Tuesday 24 November 2015

ஞானப்பானா- கிருஷ்ணகீதை-9

ஞானப்பானா- கிருஷ்ணகீதை-9

அத்தியாயம் 9 –பிரம்ம்ம் 1

கிருஷ்ண கிருஷ்ணா ! முகுந்தா!ஜனார்தனா!

கிருஷ்ணா! கோவிந்தா! நாராயாண ! ஹரே!

அச்யுதானந்தா! கோவிந்தா! மாதவா!

ஸச்சிதானந்தா ! நாராயண! ஹரே    

              
முன்னமிக்கண்ட விசுவமசேஷவும்   
ஒன்னாயுள்ளோரு ஜ்யோதிஸ்ஸ்வரூபமாய்
                                               
முன்னம்” என்றால் என்ன? பலரும் இந்த வார்த்தைக்கு பல விதமாக அர்த்தம் கூறியுள்ளார்கள்  சிலர் ‘பிரளய’ காலத்தில் என்று கூறுவார்கள்.மற்றும் பலர் நாம் பிறக்கும் முன் என்பார்கள்.ஆனால் இந்த இடத்தில் ‘ஆதியில்’ ‘எல்லாவற்றின் ஆரம்பத்தில்’ என்று கொள்வது சாலப்பொருந்தும் என்று தோன்றுகிறது. எல்லா மதங்களும் ஆராய்ச்சியாளர்களும் ஆதியில் விசுவம் எப்படியிருந்தது; அதில் என்ன இருந்தன போன்ற கேள்விகளுக்கு விடை .காண முயன்றுள்ளார்கள். இக்கண்ட விசுவமசேஷவும்” ஒரே ஜோதி ஸ்வரூப்மாயிருந்த்து என்று பூந்தானம் நம்பூதிரி இங்கே கூறுகிறார்.
எல்லா மதங்களும் ஒருவிஷயத்தில் ஒத்துப் போகின்றன: ஆரம்பத்தில் ஒன்றே ஒன்று தான் இருந்தது. இரண்டாவதாக ஒன்றும் இருந்ததில்லை என்பதில்.
                       
