷ்டிக்கின்றது. அது ஜாக்ரத்திலும் சொப்னத்திலும் சுஷுப்தியிலும் நம்முள்ளேயிருக்கிறது.அது தான் எல்லார் உள்ளிலிருக்கும் பிரமன்”
இப்படி ஒரு நீண்ட சம்வாதத்தின் மூலம் பிரமனை அடையாளம் காண்பிக்கின்றது உபனிஷத்துக்கள்.
பூந்தானமோ நாலே வரியில் இதை கூறியுள்ளார்:
                         ஒன்னொன்னாயி நினைக்கும் ஜனங்கள்க்கு
                                                ஒன்னுகொண்டறிவாகுன்ன வஸ்துவுமாய்
                                                ஒன்னிலுமொரு பந்தமில்லாதெயாய்
                                                நின்னவன் தன்னெ விஸ்வம் சமச்சுபோல்

ஒன்றொன்றாய் –இது தான் பிரம்மமோ, இது தான் பிரம்மமோ என்ற் ஆராய்ந்து கடைசியில் அது நம்முள்ளே இருக்கும் ஒரே பொருள் தான், அதுவே இந்த விசுவ பிரபஞ்சத்தை சிருஷ்டிக்கிறது.ஆனால் அதற்கு எதனுடனும் ஒரு பந்தமுமில்லாமலிருக்கிறது. என்று காண்கிறோம் இது மிகவும் சிரமமான வழிதான். ஆகவே பகவன் நாமத்தைச் சொல்லி  பாடினால் தனாக நாம் அந்த பிரமனைப் போய் அடைந்து விடுவோம் என்கிறார் பூந்தானம்
நாமும் பாடுவோம்.

கிருஷ்ண கிருஷ்ணா ! முகுந்தா!ஜனார்தனா!

கிருஷ்ணா! கோவிந்தா! நாராயாண ! ஹரே!

அச்யுதானந்தா! கோவிந்தா! மாதவா!

ஸச்சிதானந்தா ! நாராயண! ஹரே


.


                                               



No comments:

Post a Comment