Tuesday 17 November 2015

ஞானப்பானா –கிருஷ்ணகீதை 7

ஞானப்பானா –கிருஷ்ணகீதை 7

ஆத்தியாயம் 7 சரணாகதி

 கிருஷ்ண கிருஷ்ணா ! முகுந்தா!ஜனார்தனா!

                                    கிருஷ்ணா! கோவிந்தா! நாராயாண ! ஹரே!

                                     அச்யுதானந்தா! கோவிந்தா! மாதவா!

                                         ஸச்சிதானந்தா ! நாராயண! ஹரே


                                                சுழன்னீடுன்ன ஸம்ஸாரசக்ரத்தி
                                                லுழன்னீடும் நமுக்கறுஞ்சீடுவான்
                                                அறிவுள்ள மஹத்துக்களுண்டொரு
                                                பரமார்த்தமருள்செய்திரிக்குன்னு
                                                எளுதாயிட்டு முக்தி லபிக்குவான்
                                                செவி தன்னிது கேள்ப்பினெல்லாவரும்
பொருள்
“ பிறப்பும்-இறப்புமாக சுழன்றுகொண்டேயிருக்கின்ற சம்சார சுழற்ச்சியில் சிக்கி தவிக்கிறோம் நாமெல்லாம். இந்த சுழற்சியிலிருந்து விடுபட- முக்தியடைய வழிகாட்டியுள்ளார்கள் நமது மஹான்களான ஆச்சாரியர்கள். முக்தி வேண்டுவோர் காது கொடுத்து கேட்போம் அந்த அருள் மொழிகளை.” என்கிறார் பூந்தானம் இந்த வரிகளில்.
விளக்கம் 
சம்சாரம் எனும் சாகரத்தில் விழுந்தவர்கள் எல்லாம் மித்யையால்-அறிவீனத்தால் பாதிக்கப்பட்டு ஆசாபாசங்களுக்கு ஆட்படுகிறார்கள். அந்த மாதிரி பந்தனத்தில் ஆட்பட்டு விட்டவர்கள் இன்பம்-துன்பம் இரண்டையும் மாறி மாறி அனுபவிக்க வேண்டி வருகிறது.ஆனால் எந்த அனுபவம் ஆனாலும் அது நிரந்தரமான சாந்தியையோ சமாதானத்தையோ கொடுப்பதில்லை.
                        सर्वयोनीषु कौन्तेय मूर्तय:सम्बवन्ति या:!
                              तासाम् ब्रह्म महत्योनिरहम् बीजप्रट: पिता!
                 சர்வயோனீஷு கௌந்தேய மூர்தய: ஸம்பவந்தி யா:!
                             தாஸாம் ப்ரஹ்ம மஹத்யோனிரஹம் பீஜப்ரத: பிதா !!
                                           பகவத் கீதை அத்.14 சுலோ 4
“குந்திபுத்திரா, இந்த சம்சாரத்தில் எல்லா கர்ப்பாசயங்களிலிருந்து பிறக்கின்ற வடிவங்களுக்கெல்லாம் பிரக்ருதி தான் தாய். நான் தான் பிதா” என்று கீதையில் பதினாலாம் ஆத்தியாயம் நாலாம் சுலோகத்தில் அருளும் கிருஷ்ணன் அதற்கடுத்த சுலோகத்திலேயே கூறுகிறார்:
“ அப்படி பிறக்கின்ற எல்லா உயிரினங்களிலும் பிரகிருதியிலிருந்து உண்டான சத்வம், ரஜஸ், தமஸ் என்னும் முக்குணங்களும் காணப்படுகின்றன. இந்த முக்குணங்கள் அழிவற்ற தேஹியை அதாவது ஆத்மாவை தேஹத்துடன் பிணைக்கின்றன.” அது எப்படி முடியுமென்றால், அஞ்ஞானம் எங்கெல்லாம் உண்டாகிறதோ அங்கெல்லாம் இந்த பந்தனங்களும் உண்டாகிறது.அது மாயையினால் உருவாகிறது.நீரில் தெரிகின்ற சூரியனின் பிம்பம் காற்றினால் நீரில் உண்டாகின்ற அசைவின் பொழுது அசைகிறது; ஆனால் நிஜ சூரியன் அசைவதில்லை. அது போல் ஆத்மசொரூபம் மாறுவது போல் தோன்றும்.மாயை-அவித்யை அதை ஆட்டுவிக்கும்.
                                                सत्वम् रजस्तम इति गुणा: प्रक्रुतिस्म्भवा:!
                                        निबध्नन्ति महाबाहो देहे देहिनमव्ययम्!!
                                                ஸத்வம் ரஜஸ்தம் இதி குணா: ப்ரக்ருதிஸம்பவா:!
                                                நிப்தனந்தி மஹாபாஹோ தேஹே தேஹினம்வ்யயம் !!
                                     ப்.கீ  அத் 14 சுலோ 5
இப்படி உண்டாகின்ற மாயையிலிருந்து எப்படி விடுபடுவது? கிருஷ்ணன் பகவத் கீதையில் மிக விரிவாக பல மார்க்கங்களை உபதேசிக்கிறான்..பூந்தானம் என்ன சொல்லுகிறார் “முடிந்தால் இதில் எந்த மார்க்கத்தை வேண்டுமென்றாலும் பின்பற்றுங்கள்.ஆனால் நாம சங்கீர்த்தனம் எல்லாவற்றிலும் எளிதானது; எல்லோராலும் எப்பொழுதும் செய்ய வல்லது” என்கிறார்.
இதே கருத்தை கண்ணபிரானும் கடைசியில் கீதையில் கூறுகிறார்.
ईश्वर: सर्वभूतानाम्ह्रुद्देशे अर्जुन तिष्तति!
भ्रामयन्स्र्व्वभूतानि यन्त्रादानिमाय्या !!
                          