சாந்தோக்கிய உபனிஷத்தில் கீழ்க்கண்ட வாக்கியம் வருகிறது

ஸதேவசௌமிய இதமக்ர ஆஸீத் ஏகமேவாத்விதீயம்
குழந்தாய், நீ பார்க்கின்ற இந்த பொருள்களெல்லாம் நீ பார்ப்பதர்க்கு முன்  இரண்டென்று இல்லாத ஒரேபொருளாகத்தான் இருந்தது.
 அப்படி ‘ஒன்றல்லாத’ வேறொன்றில்லையென்றால், நாம் காணும் இந்த பிரபஞ்சம் என்னவாயிற்று? எங்கிருந்து வந்தது? ஒன்றுக்கு மேற்பட்ட பொருள்களை நாம் இந்த பிரபஞ்சத்தில் காண்கிறோமே? அதற்கான விளக்கம் தான் யாது? இதற்கு வேதாந்தங்களிலும் நமது ஆச்சாரியர்களின் வியாக்கியானங்களிலும் பல விதமான விடைகள் காணப்படுகின்றன.
சிலர்  கூறுகிறார்கள்:”நமக்கு மேலேயுள்ள ஒரு சக்தி- அதன் பெயர் கடவுள் என்று கூட சொல்ல்லாம்- இந்த பிரபஞ்சத்தை சிருஷ்டித்த்து” என்று.  ஒரு மண்பாண்ட கலைஞன் எப்படி மண்ணைக்குழைத்து சிறிதும் பெரிதும் ஆன பல உருவத்திலும் நிறத்திலுமுள்ள மண்பாண்டங்களை செய்கிறானோ அது போல் கடவுளாகப்பட்ட சக்தி இந்த பிரபஞ்சத்திலுள்ள சகல சராசரங்களையும்-அசையும்-அசையாப் பொருட்களை- சிருஷ்டிக்கிறது.
இன்னும் சிலர் அந்த சக்தியே இந்த பிரபஞ்சம் என்கிறார்கள்.அதாவது இந்த பிரபஞ்சத்திற்கான காரணம் அந்த சக்திக்கு வெளியே இல்லை; இந்த பிரபஞ்சமே அந்த சக்திக்குள் இருக்கிறது .
கௌடபதரைப்போன்ற அத்வைத ஆச்சாரியர்கள் பிரம்மமே என்றும் இருந்தது; இருக்கிறது; சிருஷ்டி என்று ஒன்று இல்லவேயில்லை என்கிறார்கள். பிறகு எப்படி நாம் காண்கின்ற பல நாம ரூப வித்தியாசங்கள்?
அது எல்லாம் மாயையினால் உண்டான பொய்த் தோற்றமே என்ற விடை வருகிறது.
ஆதி சங்கரர் கௌடபாத ஆச்சாரியரியரின் கருத்துக்களை ஒத்துக்கொண்ட போதும் கூட நாம் காண்கின்ற இந்த மாயா பிரபஞ்சத்தை முற்றிலும் ‘அசத்’ என்று தள்ளிவிட முடியாது. நாம் பிரம்ம ஞானம்’ அல்லது ‘ஆத்ம ஞானம்’ அல்லது ‘ஆத்ம போதம்’ பெறும் வரை இந்த பிரபஞ்சத்தில் கர்மங்கள் அனுஷ்டித்துக் கொண்டு தான் இருக்க வேண்டும்; அதனாலுண்டாகின்ற நல்லது கெட்டதுகளை அனுபவித்துத் தான் தீரணும் 'என்கின்றார்.
கபிலர் போன்ற ஸாங்கியா த்த்துவங்களை எடுத்துரைத்த ஆச்சாரியர்கள் பிரம்மமே பிரகிருதி; பிரகிருதியே பிரபஞ்சமாக உருபவெடுத்துள்ளது என்கிறார்கள்.
வேதாந்திகளில் பலரும் ‘மாயா’ தத்துவத்தை அங்கீகரித்தாலும் வேறு வேறு பெயரிட்டு அழைத்தார்கள்- அவித்யா, அஞ்ஞானம் ,பிரகிருதி என்றெல்லாம்..
இவ்வாறு பல விளக்கங்கள் இருந்தாலும் ஆதியில் ஒரே ஒரு பொருள் தான் இருந்தது என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடில்லை
 பிரம்மம் ஸ்வயம் பிரகாசிக்க கூடியது, பிரம்மத்திற்கு தெரியாதது ஒன்றுமில்லை; தெரிய வேண்டியதும் ஒன்றுமில்லை.
பிரம்மம் என்பதை விரிவாக விளக்குகிறது பிரம்ம சூத்திர பாஷ்யங்கள். பிரம்ம சூத்திரங்கள் வியாச முனிவரால்—இவர் பதராயன , க்ரிஷ்ண த்வைபாயனர் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார்-இயற்றப்பட்ட்து.அவை மிகவும் சுருக்கமாக கூறப்பட்டவை. ஆகவே அதன் பொருள் விளங்குவது கஷ்டமாக இருந்த்து. ( நடை முறையில் நாமெல்லாம் சொல்வோம்,’ இதென்ன பிரம்ம சூத்திரமா? எல்லோருக்கும் புரியும். அதாவது பிரம்ம சூத்திரங்கள் புரிந்து கொள்வதற்கு அவ்வளவு கஷ்டம்)ஆகவே ஆதிசங்கரர், ராமானுஜர் முதலியவர்கள் இதற்கு விளக்கவுரை எழுதியுள்ளார்கள் பிரம்மத்தின் அந்த விவரணங்களை அடுத்த மடலில் பார்க்கலாம்
அதற்கு முன் நாம் பூந்தானத்துடன் சேர்ந்து பாடுவோம்

கிருஷ்ண கிருஷ்ணா ! முகுந்தா! ஜனார்தனா!

கிருஷ்ணா! கோவிந்தா! நாராயாண ! ஹரே!

அச்யுதானந்தா! கோவிந்தா! மாதவா!

ஸச்சிதானந்தா ! நாராயண! ஹரே    



No comments:

Post a Comment