                                                ஈசுவர ஸர்வபூதானாம் ஹ்ருத்தேசே அர்ஜுன திஷ்டதி
                                                ப்ராமயன் ஸர்வபூதானி யந்த்ராரூடானி மாய்யா !!
                                           ப.கீ அத் 18 சுளோ 61
பரமன் மனிதாத்மாக்களையெல்லாம் உடல் எனும் யந்திரத்தில் ஏற்றி வைத்து அதை ஆட்டி படைக்கிறான்; அது மட்டுமல்ல, தானும் உள்ளத்தில் குடியேறி.விடுகிறான்.கிருஷ்ண பரமாத்மா தொடர்ந்து அடுத்த சுலோகத்தில்,’ எல்லா பாங்கிலும் அவனையே சரணடை.அவனருளால் நிரந்தர சாந்தியையும் நிலையான விடுதலையும் பெறுவாய்” என்கிறார்.
                                                तमेव शरणम् गच्छ् सर्वभावेन भारत् !
                                        तत् प्रसाटात्पराम् शान्तिम् स्टानम् प्राप्स्यसि शाश्वतम् !!

                           தமேவ சரணம் கச்ச ஸர்வபாவேன பாரத !
                                                தத் ப்ரஸாதாத்பராம் சாந்திம் ஸ்தானம் ப்ராப்ஸ்யஸி !!
மேலும் கிருஷ்ணர் பகவத் கீதையின் அதே அத்தியாயத்தில் 65 ஆம் சுலோகத்தில் கூறுகிறார்:
                                      मन्मना भव मद्भ्क्तो मड्याजि माम् नमस्क्रुरु !
                 मामेवैष्यसि सत्यम् ते प्रतिजानेप्रियोसि मे !!   

                        மன்மனா பவ மத்பக்தோ மத்யாஜி மாம்   நமஸ்குரு !
                                      மாமேவைஷ்யஸி ஸத்யம் தே ப்ரதிஜானேப்ரியோ அஸி மே !!
‘என்பால் மனம் வைத்து, என்னிடம் பக்தி பூண்டு என்னை ஆராதித்திடுவாய்.என்னை வணங்கு,என்னையே அடைவாய்.உனக்கு உறுதி கூறுகிறேன். எனக்கு இனியவன் நீ”
சரணாகதி தத்துவத்தை இதை விட தெளிவாக யார் கூற முடியும்? அதைத் தான் பூந்தானமும் வலியுறுத்துகிறார். எதைப் பற்றியும் யோசியாமல் பகவன் நாமம் பாடுவோம்; தானாக நாம் அவரை சென்றடைவோம்.’ என்று.
நாமும் பூந்தானத்துடன் சேர்ந்து பாடுவோம்:

  கிருஷ்ண கிருஷ்ணா ! முகுந்தா!ஜனார்தனா!

                                       கிருஷ்ணா! கோவிந்தா! நாராயாண ! ஹரே!

                                       அச்யுதானந்தா! கோவிந்தா! மாதவா!

                                                  ஸச்சிதானந்தா ! நாராயண! ஹரே



No comments:

Post a Comment